Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுவிக்க உதவ கோரி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தோமஸ் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

இதில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்த அமர்வில் இருந்தவர் நீதிபதி தோமஸ்.

ஆனால் அண்மைக்காலமாக பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்காக முன்னாள் நீதிபதி தோமஸ் கருத்து தெரிவித்து வருகிறார்.

ராஜீவ் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு 2000-ஆம் ஆண்டிலும், மற்ற 3 பேருக்கும் கடந்த 2014- ஆம் ஆண்டிலும் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

விடுதலை குறித்து ராஜீவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக பேரறிவாளன் உட்பட மொத்தம் 7 பேர் உள்ளனர்.

இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்து தமிழக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் முன்னாள் நீதிபதி தோமஸ் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது,

கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் குற்றவாளிகள் 7 பேரும் சிறையில் உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்து விட்டனர்.

அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசு 2014-இல் கொண்டு வந்த தீர்மானத்தை அப்போதைய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அந்த வழக்கானது தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஆயுள் தண்டனைக்கு மேல் சிறையில் நீண்ட காலமாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு நீங்களும், ராகுலும், முடிந்தால் பிரியங்காவும் கடிதம் எழுத வேண்டும். அவ்வாறு எழுதினால் அதை தற்போதைய மத்திய அரசு ஏற்கும்.

மனிதாபிமான அடிப்படையில் இதை உங்களால் மட்டுமே செய்ய முடியும். நீதிபதியாக அவர்களுக்கு தண்டனையை உறுதி செய்த நானே இந்த கடிதத்தை எழுவதற்கான காரணம் இந்த சூழலில் உங்களால் கருணை காட்ட முடியும் என்பதால்தான்.

எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே இந்த 7 கைதிகளுக்கும் கருணை காட்ட முடியும் என்று நான் கருதுகிறேன். அவர்களை விடுவிக்குமாறு நான் கேட்டு உங்களுக்கு கடிதம் எழுதியது தவறு என்றால் என்னை மன்னித்து விடுங்கள்

காந்தியடிகளை நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்ற வழக்கில் அவரது சகோதரர் கோபால் கோட்சேவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் கடந்த 1964-ஆம் ஆண்டு நேரு தலைமையிலான மத்திய அரசு கோபால் கோட்சேவை விடுவித்தது.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இறைவனால் மட்டுமே 7 கைதிகளுக்கும் கருணை காட்ட முடியும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com