Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேரெழுச்சியும் சீரான ஒழுங்கும் பேணப்பட்ட சல்லிக்கட்டு மீட்புக்கான தமிழக மக்களின் போராட்டத்தின் மீது அரச இயந்திரமும், சதிகாரர்களும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு வரலாற்றின் கறுப்புப் பக்கங்களை நிரப்பியிருக்கின்றார்கள். கொண்டாட்ட மனநிலையோடு எழுதப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பத்தியை, கோபமும் ஆற்றாமையும் கலந்த மனநிலையோடு எழுத வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.

அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தினை 70 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுத்து வந்திருக்கின்றவர்கள் என்கிற ரீதியில் ஈழத்தமிழர்களுக்கு போராட்டங்கள் ஒன்றும் புதிதல்ல. அதுபோலவே, வெற்றிகளும் தோல்விகளும் புதியவையல்ல. ஆனால், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் கொண்டாட்டமான போராட்ட வெற்றியொன்று அவசியப்பட்டது. திமுக- காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் தோல்விகளையும், வடக்கு மாகாண சபைத் தேர்தல் வெற்றியையும், மஹிந்த ராஜபக்ஷவின் அகற்றத்தினையும் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் கொண்டாட்ட மனநிலையோடுதான் அணுகினார்கள். அந்த முடிவுகள் ஏதோவொரு வகையில் சில நாட்களுக்காவது மகிழ்வைக் கொடுத்தன. ஆனால், அவை தேர்தல் அரசியல் சார்ந்த முடிவுகள். இலகுவாகக் காணாமற்போகக் கூடியன. அப்படித்தான் நடந்தும் இருக்கிறது.

ஆனால், மக்களின் தன்னெழுச்சிப் போராட்டமொன்று கொடுக்கும் ஆன்மபலம் பாரியது. அது ஊடுகடத்தும் சக்தி தோல்வி மனநிலையை தோற்கடிக்கும் வல்லமை பெற்றது. அதன் போக்கில் தமிழக மக்களின் சல்லிக்கட்டு மீட்புக்கான போராட்ட வெற்றியும், அது கொடுக்கும் கொண்டாட்ட மனநிலையும் அத்தியாவசியமாக இருந்தது.

போராட்டமொன்று வென்றாலும் தோற்றாலும் அது கொடுக்கும் படிப்பினைகள் ஏராளம். சல்லிக்கட்டு மீட்புப் போராட்டம் ஆரம்பித்தது முதல் அதனை பல்வேறு வடிவங்களில் பதிவு செய்து வந்தது. அலங்காநல்லூரில் ஆரம்பித்த போராட்டம், மெரினா கடற்கரையில் வைத்து மாணவர்களினால் தமிழகத்தின் தன்னெழுச்சியாக மாற்றப்பட்டது. தமிழகம் கடந்த 50 ஆண்டுகளில் இவ்வாறான தன்னெழுச்சியைக் கண்டிருக்கவில்லை என்று ஊடகங்கள் போட்டிபோட்டுக் கொண்டு கூவின. மாணவர்களினால் தன்னெழுச்சி பெற்ற போராட்டம், இளைஞர்களின் பங்களிப்போடு இன்னும் வீச்சம் பெற்றது. பெண்களின் பங்களிப்போடு ஆன்மபலத்தின் அடுத்த கட்டத்தை அடைந்தது. அது, குடும்பங்களை போராட்டக்களத்தினை நோக்கி வர வைத்தது. வரலாறாக பதிந்தது.

போராட்டக்களங்கள் தன்னெழுச்சியை மாத்திரமல்ல. ஒழுக்கத்தினையும், ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாலான மனிதத்தையும், தாய்மையையும், சகோதரத்துவத்தையும், தோழமையையும் பதிவு செய்தன. இந்தக் காட்சிகள் ஈழத்தமிழர்களுக்கு அவ்வளவு புதிதல்ல. ஆனால், தமிழகத்துக்குப் புதியது. உணர்ச்சிபூர்வமானது. இந்தியாவுக்கு ஆச்சரியமானது. இந்த நிலையை தம்மோடு உள்வாங்கிப் பிரதிபலிக்கும் காட்சிகளை உலகமும் பதிவு செய்தது. இலங்கையிலும் யாழ்ப்பாணத்தில் தொடங்கி கொழும்பு வரை நீண்ட தமிழக தன்னெழுச்சிக்கான தார்மீக ஆதரவுப் போராட்டங்களும் அதன்போக்கில் கொண்டாட்ட மனநிலையோடு முன்னெடுக்கப்பட்டன.

