Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபை முன்மொழிந்துள்ள அரசியலமைப்பு யோசனைகள் மற்றும் தீர்வுத் திட்ட யோசனைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோரிடம் நேரில் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வரைபை எதிர்வரும் 30ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கையளிக்கவுள்ளார்.

மறுநாள் முதலாம் திகதி யாழ்.மருதனார்மடத்தில் நடைபெறவுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதான மே தின நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாணசபையின் அரசியல் தீர்வுத் திட்ட வரைபு தொடர்பிலும், தீர்வு குறித்து கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பிலும் தமது கருத்துக்களை வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோரிடமும் வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்ட இறுதி வரைபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேரில் கையளிக்கத் தீர்மானித்துள்ளார்.

இலங்கையின் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு வடக்கு மாகாண சபையினால் தீர்வுத் திட்டம் தயாரித்து வழங்குவது என்று, கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதற்காக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் 19 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த உறுப்பினர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து தீர்வுத் திட்ட வரைபுகளைத் தயாரித்திருந்தனர்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்ட வரைபு இந்த மாதம் 7ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. வரைபை இறுதி செய்வதற்கான விசேட கூட்டம் கடந்த 12ஆம் திகதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் 12 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் தீர்வுத் திட்ட வரைபு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்லையில், நேற்றுமுன்தினம் தீர்வுத் திட்ட இறுதி வரைபு முதலமைச்சரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் சபை உறுப்பினர்களால் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டபோது அவற்றில் பல திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதியில் தீர்வு வரைபு சபையினால் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வு யோசனைகள் ரணில், இரா.சம்பந்தன், கரு ஜெயசூரியரிடம் கையளிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com