Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“மனித உரிமைக் கடப்பாடுகளை ஒரே இரவில் நிறைவேற்றிவிட முடியாது. உலகில் எந்தவொரு நாடும், இந்த விடயத்தில் சரியாகச் செயற்படும் நிலையில் இல்லை.“ என்று தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலமீளாய்வுக் கூட்டத்தொடரில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற இலங்கை தொடர்பான மூன்றாவது மீளாய்வு அமர்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் மனித உரிமைகளை மீளமைப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. எனினும், இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைகளை வேகமாக மீளமைக்க முடியாதுள்ளது. உலகில் சவால்கள் இல்லாத நாடுகளே இல்லை. எந்தவொரு நாடுமே, சரியாகச் செயற்படும் நாடு அல்ல.

முழுமையான அர்ப்பணிப்புடன் இயங்கினாலும்கூட, மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதும் அதைப் பாதுகாப்பதும் ஒரே நாளில் நடந்து விடக் கூடியது அல்ல. மனித உரிமைகளை முழுமையாக அமுல்படுத்துவது குறித்த எமது முயற்சிகள் மீதான அனைத்துலகத்தினது விமர்சனங்களை வரவேற்கிறோம். எமது செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடவும் நாம் தயாராக உள்ளோம்.

ஆனால், எமது இந்த முயற்சியை அனைத்துலகத் தலையீடுகளின் மூலம் குழப்புவதற்குச் சில சக்திகள் இயங்குவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எனினும், மனித உரிமைகளை முழுமையாக நாட்டில் நடைமுறைப்படுத்துவதில் அரசு முழுமனதுடன் உழைக்கும்.

மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களைப் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை, பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்ததாக, எமது நாட்டிலுள்ள சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இது துரதிருஷ்டவசமானது. முற்றிலும் தவறானது.

பாதுகாப்பு படையினர் நியாயமற்ற முறையில் இலக்கு வைக்கப்படவோ, தண்டிக்கப்படவோமாட்டார்கள் எனவும் இலங்கை ஜனாதிபதி அரசாங்கம் அண்மையில் வலியுறுத்திக் கூறியுள்ளார். எனினும், சட்ட மீறல்கள் தொடர்பாக, நீதித்துறை செயன்முறைகளின் ஊடாக, விசாரணைகளை மேற்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.

மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக, அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to மனித உரிமைக் கடப்பாடுகளை ஒரே இரவில் நிறைவேற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com