Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால், அது தவறில்லை என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

போரின் போது இலங்கை இராணுவத்தினர் கொத்துக் குண்டுகளை பயன்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டிருந்தால், இராணுவத் தேவையின் படி அதற்கான அவசியம் ஏற்பட்டிருந்தால், அந்த நேரத்தில் அது சட்டவிரோதமானதல்ல என்பதை தான் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இறுதி மோதல்கள் காலத்தில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்துவதற்கான தடை இருக்கவில்லை என்பதை தமது ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளதாகவும், 2010ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதியே இந்த தடை உலகில் செயற்பாட்டுக்கு வந்தது என்றும் மக்ஸ்வெல் பரணகம கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள வாய்மூல அறிக்கையில் 33வது பந்தியானது யுத்தத்தின் இறுதி சமயத்தில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பில் சுயாதீனமான பக்கச்சார்ப்பற்ற விசாரணை நடத்தப்படவேண்டுமென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக்குற்றச்சாட்டுக்களில் எவ்விதமான புதிய தன்மையும் இல்லை என்று இங்கு கூறவேண்டும். எமது காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட இரண்டாவது ஆணையின் பிரகாரம் நாம் மேற்கொண்ட விசாரணையில் இலங்கை இராணுவம் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியமைக்கான எவ்விதமான நம்பகரமான ஆதாரங்களும் இல்லை என்பதை கண்டுபிடித்தது.

தருஷ்மன் அறிக்கையிலும் இவ்வாறு கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கான மூலங்கள் முன்வைக்கப்படவில்லை.

யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் முடிவடைந்த பின்னர் ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சிப் பிரிவின் உறுப்பினர் ஒருவர் கசியவிட்ட மின்னஞ்சலின் பிரகாரம் மோதல் வலையத்தில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுள்ளது.

ஆனால், இலங்கை இராணுவம் அந்தக்குற்றச்சாட்டை மறுத்ததுடன் அந்த மறுப்பானது அந்தநேரம் ஐக்கிய நாடுகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை எமது ஆணைக்குழு அவதானித்திருந்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணயைாளரின் அறிக்கையை யாராவது வாசிக்கும்போது கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவதானது யுத்தக்குற்றம் என்று நினைக்கலாம்.

ஆனால் காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவராக ஒரு விடயத்தை சுட்டிக்காட்டுகின்றேன். அதாவது கொத்துக் குண்டுகள் ஆயுத சாசனத்தின் பிரகாரம் இந்த ஆயுதப் பயன்பாடு இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது உலகில் தடைசெய்யப்பட்டிருக்கவில்லை. மாறாக 2010ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதியே இந்த தடை உலகில் செயற்பாட்டுக்கு வந்தது.

எனவே யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தினர் கொத்துக் குண்டுகளை பயன்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டிருந்தால், இராணுவத் தேவையின் படி அதற்கான அவசியம் ஏற்பட்டிருந்தால் அந்த நேரத்தில் அது சட்டவிரோதமானதல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

ஜெனீவா செயற்பாட்டில் கொத்துக் குண்டுகள் விவகாரம் பாரிய பிரசித்தத்தைப் பெற்றுள்ளது. ஆனால், இலங்கையில் யுத்தம் முடிவடைந்தபோது கொத்துக் குண்டு பயன்பாட்டுத்தடை அமுலில் இருக்கவில்லையென்பது பரணகம ஆணைக்குழுவின் இரண்டாவது ஆணையின் பிரகாரம் வெளிப்படுத்தியுள்ளோம் என்பதை வலியுறுத்துகிறோம்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால், அது தவறில்லை: மக்ஸ்வெல் பரணகம

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com