Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை..

பதிந்தவர்: தம்பியன் 16 August 2016

இணைந்த வடக்கு – கிழக்கில் இறைமையின் அடிப்படையில் பகிரப்படுகின்ற அரச அதிகாரங்களின் மூலமான தீர்வு வேண்டும் என்பதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தீர்மானமாகும்.

யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ஈடுபாட்டுடனான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கொள்கையாகும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் வவுனியாவில் நடைபெற்றிருந்தது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு எடுத்துக்கூறியிருக்கின்றார்.

போர்க்குற்ற விசாரணைகள் சர்வதேச விசாரணையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதுவதாகவும் அப்படியான நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி எடுத்துள்ளதாகவும் விஷமத்தனமாகவும் பொய்யாகவும் ஒரு பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது.

எனினும் இப்படியாக கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கவில்லை. முழுமையான சர்வதேச ஈடுபாட்டோடுதான் விசாரணை இடம்பெறவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இந்த நிலைப்பாட்டிலிருந்து கட்சியோ கட்சி உறுப்பினர்களோ மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அரசியல் தீர்வு விடயத்தில் ஒற்றயைாட்சிக்குள் சமஷ்டி என்பதுதான் நாம் எடுத்துள்ள நிலைப்பாடு என்று ஒரு பொய்யானதும் விஷமத்தனமானதுமான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அப்படியான நிலைப்பாட்டை கட்சியோ கட்சியின் தலைமையோ எடுக்கவில்லை.

சமஷ்டி அடிப்படையில் இணைந்த வடக்கு, கிழக்கில் எங்களுடைய இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படுவதன் மூலம் தீர்வு ஏற்படவேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும் என்றும் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கிய சுமந்திரன் எம்.பி. எடுத்துக்கூறியிருக்கின்றார்.

தற்போதைய நிலையில் அரசியலமைப்பை மாற்றியமைத்து தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைப் பிரச்சினைக்கும் தீர்வைக் காணவேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது.

இந்தநிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியினை தலைமைத்துவமாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது உறுதியான நிலைப்பாட்டில் இருக்கவேண்டியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயலாற்ற வேண்டியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 4 கட்சிகள் தற்போது அங்கம் வகிக்கின்றபோதிலும் பல்வேறு விடயங்களிலும் இந்தக் கட்சிகளின் தலைமைகளிடையே முரண்பாடுகள் எழுந்துள்ளன.

இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படுகின்றபோது அந்த விடயத்தில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று செயற்படவேண்டியது இன்றியமையாததாகும்.

தமிழ் மக்களின் சார்பில் எத்தகைய தீர்வு வேண்டும் என்பதில் சகல தமிழ்த் தலைமைகளும் ஒருமித்த நிலைப்பாட்டில் நிற்கவேண்டும். அப்படியானால்தான் தென் பகுதி அரசியல் தலைமைகளிடமிருந்து ஓரளவுக்கு உறுதியான தீர்வினைப் பெறக்கூடிய சூழல் ஏற்படும்.

இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தவிடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை இணைத் தலைமையாகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவையும் இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டியின் அடிப்படையில் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிக்கின்ற தீர்வையே கோரியிருக்கின்றது.

இதேபோல் ஈ.பி.டி.பி., தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட ஏனைய கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தேசிய முன்னணியும் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவே அறிவித்துள்ளன.

மொத்தத்தில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்கள் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வை ஏற்பதற்கு தயாராகவே உள்ளன.

இந்த விடயத்தில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் திடமான கொள்கையுடன் செயற்படவேண்டியது அவசியமானதாகும்.

இதேபோல் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்த விசாரணைகள் இடம்பெற வேண்டியது இன்றியமையாததாகும்.

இந்த தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கமானது இணை அனுசரணை வழங்கி அதனை ஏற்றுக்கொண்டிருந்தது.

இவ்வாறான நிலையில் தற்போது சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய விசாரணைகளை மேற்கொள்ளும் விடயத்தில் அரசாங்கமானது பின்னடித்து வருகின்றது.

கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோரும் இந்த வலியுறுத்தல்களை விடுத்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் ஜெனிவாவுக்கு சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் உட்பட சிலரைச் சந்தித்து பேசியிருந்தார்.

அதன் பின்னர் இந்தக் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைச் சார்ந்த எவரும் கலந்து கொண்டிருக்கவில்லை.

இத்தகைய சூழல் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது சர்வதேச விசாரணைக் கோரிக்கையிலிருந்து பின்வாங்கி விட்டதோ என்ற சந்தேகம் எழுந்திருந்தது.

அரசாங்கமும் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறை தொடர்பில் நழுவல் போக்கையே கடைப்பிடித்தது.

இத்தகைய போக்குக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஆதரவு வழங்கி வருவதாக கூட்டமைப்புக்கு எதிரான தமிழ்த் தலைமைகள் குற்றம் சாட்டியுமிருந்தன.

இத்தகைய குற்றச்சாட்டு குறித்து தற்போது சுமந்திரன் எம்.பி. விளக்கமளித்திருக்கின்றார். சர்வதேச ஒத்துழைப்புடனான விசாரணையே தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இதேபோல் அரசியல் தீரவு விடயத்திலும் இணைந்த வடக்கு –கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்தும் தமிழரசுக் கட்சி பின்வாங்கி விட்டதோ என்ற சந்தேகமும் அண்மைக் காலமாக எழுந்திருந்தது.

அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஒன்றையாட்சிக்குள் சமஷ்டி என்ற சொற்பிரயோகத்தை பயன்படுத்தியிருந்தார்.

ஆஸ்திரியாவில் அத்தகைய சமஷ்டி முறையின் கீழ் தீர்வு காணப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அவர் விளக்கியிருந்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் இந்த உரையே ஒற்றையாட்சிக்குள் சமஷ்டியைக் காண்பதற்கு தமிழரசுக் கட்சி இணங்கி விட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

சமஷ்டி அடிப்படையில் தீர்வைக் காண்பதற்கு தென்பகுதியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. சமஷ்டி என்றாலே நாட்டைப் பிரிப்பதற்கான நடவடிக்கை என்று தென்பகுதியில் பிரசாரப்படுத்தப்படுகின்றது.

இதேபோல் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு என்றால் ஒன்றுமே கிடைக்காது என்ற நிலைப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கியிருக்கின்றது.

இதனால்தான் ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தி தீர்வைக் காண்பது தொடர்பிலும் ஆராயப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பிலும் தற்போது தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.

ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்பது தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு அல்ல என்பதும் தற்போது தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது.

உண்மையிலேயே இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டியின் அடிப்படையிலான அதிகூடிய அதிகாரப்பகிர்வு தமிழ் மக்களுக்கு வேண்டும்.

இதற்கு குறைந்த அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்வதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை. தனிநாட்டுக்காகப் போராடிய மக்கள் இன்று ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டியை ஏற்பதற்குத் தயாராகி விட்டனர்.

எனவே, இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமிருக்க முடியாது என்பதை உணர்ந்து தமிழரசுக்கட்சி உட்பட தமிழ் மக்களின் தலைமைகள் செயற்படவேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

0 Responses to விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com