Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமற்போன 41 ஊடகவியலாளர்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் வடக்கு ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன், கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட நடேசன் மற்றும் கொழும்பில் படுகொலையான தராக்கி சிவராம் ஆகியோருடைய விசாரணைகளையாவது முதலில் ஆரம்பித்து, மற்றைய கொலைகள், காணாமற்போதல்கள் தொடர்பிலான விசாரணைக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டிக்கொண்டுள்ளனர்.

வடக்கு- தெற்கு ஊடகவியலாளர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு பகுதியிலுள்ள ஊடகவியலாளர்கள் குழுவொன்று தென்பகுதிக்கு நேற்று வியாழக்கிழமை வந்துள்ளது. இந்தக் குழுவினர் நேற்றையதினம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவித்தாரன ஆகியோரை சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது வடக்கு ஊடகவியலாளர்கள் சார்பில் உரையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் தயாபரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக பணியாற்றுவதற்கு அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் சூழலுக்கும், தகவலறியும் சட்டத்தை நிறைவேற்றியமைக்கும் அவர் அரசாங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு தொழில் ரீதியான பாதுகாப்பையும் உறுதிப்பாட்டையும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதுடன், ஆட்சி மாற்றத்தின் பின்னர் ப்ரெடி கமகே மீதான தாக்குதல் உள்ளிட்ட ஐந்தாறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எதிர்காலத்தில் இவை மேலெழும்பாதவாறு கட்டுப்படுத்துமாறும் வடக்கு ஊடகவியலாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

வடக்கு ஊடகவியலாளர்களின் கோரிக்கை அடங்கிய கடிதமொன்று ஊடகவியலாளர் தயாபரனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

0 Responses to ஊடகவியலாளர் படுகொலைகள் தொடர்பில் நீதி விசாரணை வேண்டும்; மைத்திரி, ரணிலிடம் வடக்கு ஊடகவியலாளர்கள் கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com