Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நம்பிக்கையோடு வெற்றியடையச் செய்த மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் பாவத்தைப் புரிந்து விட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“நம்பிக்கை கொண்டு எம்மை வெற்றியடையச் செய்த மக்களுக்கு, வரிச் சுமையைக் கொடுத்து அவர்களின் சாபத்துக்கு ஆளாகிவிட்டோம். நல்லாட்சி அரசாங்கம், மக்களுக்கு பாவத்தைப் புரிந்துவிட்டது. அந்த பாவமே, இப்போது இயற்கையின் சீற்றமாக வந்து, எம்மக்களைத் துரத்துகிறது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற, வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை, எமது அரசாங்கம் பழிவாங்குவதாக கூறிக்கொண்டு திரிகிறார்கள், இவர்கள் கடந்த காலங்களில் செய்துவிட்டுச் சென்ற செயற்பாடுகளால், நாட்டு மக்களே உண்மையில் பழிவாங்கப்படுகிறார்கள்.

மாற்றம் ஒன்றை எதிர்ப்பார்த்து, எம்மீது நம்பிக்கை வைத்து, தேர்தல்களில் எம்மை வெற்றியடையச் செய்த மக்களுக்கு, இவ்வாறான சுமையைக் கொடுப்பது, மிகவும் கவலையாக உள்ளது. இருப்பினும், கடந்த அரசாங்கத்தின் சுமைகளை நாட்டிலிருந்து இறக்கிவைக்க வேண்டுமெனில், சில கஷ்டங்களை நாம் அனுபவித்து ஆகவேண்டும் என்பதாலேயே, சிறிதுகூட விருப்பமின்றி வற்-இனை நாம், தற்காலிகமாக அதிகரித்துள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பாவத்தைப் புரிந்துவிட்டது: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com