Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களுக்கு உரித்தான இறைமைக்கு மதிப்பளித்து சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

“சமஷ்டி என்பது இந்த நாட்டின் ஒற்றுமைக்கும் பலத்துக்கும் முக்கியமான கருதுகோள் என்பதை மனதில்கொண்டு சமஷ்டி அடிப்படையில் தமிழ் மக்களின் இறைமைக்கு இடமளிக்கும் அரசியலமைப்பு தயாரிக்கும் வரலாற்று சந்தர்ப்பத்தை சகலரும் பயன்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அபிலாசையாகும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று புதன்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சமஷ்டி அடிப்படையில் தீர்வொன்றை முன்வைப்பதற்கு இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்த எதிர்ப்போர், தமிழ் மக்கள் தொடர்ந்தும் குருதி சிந்துவதையும், கண்ணீர் சிந்துவதையுமா விரும்புகிறார்கள் என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது.

சமஷ்டி என்பது நாட்டைப் பிரித்துவிடும் எனத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பயத்தை சிங்களத் தலைவர்கள் போக்க வேண்டும். பிரிக்கப்படாத இலங்கை என்பது சமஷ்டி அற்ற நாடில்லை என அர்த்தப்படாது. உலகில் சமஷ்டியை பின்பற்றும் பிரிக்கப்படாத பல நாடுகள் உள்ளன. இவற்றின் அனுபவங்களை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மறுக்கப்பட்ட உரிமைகளையும் தாமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நீதியையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை சரிவர கவனத்திற்குகொண்டு, இனப்பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வு வழங்குவதற்கு ஏற்ற வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும்.

சமஷ்டி அடிப்படையில் இணைந்த வடக்கு, கிழக்கு தமிழர்கள் இறையாண்மையுடன் வாழும் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கான சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு புதிய அரசியலமைப்பு வழிகோல வேண்டும்.

அதேநேரம், மறுக்கப்பட்ட உரிமைகளையும் தாமதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நீதியையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை சரிவர கவனத்தில் கொண்டு, இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.

போருக்குப் பின்னரான நிலைமாற்று கால நீதி நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்ட பல சர்வதேச உதாரணங்கள் உண்டு. ஆயினும், ஜனநாயக ரீதியில் உருவான ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து நிலைமாற்று கால நீதி செயற்பாடுகள் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் அதற்கான இதயசுத்தியுடன் கூடிய முன்னெடுப்புக்களை இதுவரை அவதானிக்க முடியவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் இறைமைக்கு மதிப்பளித்து சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்: சிவஞானம் சிறீதரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com