Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபையினை கலைத்துவிட்டு, அதன் நிர்வாகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் தீர்வுத் திட்ட யோசனைகள் தொடர்பில் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண சபையினால் புதுமையானதொரு தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை ஒன்றிணைத்து, அவர்களுக்கென்ற சமஷ்டியாட்சி முறையொன்றை வழங்குமாறு அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமஷ்டி என்பது, அதிகாரப் பகிர்வல்ல. சுயாதீனமாக இயங்கும் அரசாங்கங்களை ஒன்றிணைத்துக் கட்டும் முறையாகும். ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்த சமஷ்டி முறையைக் கொண்டுவரக் காரணம், சுயாதீனமான அரசாங்கங்களை ஒன்றாகக் கட்டிவைப்பதற்காகும்.

ஒற்றையாட்சி நிலவும் நாடொன்றில் சமஷ்டி முறைமை கொண்டு வரப்படுமேயானால் என்ன நிகழும் என்பதற்குச் சிறந்த உதாரணம், செக்கோஸ்லோவாக்கியா நாடாகும். ஒற்றையாட்சி நிலவிய அந்த நாடு, 1969இல் சமஷ்டி முறைக்குள் கொண்டுசெல்லப்பட்டது. இதன் பிரதிபலனாகவே, 1991இல் செக் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இரு நாடுகள் உருவாகக் காரணமானது.

தமிழீழத்துக்கான பயணத்தின் முதற்படியே இந்த சமஷ்டி முறைக்கான கோரிக்கையாகும். அன்று பிரபாகரனால், துப்பாக்கி மற்றும் குண்டுகளால் செய்துகொள்ள முடியாமல் போனதை, இன்று அரசியல் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நிறைவேற்றிக்கொள்ள இரா.சம்பந்தன் முயற்சி செய்து வருகின்றார்.

வடக்கு மாகாண சபை, பிரிந்துசெல்ல முயற்சிக்கின்றது என்பதற்கான சிறந்த உதாரணமே, மேற்படி யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமையாகும். இவ்வாறான பயங்கரமானதொரு யோசனை நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், இது தொடர்பில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ, இதுவரையில் வாய் திறக்கவில்லை.

இந்த அரசாங்கத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி முட்டியிட வைக்க முடியும் என்பதை இரா.சம்பந்தனும், சி.வி.விக்னேஸ்வரனும் நன்றாக அறிந்துவைத்துள்ளனர். அதனாலேயே, அவர்கள் தைரியமான இவ்வாறானதொரு யோசனையை நிறைவேற்றியுள்ளனர்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண சபையை கலைக்க வேண்டும்: உதய கம்மன்பில

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com