Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களை இராணுவ கெடுபிடிக்குள் தொடர்ந்தும் வைத்துக் கொள்ளவே அரசாங்கம் விரும்புகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டமையை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, "கடந்த 16ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பரவிப்பாஞ்சான் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களுடைய காணிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்.

சம்பந்தன் சென்று பார்வையிட்டதற்காக என்னுடைய மெய்ப்பாதுகாவலர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்ட இராணுவத்தினர் அவரை கொழும்புக்கு அழைத்து இருக்கின்றார்கள். இதுவொரு அபாயகரமான சூழலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

ஒரு நாட்டினுடைய எதிர்க்கட்சித் தலைவர் பாதிக்கப்பட்ட மக்கள், சொந்த இடங்களில் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என நேரடியாகச் சென்று பார்த்ததற்காக என்னுடைய மெய்ப்பாதுகாவலர் அழைக்கப்பட்டிருக்கின்றார். ஆகவே, இங்கு கட்சிகள் மாறியிருக்கின்றனவே தவிர, காட்சிகள் மாறவில்லை.

நல்லாட்சி அரசின் வெற்றிக்காக - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக தங்களுடைய வாக்குகளை தமிழ் மக்கள் அள்ளி வழங்கினார்கள். தங்களுடைய சொந்த இடங்களுக்குச் செல்ல முடியும், தமது பிள்ளைகள் விடுதலை செய்யப்படுவார்கள், இந்த நாட்டில் சம அந்தஸ்துடைய பிரஜைகளாக வாழ முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தங்களுடைய வாக்குகளை தமிழ் மக்கள் வழங்கினார்கள். ஆனால், இலங்கை அரசினுடைய புலனாய்வுத்துறையும் இராணுவமும் பொலிஸும் தம்முடைய கட்டமைப்புக்குள் தொடர்ந்தும் தமிழ் மக்களை வைப்பதற்கு கவனம் செலுத்துகின்றார்கள்.

தமிழர்களைத் தொடர்ந்து அச்சுறுத்துகின்ற சூழலில், தமிழர்களுடைய நிலங்களுக்கு அவர்களைப் போகவிடாது தடுப்பதில் - தொடர்ந்தும் அகதிகளாக வைத்திருப்பதில் - சிறைகளில் வைத்திருப்பதில் இந்த மைத்திரி அரசு முனைகின்றது.

வெறுமனே சிங்கள மக்கள் இனவாதம் பேசுகின்றார்கள் அல்லது சிங்கள மக்கள் கிளர்ந்தெழுகின்றார்கள் என்பது போல சாட்டுக்களை சொல்லிக்கொண்டு காலம் கடத்துகின்றார்கள். இதுவொரு அபாயகரமான சூழல். தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதுதான் உண்மையான விடயம்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களை இராணுவ கெடுபிடிக்குள் வைத்துக்கொள்ளவே அரசு விரும்புகின்றது: சிறீதரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com