ஆனால், தமிழகத்தின் தன்னெழுச்சியை அதிகாரபீடங்களும், அரசியல் கட்சிகளும், கருத்துருவாக்கிகளின் ஒரு தளமும், வட இந்திய ஊடகங்களும் பெரும் எரிச்சலோடு நோக்கின. தங்களின் தலையீடும், சுயநல அரசியலும் புறந்தள்ளப்பட்ட ஒரு எழுச்சியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் தங்களுக்குள் அல்லாடிக்கொண்டிருந்தன. ஒரு கட்டத்துக்கு மேல், அந்த எழுச்சியின் வெற்றிக் கூறுகளில் தங்களுக்குப் பங்கிருப்பதாகக் காட்டிக் கொள்ளப் போராடின. ஆனால், அதுவும் தமிழக மக்களால் முறியடிக்கப்பட்டது.

சல்லிக்கட்டு மீட்பினை பிரதான இலக்காகக் கொண்டு ஆரம்பித்த போராட்டம், தமிழக தன்னெழுச்சியாக மாற்றம் பெற்ற புள்ளியில் பல துணைக்கூறுகளையும் தன்னோடு இணைத்துக் கொள்ள ஆரம்பித்தது. கடந்த காலத்தில் அரசாங்கங்கள் இழைத்த துரோங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் காட்டிக்கொடுப்புக்களுக்கான எதிர்வினையாகவும் தன்னெழுச்சி வெளிப்பட ஆரம்பித்தது. அது, சில விடயங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியாத சூழலையும், நடைமுறை சார்ந்த விடயங்களோடு ஒத்துழைக்க முடியாத அல்லது விளங்கிக் கொண்டு பிரதிபலிக்க முடியாத அவசரத்தினையும் கூட உருவாக்கியது.

சீரான ஒழுங்கு பேணப்பட்ட தமிழக தன்னெழுச்சி, நாளைக்கான பெரும் அழுத்தங்களை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு நிறையக் கூடாது என்பதில் அதிகாரபீடங்களும், அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தின. ஏதோவொரு வடிவிலான கறையொன்று மாபெரும் எழுச்சி மீது விழ வேண்டும் என்றும் கருதின. அதற்கான ஏற்பாடுகளைச் செய்தும் வந்தன. அதன்போக்கில், போராட்டக்களங்களுக்குள் சதிகாரர்கள் புகுந்து கொண்ட காட்சிகளையும், அவர்களின் குறுகிய நோக்கங்களையும் வெகு சீக்கிரமாகவே உணர்ந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. இன்றைக்கு அந்தத் தரப்புக்கள் பெரும் எக்காளச் சிரிப்போடு இருப்பதையும் உணர முடிகின்றது.

அதுபோல, தமிழக தன்னெழுச்சியை சல்லிக்கட்டு ஒரு புள்ளியில் இணைத்தாலும், அதனோடு துணைக்கூறுகளும் பெருவாரியாக வளர்ந்து வந்த சூழலில் இறுதி முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரத்தினை யார் கையேற்பது என்கிற விடயத்தில் சிறிதளவு தடுமாற்றத்தை ஏற்படுத்தியும் விட்டது. அந்தச் சிறிய குழப்பங்களை சதிகாரர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.

சல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, அதற்கான அறிவிப்பினை தமிழக ஆளுநர் கடந்த சனிக்கிழமை மாலை வெளியிட்டார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பு சல்லிக்கட்டு தடை மீதான நிரந்தரத்தீர்வுக்கான அடிப்படைகளைக் கொண்டது என்பது தொடர்பிலான தெளிவுபடுத்தல்களை செய்யவில்லை. மாறாக, போராட்டக்காரர்களை நோக்கி ஒருவித அழுத்தங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தது. அதிகாரபீடங்களை நோக்கி அழுத்தத்தை வழங்கிய போராட்டக்காரர்களை நோக்கி ஏமாற்று வார்த்தைகளுடனான அழுத்தமாக தற்காலிக தடை நீக்கம் இருந்துவிடப் போகின்றது என்கிற விடயம் மேல் நோக்கி வந்தது. இந்த விடயத்தில் போராட்டக்காரர்களுக்கு இடையே மாற்றுக்கருத்துக்கள் உருவாகின. ஆனாலும், திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவை கூடி அவசரச் சட்டத்தினை நிறைவேற்றும் வரையிலும் போராட்டத்தைத் தொடர்வதற்கான காலம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற விடயம் முக்கியமானது.

