Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கிலுள்ள மக்கள் சமஷ்டி அதிகாரப்பரவலாக்கத்தைக் கோருவதற்கு உரிமையில்லை என்று கூறுவதற்கு தெற்கிலுள்ள யாருக்கும் உரிமையில்லை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சரமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலை இயக்கதின் (ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினத்தின் 30வது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மனோ கணேசன் கூறியுள்ளதாவது, “கடந்த காலத்தினைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் எமது எதிர்காலம் பற்றியும் சிந்தித்து பேச வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம்.

வடக்கு மாகாண சபையின் சமஷ்டி குறித்த தீர்மானத்திற்கு எதிராக தெற்கில் பல கோசங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும், காலியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண சபையினால் சமஷ்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதென்றால், ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் என்றால், அவர் சமஷ்டி முறையினை ஏற்றுக்கொண்டிருக்கின்றார் என்று அல்ல. சமஷ்டி முறையிலான கோரிக்கையினை முன்வைப்பதற்கு வடக்கு மாகாண சபைக்கு முழு உரிமை இருக்கின்றது. தெற்கில் இருந்து ஒற்றையாட்சி வேணுமென்று கேட்கின்றார்களாயின், சமஷ்டி தேவை என கோரிக்கை விடும் உரிமை வடக்கு- கிழக்கு மக்களுக்கு இருக்கின்றது.

தெற்கில் உள்ள சில முட்டாள் இனவாதிகள், ஒற்றையாட்சியை வலியுறுத்துவதனால், வடக்கில் சமஷ்டியை வலியுறுத்தி நாட்டில் பிளவினை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டுகின்றார்கள். அரசியல் அமைப்பு மக்களினால் உருவாக்கப்படுவது, அரசியல் அமைப்பு மாற்றப்பட முடியாததல்ல. மாற்றப்படக்கூடியது. சமஷ்டி கோருவதற்கு வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு உரிமை இல்லை எனக் கூறுவதற்கு தெற்கில் உள்ள கொம்பன் எவனுக்கும் உரிமை இல்லை.

வடக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கான எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது. மேல் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் முழுமையாக கீழ் மட்டத்திற்கு செல்லவில்லை என்பதனை ஏற்றுக்கொள்கின்றேன். அந்தவகையில், அரசாங்கத்தின் கொள்கைகள் சென்றடையாத காரணத்தினால், இராணுவம் மற்றும் பொலிஸ், உட்பட அரச அதிகாரிகள் சிலர் தான்தோன்றித் தனமாக செயற்படுகின்றார்கள்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் இவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுங்கள். காணி சுவீகரிப்புக்கு எதிராக தேசிய அளவில் போராட்டங்களை செய்யாது, சர்வதேச ரீதியில் போராட்டங்களை முன்னெடுங்கள்.

இவ்வாறு ஐனநாயக போராட்டங்களின் மூலம் தான், அடிமட்ட அதிகார வர்க்கத்தினரை தண்டிக்க முடியும். மக்கள் எந்த மாற்றத்தினையும் பெறவில்லை. அரசாங்கம் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றார்கள் என்றால், ஒரு நிமிடமும் இந்த அரசாங்கத்திற்குள் இருக்க மாட்டேன்.

இன்று ஆயுதப் பேராட்டம் முடிவடைந்த விட்டது. ஐனநாயக போராட்டம், சாத்வீக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. சுமஷ்டியை பெறுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், வடக்கு மாகாண சபையும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கில் சமஷ்டியைக் கோரக்கூடாது என்று கூற தெற்கிலுள்ள யாருக்கும் உரிமையில்லை: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com