Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் அனைவருக்கும் பொதுவான நீதியும், சம அந்தஸ்தும், சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகமும், மனித உரிமைகளும் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதன்மூலமே, நாட்டிலிருந்து வெளியேறியுள்ள மக்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்காளர்களைப் பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமையை மீள ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் இந்த சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வடக்கு, கிழக்கு மக்கள் பற்றி விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களே வடக்கு, கிழக்கில் இருந்து அதிக எண்ணிக்கையில் இடம்பெயர்ந்துள்ளனர்.

தமிழ் ஆயுத போராட்டங்கள் 1970களின் இறுதிப் பகுதியிலேயே ஆரம்பித்திருந்தன. எனினும், தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டன. 1956, 1958, 1961, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. அதில் 83 இல் இடம்பெற்றது பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு வரை தமிழ் மக்களின் தொடர்ச்சியாக இடம்பெயர்வுகளை சந்தித்திருந்தனர். தமிழ் மக்கள் உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்தது மட்டுமல்லாது, பெரும் எண்ணிக்கையானோர் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்திருந்தனர். தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உடல் ரீதியான தாக்குதல்களே இதற்கு காரணம்.

இருப்பினும், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த பலரும் எந்த நாட்டிலும் பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை இல்லாத நிலையில் இருக்கின்றனர். அவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பும் விருப்பத்துடன் இருக்கின்றனர். அவர்கள் திரும்பி வருவதற்கு அமைதியானதும் வன்முறையற்றதுமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to பொதுவான நீதியும், சம அந்தஸ்தும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com