அரசு மீது நம்பிக்கையற்ற தன்மை என்பது ஒரு புள்ளியில் ஏற்பட்டதல்ல. அது, கடந்த கால துரோகங்களின் போக்கில் எழுந்தது. அதனையே, போராட்டக்காரர்கள் பிரதிபலித்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசு இயந்திரத்தைக் கொண்டு வன்முறையைப் பிரயோகித்து பலவந்தமாக போராட்டம் கலைக்கப்பட்டது. அதற்காக, பொலிஸாரே வாகனங்களை தீ வைத்ததும், அமைதிவழிப் போராட்டக்காரர்களை கற்கள் கொண்டு தாக்கியதும் நிகழ்ந்திருக்கின்றது. வன்முறையைத் அவர்களே தூண்டி அவர்களே அடக்கியிருக்கின்றார்கள். இந்த வன்முறையோடு சம்பந்தப்படாத போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் உரிமை மீறப்பட்டிருக்கின்றது.

இன்னும் சில மணித்தியாலங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் போராட்டக்காரர்கள் தாங்களாகவே வெற்றிக் கொண்டாட்டத்தோடு கலைந்து சென்றிருப்பார்கள். ஆனால், அந்தக் கணங்களை ஏன் அரச இயந்திரம் அனுமதிக்க மறுத்தது என்கிற கேள்வி எழுகின்றது. அது, போராட்டத்தின் முன்னால் தான் வளைந்து கொடுத்த தருணம் குறித்த கோபமாகவும் இருக்கலாம். அதற்காக போராட்டக்காரர்களை பழிவாங்கித் தொலைத்திருக்கின்றது. இது, அதிமுகவுக்கு பெரும் பின்னடவை எதிர்காலத்தில் வழங்கலாம்.

இன்னொருபக்கம், தமிழக தன்னெழுச்சியாக உருமாறிய போராட்டக்களங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நபர்களினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அது, சில முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னரும், அதனை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தங்களுக்கு இடையில் ஈகோ மனநிலை சார்ந்து கையாண்டது. அது, போராட்டத்தை எந்தக் கட்டத்தில் நிறைவு செய்வது என்பது சார்ந்தும் எழுந்தது. அப்படியான இழுபறிகளின் போக்கிலும் இறுதிக் கணங்களின் காட்சிகள் எழுதப்பட்டன.

தன்னெழுச்சியின் வெம்மையை ஜீரணிக்க முடியாத அரசு இயந்திரமும், சதிகாரர்களும் தன்னெழுச்சிக்குள் சிறு குழப்பங்களுக்காக காத்திருந்த கணங்கள் ஏராளம். அது, இறுதிக் கணத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படவும் செய்தன. ஞாயிறுக்கிழமை வெற்றிகரமாக போராட்டத்தினை நிறைவு செய்திருந்தால், திங்கட்கிழமை வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருக்காது என்கிற நிலை இருந்தது. அதனை, பலரும் போராட்டக்காரர்களை நோக்கி வலியுறுத்தியும் வந்தனர். ஆனால், அதனை ஒருங்கிணைத்து ஒரே புள்ளியில் இறுதி முடிவாக வலியுறுத்தும் ஆளுமையை யாரும் வெற்றிருக்கவில்லை.

தன்னெழுச்சியின் போது ஒரு சிலர் புகழ் வெளிச்சம் பெற்றாலும் அவர்கள் உண்மையில் ஆளுமை பெற்றவர்களாக இருக்கவில்லை. மாறாக, உணர்வலையின் பிரதிபலிப்புக்களாகவே அதிகம் இருந்தார்கள். அவர்களின் மீது தனிப்பட்ட ரீதியில் அதிகார அழுத்தம் செலுத்தப்பட்டதும் குலைந்து போனார்கள். அதனை, அவர்கள் போராட்டக்காரர்களை நோக்கி திருப்ப ஆரம்பித்தார்கள். அதனையும் இந்தத் தன்னெழுச்சி பதிவு செய்தது.

தமிழ் மக்கள் மாத்திரமல்ல, உலகம் பூராவும் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற சமூகங்கள் தமிழக தன்னெழுச்சியில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக, பிரதான இலக்கை நோக்கிய திரட்சியை, துணைக்கூறுகள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது என்பதையும், அதுபோல, உணர்வலைகளுக்கு பிரதிபலிக்கின்ற ஆளுமைகளை மாத்திரமல்லாமல், போராட்டத்தின் அக புற அழுத்தங்களையும் தாங்கிக் கொள்ளக் கூடியவர்களை அடையாளம் கொண்டு முன்நிறுத்த வேண்டும் என்பதையும் முக்கியமாக பதிவு செய்திருக்கின்றது.

போராட்டத்தின் இறுதிக் கணங்களிலும் கூட அரச அடக்குமுறைக்கு எதிராக அமைதி வழியிலேயே பெரும் அழுத்தத்தைக் கொடுத்து நிறைந்திருக்கின்றது தமிழக தன்னெழுச்சி!

4TamilMedia

0 Responses to சல்லிக்கட்டு மீட்பு: தமிழகத்தின் தன்னெழுச்சி! (புருஜோத்தமன் தங்கமயில்)

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com