Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

துபாயில் சிக்குண்டு இருக்கும் 15 தமிழர்களை மீட்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். –சீமான் வலியுறுத்தல்

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

குடும்பப்பாரத்தைச் சுமக்கவும், வறுமையின் கோரப்பிடியிலிருந்து தங்களை மீட்கவும் ஆயிரம் கனவுகளோடு அந்நிய தேசங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற தமிழக இளைஞர்கள் அங்குக் கொத்தடிமை போல நடத்தப்படுகிற செய்திகள் அந்நியத் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் குறித்து அச்சத்தைத் தருகிறது.

துபாய், அபுதாபியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 15 இளைஞர்கள் அங்குச் சிக்குண்டு தாங்கொணாத் துன்பதுயரங்களுக்கு ஆளாகியுள்ள செய்தி மிகுந்த மனவேதனையையும், கவலையையும் அளிக்கிறது. இரண்டாண்டு ஒப்பந்த அடிப்படையில் சென்ற அவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனமானது கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதலிலிருந்து ஊதியத்தை வழங்காது இழுத்தடித்து வந்திருக்கிறது. எத்தனையோ முறை கேட்டும் அதற்கு உரிய பதில் அளிக்காது காலத்தைக் கடத்தி வந்திருகிறது.

மேலும், கடந்த சனவரி மாதத்தோடு அவர்கள் 15 பேருக்கும் ஒப்பந்தக்காலமும், விசா தேதியும் முடிந்துவிட்டது. ஆனால், அவர்கள் பணிபுரியும் நிறுவனமோ நாட்டுக்கும் திருப்பி அனுப்பாது, ஊதியத்தையும் வழங்காது கொத்தடிமைகள் போல அவர்களை வைத்து வேலை வாங்கி வந்திருக்கிறது. இதற்கு அந்நாட்டு நீதிமன்றங்கள் வாயிலாகத் தீர்வுகாண பலமுறை முயற்சித்தும் எந்தப்பயனும் கிட்டவில்லை. இதனால், அவர்களது அத்திவாசியத் தேவைகளுக்குக்கூடப் பணமில்லாது சிரமப்பட்டு நாட்களை நகர்த்தி வந்திருக்கிறார்கள். அவர்களையே நம்பியே வாழ்ந்து வந்த தமிழகத்திலுள்ள அவர்களது குடும்பங்களும் அன்றாட உணவுத்தேவைக்கும், அத்தியாவசியச் செலவுகளுக்கும் வழியில்லாது பல மாதங்களாக அல்லாடி வருகிறது.

எனவே, இவ்விவகாரத்தில் தமிழக அரசானது உடனடியாகத் தலையிட்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வாயிலாக அந்த 15 தமிழர்களையும் மீட்பதற்கான நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும். மேலும், அவர்களுக்கு வர வேண்டிய ஊதியத்தொகையையும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதுமட்டுமல்லாது, வெளிநாட்டில் புலம்பெயர்ந்து பணிபுரியும் தமிழர்களுக்கு எனத் தனி அமைச்சகம் அமைத்து அவர்களது நலன்காத்திட வழிவகைச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to துபாயில் சிக்குண்டு இருக்கும் 15 தமிழர்களை மீட்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். –சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com