Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்துக்கு என 200 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பொருளாதார மையத்தினை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல யாராவது முயற்சித்தால், அதனை அனுமதிக்க மாட்டோம் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாணத்துக்கு என ஒதுக்கப்பட்ட இருநூறு கோடி ரூபா பெறுமதிமிக்க பொருளாதார மையம், வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட முயற்சி எடுக்கப்படுமானால், அதை தமிழ் முற்போக்குக் கூட்டணி கடுமையாக எதிர்க்கும்.

அமைச்சரவையில் எல்லா அமைச்சுகள் தொடர்பாகவும் அனைத்து அமைச்சர்களுக்கும் கூட்டு பொறுப்பு இருக்கின்றது. இடம் பற்றிய இறுதி முடிவு எடுக்கப்பட முன் ஏன் இது தொடர்பில் அமைச்சவை பத்திரம் கொண்டு வந்தீர்கள் என நான் துறைசார் அமைச்சர் பி. ஹரிசனிடம் கேட்டேன்.

இந்த பிரச்சினை கிளறப்பட்டு ஒரு தீர்வை நோக்கி நகரவேண்டும் என்பதற்காகவே, கடந்த அமைச்சரவையில் தான் இது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் கொண்டு வந்ததாகவும், இந்த வேளையில் இந்த அமைச்சரவை பத்திரத்தை ஏன் கொண்டு வந்தீர்கள் என பிரதமரும் தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும், அமைச்சர் பி. ஹரிசன் என்னிடம் கூறியுள்ளார்.

எனவே, வடக்கு மாகாணத்து உழைப்பாளர்களின் நலன் கருதி உருவாக்கப்பட உள்ள இந்த பொருளாதார மையத்தை, வேறு இடங்களுக்கு எவரும் காவிக்கொண்டு செல்லும் முயற்சி அமைச்சரவையில் எடுக்கப்படுமானால் அதை நானும், அமைச்சர் திகாம்பரமும் அமைச்சரவையில் அனுமதிக்க மாட்டோம்.

வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதை வடக்கு மாகாணத்து மக்கள் பிரதிநிதிகள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், வடக்கு மாகாணத்து மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லாததுதான் இப்போது பிரச்சினையாக இருக்கின்றது. இத்தகைய ஒரு சூழலைத்தான் வெளியில் இருப்போர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இப்போது இந்த நிதியாண்டின் ஆறாவது மாதம் நடக்கின்றது. எனவே இனியும் இதை தாமதிப்பது உசிதமானது அல்ல. வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதில் வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். அதை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிந்துக்கொள்ள அரசாங்கம் காத்து கொண்டு இருக்கிறது.

வடக்கில் இந்த பொருளாதார மையம் விரைவில் உருவாக வேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். கொடிய யுத்தத்தின் மூலம் சொல்லொணா துன்பங்களை சந்தித்த வடக்கு மாகாண விவசாய உடன்பிறப்புகள், மீண்டும் வளம்பெற, தம் விளைபயிர்களை தேசியரீதியாக விற்பனை செய்ய, உழவர் சந்தையாக கருதப்படக்கூடிய, இந்த பொருளாதார மையம் பெரும் உதவியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மையம் வேறு இடங்களுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம்: மனோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com