Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரங்களை துஷ்பிரயோகம் செய்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உள்ளிட்ட 85 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஆர்வலர்கள் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நம்பகமான மற்றும் சுதந்திரமான விசாரணையொன்றை இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென்ற பணிப்புரையை உச்சநீதிமன்றம் வழங்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு கடமையை சரியாகச் செய்வதிலிருந்து தவறியிருப்பதாக மனுவைத் தாக்கல் செய்துள்ள சட்டத்தரணி நாகநாத கொடித்துவக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரத்தை பலர் துஷ்பிரயோகம் செய்தமை குறித்து நம்பத்தகுந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும் இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழு அது பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தமை மற்றும் அரசாங்கத்துக்கு வரவேண்டிய வருமானத்தில் மோசடி செய்தமை என்பன இலஞ்ச மோசடி சட்டத்தின் 70 பிரிவின் கீழ் குற்றங்களென மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் நம்பகமான மற்றும் சுதந்திரமான விசாரணையொன்றை இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழு மேற்கொள்ளவேண்டுமென்ற பணிப்புரையை உச்சநீதிமன்றம் விடுக்கவேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கியமையால் கடந்த மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகத்தில் அரசாங்கத்துக்குப் பாரிய இழப்பு ஏற்பட்டிருப்பதாக 2014ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முன்வைத்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருந்தேன். இதன் பின்னர் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் முன்வைத்த முதலாவது கொள்கைத் திட்ட அறிவிப்பில் 40 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் 2016ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள 1965/2 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் எம்.பிக்களுக்கான தீர்வையற்ற வாகனங்களின் இயந்திர கொள்ளளவு அல்லது எரிபொருள் வகை உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிடப்படவில்லையென மனுதாரர் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சரின் திட்டமிட்ட நடவடிக்கையானது அரசாங்கத்தின் வருமானத்தில் 7 பில்லியன் ரூபா நஷ்டத்துக்கு வழியேற்படுத்தியுள்ளது. 2016 டிசம்பர் மாதம் 9ஆம் திகதி தலா 33 மில்லியன் ரூபா வரிப் பெறுமதியைத் தவிர்த்து 85 விலையுயர்ந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட பெரும்பாலான வாகனங்கள் முதலில் இறக்குமதி செய்த பாராளுமன்ற உறுப்பினரின் பெயரின் கீழ் மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதுடன், உடனடியாக வேறு நபர்களுக்கு அது மாற்றப்பட்டிருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாகனங்களைப் பெறுவது பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லையென்றால் வாகனத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு நபரும் 300 வீதமான வரிகளைச் செலுத்தவேண்டுமென மனுதாரர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 85 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, சுஜீவ சேனசிங்ஹ, மொஹான்லால் கிரேரோ, சமல் ராஜபக்ஷ, விஜயகலா மகேஷ்வரன், அஜித் பி பெரேரா, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜோன் அமரதுங்க, இரா.சம்பந்தன், வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட 85 உறுப்பினர்களின் பெயர்கள் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர், பிரதமர் உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

0 Responses to தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரங்கள் துஷ்பிரயோகம்; 85 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com