Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன்.

இவர் தமிழாசிரியாராக இருந்து ஓய்வு பெற்றவர். ரத்த அழுத்தம், முதுகுத்தண்டுவட பிரச்னை என முதுமை நோயால் அவதிப்பட்டு வருகிறார். சென்னையில் வைத்து சிகிச்சை பெற்றால் மட்டுமே பிழைக்க முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். ' மகன் வந்தால் மட்டுமே சென்னைக்கு வருவேன்' எனப் பிடிவாதமாக ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார் குயில்தாசன்.

தந்தையின் சிகிச்சைக்கு ஒரு மாதம் பரோல் விண்ணப்பம் போட்டுக் காத்திருக்கிறார் பேரறிவாளன்.  இதுதொடர்பாக, சிறைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மகனின் வருகைக்காகக் காத்திருக்கும் குயில்தாசன், கண்ணீரோடு எழுதிய கவிதை ஒன்றை நமக்கு அனுப்பி வைத்திருந்தார்.

மகனே அறிவு....என கொஞ்சுவதற்குக் கூட வாய்ப்பற்ற நிலையில் தவிக்கும் அந்த முதியவரின் கண்ணீர் கோரிக்கை,  அதிகார சுவரை அசைத்துப் பார்க்குமா? என்பது தெரியவில்லை.

அந்த கவிதை இங்கே....

காற்றே!

உன்னை வேண்டுகிறேன்.

இன்னும் சிறிது காலம்

உடலோடு ஒத்துழைத்து

உதவ வேண்டுகிறேன்.

என் மகனை நான்

தழுவும்வரை……

என் கண்ணுக்குத் தெரியாமல்

நான் அழுகின்றேன்.

கால் நூற்றாண்டுகளாக…

இமயத்தில ஏற நான்

பயின்றபோது

இமயத்துப் புலி

டென்சிங் நார்கே

எனதொரு காலை

அவர் தோள்மீதும்

மறுகாலை

அவர் உள்ளங்கையாலும்

தாங்கிட

இமயம் ஏறிய என்

கால்களோ இன்று

வேலை நிறுத்தம்

செய்கின்றன !

மூளையோ எப்போதும்

தொடர்பு எல்லைக்கு

அப்பால்...என்று

தடைபோடுகிறது!

தடுமாறுகிறது!

ஈரல்கள் அவ்வப்போது

உன் வரவைத் தடுத்து

இரண்டகம் செய்கின்றன!

அச்சம் ஊட்டுகின்றன!  

சில பற்களோ பாவம்

எழுபத்து நான்கு ஆண்டுகள்

எனக்காக உழைத்து

இறுதியாகப் பிரிந்தே விட்டன.!

உணவுப் பாதையோ

குண்டும் குழியுமாக உள்ள

சிற்றூர் பாதையாக…..!

என் இறுதி காலத்தில்

எனக்குத் துணையாக

இருக்க வேண்டிய

என் மனைவியோ

அவளின் இறுதிக் காலத்தில்

தன்னையும் மறந்து

என்னையும் மறந்து

தனித்து விட்டுவிட்டு

இன்னும் எங்கள்

மகனைத் தேடி அலைந்துகொண்டு

இருபத்தைந்து ஆண்டுகளாய்……!

ஊழிக்காற்றே! நான்

எதைத்தான் தாங்கிக்கொள்வது?

எப்படி?எத்தனைக் காலம்?

இதற்காக நான்

என்னை அழித்துக் கொள்ள

நேர்ந்தாலும் அது

எம் இனத்திற்குப் பயன்படுவதாக

அமையுமே யன்றி

வீணாக இல்லை

பங்களிப்பு ஏதுமில்லாப்

பயனற்ற வாழ்வை

நானும் விரும்பவில்லைதான்.

எனவே என்னைவிட்டு

நீ விடுதலை பெற எண்ணுவது

சரியானதுதான்.

ஆனால் சற்றே பொறு

நான் பொறுத்திருப்பதுபோல.

நீதியை

அடைகாத்துவரும் சூது

உண்மையைப் பொறுத்து

வானில் விடுதலையைப்

இதுநாள்வரை நான்

இப்புவியில் இருக்க உதவிய

உனக்கும்

எங்களுக்காகப்

பேச்சாலும் செயலாலும்

மனிதத்தை வெளிப்படுத்திய

மனிதா; அனைவருக்கும்

என் நன்றியைப் படைக்கின்றேன்.

அன்புடன் குயில்தாசன்

0 Responses to காற்றே காத்திரு…. !' - பேரறிவாளன் தந்தையின் கண்ணீர்க் கவிதை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com