Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்பினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த பிரிட்டன் பிரதமர் தெரேசா மேய் தனிப்பட்ட வொயேஜர் ஜெட் மூலம் உடனடியாக அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு அடுத்த நாளான இன்று சனிக்கிழமை துருக்கி தலைநகர் அங்காராவை வந்தடைந்துள்ளார்.

மேலும் அங்கு துருக்கி அதிபர் டய்யிப் எர்டோகனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார்.

துருக்கியில் அந்நாட்டு அதிபரான எர்டோகன் மற்றும் பிரதமரான பினாலி யில்டிரிம் ஆகியோருடன் தெரேசா மேய் நடத்திய பேச்சுவார்த்தை முக்கியமாக ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பட்சத்தில் துருக்கியுடனான பிரிட்டனின் வர்த்தக உறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் அதிகரிக்க வேண்டிய கூட்டுறவு மற்றும் தீவிரவாதத்தை எதிர் கொள்வது என்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக அமைந்திருக்கும் என எதிர்பார்ப்பு வெளியிடப் பட்டிருந்தது. கடந்த வருடம் ஜூலையில் துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பை முறியடித்ததன் பின்னர் அதில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தவர்கள், இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து பத்தாயிரக் கணக்கில் கைது செய்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதால் இங்கிலாந்து அதைக் கண்டிக்க வேண்டும் என்ற அழுத்தம் அந்நாட்டு மக்களால் தெரேசா மேய் இற்கு இருந்து வந்தது. இந்த அழுத்தத்தின் மத்தியில் அவர் துருக்கிக்குத் தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைப் பின்னணியாகக் கொண்டு முஸ்லிம் மதகுருவான ஃபெத்துல்லாஹ் குலென் என்பவர் ஜூலையில் துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட போதும் அது அரசால் முறியடிக்கப் பட்டு அதில் தொடர்புடைய பத்தாயிரக் கணக்கான மக்களை அந்நாட்டு அரசு கைது செய்தும் ஒரு இலட்சம் பேர் வரை அரச உத்தியோகத்தில் இருந்து நீக்கப் பட்டும் இருந்தனர். மேலும் நூற்றுக் கணக்கான பத்திரிகையாளர்களும் முன்னால் குர்துக் கட்சித் தலைவர்களும் சிறையில் உள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக துருக்கி ISIS தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றது. புது வருடத் தினத்தன்று இஸ்தான்புல்லில் உள்ள இரவு விடுதியில் ISIS மேற்கொண்ட தாக்குதலில் 39 பேர் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சிரிய குழப்ப நிலை தொடர்பாகவும் சைப்பிரஸை மீள இணைத்தல் தொடர்பாகவும் தெரேசா மே மற்றும் துருக்கி நாட்டுத் தலைவர்கள் கலந்து பேசுவார்கள் என்றும் எதிர்பார்ப்பு வெளியிடப் பட்டுள்ளது.

0 Responses to துருக்கி அதிபர் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் பிரிட்டன் பிரதமர் தெரேசா மேய்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com