Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் உள்ளடக்கப் பகுதிகளைத் திருத்தி, இவ்வருடம் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானிக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை இரத்து செய்தது.

கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட 2006/44ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அதிகாரமற்றது என்று கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 13ஆம் திகதி ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

கொழும்பைச் சேர்ந்த தொடகே சிறிசேன பெர்ணான்டோ, கண்டியைச் சேர்ந்த வருசமானதேவகே கெதர விஜேரத்ன, ஹல்மில்லவெவயைச் சேர்ந்த கீர்த்தி மஹிந்த கருணாதிலக, பண்டாரவளையைச் சேர்ந்த டிலந்த கனிஸ்க ஆரியரத்ன, உடவளவையைச் சேர்ந்த ஜனாக குமார ராஜபக்ஷ சேனாதீர, தெனியாயவைச் சேர்ந்த பிலதுவ ஹேவாகே யொஹான் தனுஷ்க ஆகியோராலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதியரசர்களான எல்.டி.பி. தெஹிதெனிய, குமுதினி விக்ரமசிங்ஹ, சிரான் குணரத்ன ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில், நேற்றையதினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, தேர்தல்கள் திணைக்களத்தினால் 93 உள்ளூராட்சி மன்றக்களுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ளதாலும் தேசிய நலனைக் கருத்திற்கொண்டும் தமது மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜராகியருந்த சட்டத்தரணி என்.எம்.ஷகீட் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

மனுவை திரும்பப் பெறுவதன் காரணத்தால், அதிவிசேட வர்த்தமானிக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை இரத்துச் செய்யுமாறும் வழக்குச் செலவை அறிவிக்க வேண்டாம் என்றும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய நீதியரசர்கள் குழாமுக்கு அறிவித்ததையடுத்தே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் அவ்வமைச்சின் செயலாளர் எச்.ரி.கமல் பத்மசிறி ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, பொதுஜன பெரமுன, பெப்ரல், கபே உள்ளிட்ட தரப்பினர், மனுவுக்கு தமது ஆட்சேபனையத் தெரிவித்திருந்ததுடன். இடையீட்டு மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர்.

2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட 2006/44ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

உள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகளை நிர்ணயிக்கவும் குறிப்பிட்டதொரு வட்டாரத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்தும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to உள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானிக்கு எதிரான இடைக்காலத் தடை இரத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com