Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர் வெற்றி ஒரு புறம் மகிழ்வாக இருந்தாலும், நல்லிணக்கம் என்பது சிமெந்து - கல் - இரும்பு கொண்டு கட்டியெழுப்பப்படக் கூடியதல்ல. அது இரு இதயங்களின் இணைப்பில் - பிணைப்பிலேயே உருவாகக் கூடியது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற மைதானத்தில் நேற்று புதன்கிழமை மாலை போரில் உயிரிழந்த படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, "ஒரு அரசின் ஸ்திரத் தன்மையில் இராணுவப் பங்களிப்பு முக்கியமானது. இதனை ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. எமது நாட்டில் போர் முடிந்த பின்னர் செய்யப்பட வேண்டிய விடயங்கள் கடந்த காலங்களில் செய்யப்படவில்லை. அதற்குப் பின்னர் செய்ய வேண்டிய விடயங்களை இப்போது எமது அரசு செய்யத் தொடங்கியிருக்கின்றது.

நாட்டில் மீண்டும் போர் ஏற்படாத வகையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். போர் நடைபெற்ற நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது என்பது கடினமான பணி. அதனை எமது அரசு செய்கின்றது. துப்பாக்கி வேட்டுக்கள் மௌனித்த பின்னர் சமாதான முழக்கத்தை ஏற்படுத்துவது சவால் மிக்கதாகும். சர்வதேச ஒத்துழைப்புடன் நாம் இதனைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

எமது நாட்டில் 20 ஆம் நூற்றாண்டிலிருந்தே இன முரண்பாடு இருந்து வருகின்றது. நாம் நிலையான நல்லிணக்கத்தை தேடிய பயணத்திலேயே இருக்கின்றோம். அவ்வாறு நிலையான நல்லிணக்கம் ஏற்பட்ட பின்னர்தான் நாம் ஆத்ம திருப்தியடைய முடியும்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், எமது அரசு இராணுவத்தை வேட்டையாடுவதாக சுவரொட்டி ஒட்டினார்கள். ஆனால், அவர்களது ஆட்சிக் காலத்தில், போரை வெற்றி கொண்ட இராணுவத் தளபதியை பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி சிறைச்சாலைக்குள் அனுப்பி, சிறை உடையில் அழகு பார்த்தார்கள். எந்த எதிர்ப்புக்கள் வந்தாலும், எமது அரசு மீது எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நல்லிணக்கத்தை நோக்கிய எமது பயணம் தொடரும்.” என்றுள்ளார்.

0 Responses to நல்லிணக்கத்தை இதயங்களின் இணைப்பினாலேயே உருவாக்க முடியும்: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com