Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தினை அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சியானது உள்நாட்டு தேவைகளுக்காக அன்றி, அது வெளிநாடுகளின் தேவைகளுக்கானதே என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் இணைப்புச் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பில் எழும் எதிர்ப்புக்களை சமாளிக்கும் நோக்கில் மேலோட்டமாக கொண்டு வரப்படும் திருத்தங்களினால் பயனில்லை. இதனால் இந்த சட்டத்தின் ஆபத்து எந்த வகையிலும் நீங்கப் போவதில்லை. இந்த சட்டத்தின் உள்ளடக்கத்தை நன்கு அவதானித்தால் அதன் ஆபத்தை புரிந்து கொள்ள முடியும்.

இந்தக் காரியாலயம் உள்நாட்டு முயற்சியாக கருதப்பட முடியாது, சர்வதேசத்தின் தேவைக்காகவே உருவாக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு அமையவே உருவாக்கப்படுகின்றது. சட்டத்தின் 27ஆம் சரத்தில் நேரடியாகவே வடக்கு கிழக்கு காணாமற்போதல்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

நபர்கள் காணாமற்போகச் செய்யப்பட்டோ அல்லது கொலை செய்யப்பட்டோ இருந்தால் அது பற்றி விசாரணை நடத்துவதனை நாம் எதிர்க்கவில்லை. அனைத்து மனித உயிர்களுக்கும் ஒரே பெறுமதியே காணப்படுகின்றது. நாட்டின் ஒரு பகுதி மனித உயிருக்கு கூடுதல் பெறுமதி இருக்கின்றது என்ற நிலைப்பாட்டை நாம் ஏற்கவில்லை.

27ஆம் சரத்தில் வடக்கு கிழக்கில் காணாமற்போதல் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன் வடக்கு கிழக்கு காணாமற்போதல்கள் பற்றி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காரியாலயத்திற்கு வெளிநாட்டு நிதி பெற்றுக்கொள்ளப்படுவதனை நாம் எதிர்க்கின்றோம். இந்த சட்டமானது உண்மையைக் கண்டறியும் நோக்கில் உருவாக்கப்படவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to காணாமற்போனோர் அலுவலகம் சர்வதேசத்தின் தேவைக்காகவே அமைக்கப்படுகிறது: ஜீ.எல்.பீரிஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com