Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நவம்பர் மாதம் 23 மதியத்தில் இருந்து 24 காலைவரை யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள போராளிகள் மருத்துவ விடுதி நிரம்பி வழிந்தது. யாழ் போதனா வைத்திய சாலையும் வைத்தியர்கள், தாதிகள் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ துறை வைத்தியர்கள் மற்றும் மருத்துவ போராளிகளும் கடமையில் இரவு பகலாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

3வைத்திய சாலைக்கு முன்பாக இருந்த பாலம் பணிமனையில் குருதிகொடை செய்வதற்காக மாணவர்கள் சிலரும் வந்து காத்திருந்தனர். அந்தளவு போராளிகள் காயப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

ஆம் மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளான நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் 1992 வரையான வரலாற்றில் மிக முக குறுகிய நேரத்தில் நீண்ட காவலரண்களை தாக்கியழித்த சமர் நேற்று நடந்திருந்தது. பலாலி பெரும் கூட்டு படைத்தளத்தின் கிழக்கு பகுதியில் 4.5 கிலோமீற்றர் காவலரண்களை தாக்கி அழித்திருந்தனர். அந்த நடவடிக்கையில் காயப்பட்டோர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அது மட்டுமன்றி வன்னியில் இருந்தும் தென் தமிழீழத்தில் இருந்தும் மன்னாரில் இருந்தும் கடல்வழியாக காயப்பட்ட போராளிகள் வந்த வண்ணம் இருந்தனர். அதே வேளை மாவீரர்களின் வித்துடல்களும் கிளாலி கடல்வழியாக ந்து கொண்டிருந்தன.

இதற்கு காரணம் 1992 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்தின் வட தமிழீழ மிகப்பெரும் படை நடவடிக்கை எடுப்பினை சீர்குலைக்கும் தாக்குதல்களை நடாத்தியதும் தென் தமிழீழத்தில் படை நடவடிக்கைகளை முறியடித்ததும் ஆகும். 1992 ம் ஆண்டினை ஓர் வெற்றி ஆண்டாக தமிழ்ழிழ தேசமும் விடுதலைப்புலிகளின் போராளிகளும் கொண்டாடினர். அந்த வெற்றிக்காக தமது உயிரையும், குருதியினையும்,அங்கங்களையும் கொடுத்த போராளிகளை மக்கள் வாழ்த்தினர். கூடவே மாவீரர் நாளில் அந்த மாவீரர்களுக்காக தமிழீழத்தின் திக்கு திசை எங்கும் மக்கள் தமது இடங்களை அழகு படுத்தி அந்த அழகில் மாவீரர்களை நிறுத்தினர் என்றே சொல்லவேண்டும்.

பலாலி கிழக்கு இராணுவ வேலிகள் தகர்ப்பு தாக்குதல் அப்போது அரச படைகளுக்கும், அரசாங்கத்திற்கும் பெரும் அதிருப்தியினை தோற்றுவித்து இருந்தது ஏனெனில் 1992 ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் குடா நாட்டில் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையினை மேற்கொள்ள இருந்தது. ஐந்து முனைகளில் இந்த தாக்குதலினை நடாத்த அரச படைகள் தயாராகி கொண்டிருந்தனர். மண்டைதீவு வழியாக , பலாலி ஊடாக,அனையிறவு இயக்கச்சி ஊடாக, கட்டைக்காட்டில் இருந்து வடமராட்சி கிழக்கு ஊடாக, அராலிதுறையூடாக ஆகிய முனைகளில் தயாராகி கொண்டிருந்த வேளையில் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்ட பல முறியடிப்பு தாக்குதல்களை நடாத்திக்கொண்டிருந்தனர்.

