Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருடர்களைக் கைது செய்வதாகக் கூறிக்கொண்டு அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதாக கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

“திருடர்களைக் கைது செய்வதை நிறுத்தக் கோரியே நாம் பேரணி மேற்கொண்டதாக கூறுகின்றனர். திருடர்களைக் கைது செய்வதில் எமக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. திருடர்கள் பச்சையா, நீலமா, சிவப்பா என்பதிலும் எமக்குக் கவலை இல்லை. எனினும், திருடர்களைப் பிடிக்கின்ற தோரணையில் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் வேட்டையை நிறுத்த வேண்டுமென்பதே எமது கோரிக்கை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கூட்டு எதிரணியின் பேரணி தொடர்பில் மக்களுக்கு சிறந்த தெளிவு உள்ளது. பேரணியில் திரண்டிருந்த மக்கள் வெள்ளம் அதற்கு சான்று பகரும். எனினும், பேரணிக்குப் பின்னர் பலரும் போட்டி போட்டுகொண்டு அறிக்கைகள் விடுவதும், ஊடக மாநாடுகளை நடத்துவதும் எமது பேரணி வெற்றிகரமானது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.

நாம் ஒரு மில்லியன் மக்களை வீதியில் இறக்குவதாக கடந்த முதலாம் திகதி ஊடகங்களுக்குக் கூறியிருந்தோம். அது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, நாம் ஒரு மில்லியன் மக்களைக் கொழும்புக்குக் கொண்டுவருவதாகக் கூறியதாக விமர்சிக்கின்றார். அவர்களுக்கு எமது பேரணி தொடர்பில் தற்போது பிரச்சினையாகவுள்ளது. இரண்டு மில்லியன் மக்கள் எம்மோடு பேரணியில் இணைந்திருந்தனர். அதில் ஒரு பகுதியினர் மட்டுமே கொழும்புக்கு வந்தனர். எமது பேரணியை மக்கள் அங்கீகரித்தனர். வீதியின் இரு மருங்கிலும் நின்று எமக்கு அன்னதானங்களையும் வழங்கினர். எம்மை ஆசீர்வதித்தனர்.

அப்பாவி மக்கள் அரசாங்கத்தின் திருட்டுகள் தொடர்பில் முறையிட்டனர். டொலர் மில்லியன் கணக்கில் மோசடி செய்தவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுகின்றன. எனினும், 38,000 பெற்றுக்கொண்டவர்களை சிறையிலடைக்கின்றனர். நாம் எதிர்பார்ப்பது நிறைவேறியுள்ளது. பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை விட எமது கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் 2/3 பெரும்பான்மை உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையலுவலகத்துக்கு முன்பாக சிலர் நடந்துகொண்டவிதம் தொடர்பில் நாம் வருத்தமடைவதுடன் அதற்காக மன்னிப்பும் கோரினோம். இதில் ஏதோ பின்னணி உள்ளது இது தொடர்பில் தேடிப்பார்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்மிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அதன் தலைவர்களையும் மதிக்காதவர்கள் அவர்களை அவமதித்தார்கள். இந்த நிலையில் ஸ்ரீகொத்தாவைப் பாதுகாக்கும் நாகங்களாக செயற்பட வேண்டாம் என நாம் அரசாங்கத்தில் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to திருடர்கள் கைது எனும் பெயரில் அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் செய்கின்றது: டலஸ் அழகப்பெரும

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com