Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சி அரசாங்கத்தினை கவிழ்த்து மீண்டும் ஆட்சியில் அமரலாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காணும் கனவு என்றைக்குமே பலிக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் கனவுக்கு தென்னிலங்கை மக்கள் பலம் சேர்க்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 28ஆம் திகதி கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பேரணி செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற புரட்சியுடன் துரத்தி அடிக்கப்பட்ட பின், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி பதவிக்கு வர பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார் என்பது உலகறிந்த விடயம். இந்த முயற்சியின் ஒரு அங்கமே மஹிந்தவும் அவரது அணியினரும் எதிர்வரும் 28ஆம் திகதி பேரணி செல்லும் மேற்கொள்ளும் முயற்சியாகும்.

தற்பொழுது அவர் என்ன கூறுகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு சிங்கள மக்கள் வாக்களிக்கவில்லை. ஈழ மக்கள் வாக்களித்ததன் காரணமாகவே அவர் வெற்றி பெற்றார். அவ்வாறு இல்லையாயின், அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கின்றார். இது அவரின் ஆற்றாமையையே எடுத்துக் காட்டுகிறது.

மஹிந்த இந்த அரசை வீழ்ச்சியடைய செய்வதற்காக பல முயற்சிகளையும் கைங்கரியங்களையும் செய்துகொண்டுதான் இருக்கின்றார். அது எதுவுமே பலனளிப்பதாகவில்லை. காரணம் சிங்கள மக்கள் இவரின் எதிர்ப்பிரசாரத்துக்கு பலிபோகவில்லையென்பதே உண்மை. எனவேதான் மஹிந்த மேற்கொள்ளும் பாதயாத்திரை முயற்சியும் தோல்வியிலேயே முடியும். இதில் அவர் எதையுமே சாதிக்க முடியாத நிலையே ஏற்படும்.

அரசியல் சாசன ஆக்க முயற்சிகள் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மஹிந்தவின் பாதயாத்திரை எதிர்ப்பு நிலைகளால் அரசியல் சாசன முன்னெடுப்புகளுக்கு பங்கம் ஏற்படுமென்று கூறிவிடமுடியாது. புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையென்பது பொதுவான நியதி. அவ்விடயத்தில் பாராளுமன்றிலும் இலங்கை மக்களிடமும் பூரண ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் பேரிலேயே அரசாங்கத்தின் அரசியல் சாசன முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் சந்தேகப்பட வேண்டிய விடயம் ஏதுமில்லை.

ஆனால் இம்முயற்சிகளை குழப்புவதற்கு தன்னாலான முழு முயற்சிகளையும் மஹிந்த மேற்கொள்வாரென்பது நாம் அறிந்து கொள்ளக்கூடிய உண்மைதான். அதற்காக நாம் பயந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லையென்றே எண்ணுகின்றேன்.

புதிய அரசியல் சாசன நிறைவேற்றம் அரசு மற்றும் எமது கணிப்பின்படி எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றுக்கு வருவதற்கு முன் புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் தான் அரசியல் சாசன ஆக்கப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கு எந்த தடையீடுகள் வந்தாலும் அதற்கு முகங்கொடுத்து அரசு முன்னெடுத்துச் செல்லுமென்றே நம்புகின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்தவின் கனவு பலிக்காது; அரசாங்கம் கவிழாது: சுமந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com