Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மியான்மாரில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற 69 வயதுடைய ஹிதின் கா என்பவர் மக்கள் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இராணுவ ஆட்சியில் சிக்கித் தவித்து வந்த மியான்மாரில் ஜனநாயக ஆட்சி அமைந்துள்ளது.

மியான்மாரின் ஜனநாயகக் கட்சியின் தலைவியும் அந்நாட்டு ஐகோனாகவும் கருதப் படும் நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி வெளிநாட்டு குடியுரிமை உள்ள ஒருவர். அதாவது அவரது கணவர் மற்றும் மகன்கள் ஆகியோர் பிரிட்டன் குடியுரிமை உள்ளவர்கள் ஆவர். மியான்மார் அரசியலமைப்பு சட்டப் படி வெளிநாட்டு குடியுரிமை உடைய ஒருவர் அந்நாட்டு அதிபராக முடியாது. எனவே தான் இந்த அதிபர் தேர்தலில் ஆங் சான் சூகி இன் நீண்ட கால நண்பர் மற்றும் உதவியாளராக செயற்பட்ட ஹிதின் கா போட்டியிட்டு வெற்றி பெற்று ஜனாதிபதி ஆகியுள்ளார். இவர் இனி ஆட்சி நடத்துகையில் எந்த ஒரு முக்கிய முடிவையும் கட்சித் தலைவியான ஆங் சான் சூகி இனைக் கலந்து ஆலோசித்தே எடுப்பார் என்றே கருதப் படுகின்றது.

மியான்மார் தலைநகர் நேபிடாவில் உள்ள பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தம் உள்ள 652 எம்பிக்களில் 360 எம்பிக்கள் ஹிதின் காவுக்கு வாக்களித்ததன் மூலம் பெரும்பான்மை பலத்தில் ஹிதின் கா வெற்றி பெற்றிருந்தார். எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி ஹிதின் கா ஜனாதிபதியாகப் பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் மியான்மாரில் உள்துறை, பாதுகாப்பு, எல்லை அமைச்சுக்கள் ஆகிய சில முக்கிய பொறுப்புக்கள் இன்னமும் இராணுவ வசமே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மியான்மாரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று அதிபர் தேர்வாகி இருப்பதை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வரவேற்று இது மியான்மாருக்கு மிக முக்கியமான தருணம் என டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

0 Responses to மியான்மாரில் ஜனநாயகம் மலர்ந்தது: மக்கள் ஜனாதிபதியாக ஹிதின் கா தேர்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com