இதன்படி குடா நாட்டை கைப்பற்றுவதற்கான படை நடைவடிக்கையினை வழி நடாத்தவிருந்த சிங்கள தளபதிகளான டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரட்ன, ஜெயமகா உட்பட 09 அதிகாரிகள் அராலியில் கண்ணீவெடி தாக்குதலில் 1992.08.08 அன்று கொல்லப்பட்டனர். மேஜர் கார்வண்ணன் இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தினார். அதன் பின்னர் கட்டைக்காட்டில் உள்ள படை நடவடிக்கைக்கான ஆயுத கிடங்கின் மீது 1/10/1992 ம் ஆண்டு அதிகாலை விடுதலைப்புலிகளின் இம்ரான் பாண்டியன் படையணி, கடற்புலிகள், மகளிர்படையணி ஆகியன இணைந்து தாக்குதலை மேற்கொண்டனர். இதில் இயக்க வரலாற்றில் (1992வரை) முதன் முறையாக பெரும் தொகையாக ஆயுதங்கள் மீட்கப்பட்ட சமராக அப்போது அமைந்தது. இந்த சமரில் மேஜர் கார்வண்ணன் வீரச்சாவு அடைந்தது பேரிழப்பாக இருந்தது.

இதே நேரம் தென் தமிழீழத்தில் இலங்கை அரசாங்கம் தமது தோல்விகளை மறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஜயபார இராணுவ நடவடிக்கையானதும் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் இலங்கை அரசாங்கம் உலங்கு வானூர்தி ஒன்றினையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் தான் பூனகரி இராணுவ முகாமின் இராணுவ வேலிகளும் தாக்கி அழிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் தமது போராட்ட வரலாற்றில் 1992 ம் ஆண்டினை வெற்றியாண்டாக பதிவு செய்துள்ளனர். காரணம் போருக்கு தேவையான பெரும் தொகையான ஆயுத வெடிப்பொருட்களை எதிரியிடம் இருந்து மீட்ட ஆண்டு, வட தமிழீழ மிகப்பெரும் படையெடுப்பினை முறியடித்து அதன் தளபதிகளையே கொன்றொழித்த ஆண்டு. இவ்வாறாக நமது வெற்றிக்கு உயிர் கொடுத்தது மட்டுமன்றி எதிர்கால போராட்டத்திற்கே உயிர்கொடுத்து ஆயுதங்களை பெற்று தந்த அந்த மாவீரர்களை போற்றுவோம்.

அதே நேரம் உயிர்கொடுத்து பெற்ற ஆயுதங்கள் இன்று எதிரி கைக்கு போவதனை நினைக்கும் ஒவ்வொரு கணமும் எங்கள் மனம் கனக்கின்றது என்றாலும் இந்த நேரத்தில் ஒரு ஆயுதத்தை கொடுத்து பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்றால் சில வேளை எங்கள் மாவீரர்கள் மன்னிப்பார்கள். ஏனென்றால் நாட்டின் மீது கொண்ட அதே பாசம் மக்கள் மீதும் போராளிகள் மீதும் அவர்களுக்கு இருந்தது.

கொடிய போர்கள் நடந்த ஜயசிக்குறு காலப்பகுதியில் எமது ஒரு நேர சாப்பாட்டை நிறுத்தி பட்டிணி கிடக்கும் மக்களுக்கு கொடுங்கள் என்று சொன்ன ஒரு மாவீரனை இந்த நேரத்தில் நினைவு கூருகின்றேன். அந்த மாவீரனின் சகோதரன் இந்த வருடம் இரணைப்பாலை ஆனந்த புரம் சண்டையில் படுகாயமடைந்து தற்போது இராணுவத்தின் சிறையில் இருக்கின்றான்.

தாயகத்தில் யாரும் யாருக்காக ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தமது பிள்ளைகளுக்கு தமது வீட்டில்கூட நினைவு கூர முடியாத நிலையில் இருக்கின்றது தமிழீழம். வெற்றி ஒலிகளில் மாவீரர்களை போற்றிய தமிழீழம் இன்று வேதனை ஒலிகளாலும் வலிகளாலும் தளர்வுற்று காணப்படுகின்றது. என்றாலும் எப்போ ஒரு நாள் நிமிரும் எம் தேசம் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கின்றது.

0 Responses to இன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com