Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் ஜனாதிபதியாக தான் பதவியில் இருக்கும் வரை, இராணுவம் உள்ளிட்ட படைவீரர்களை எந்தவொரு போர்க்குற்ற நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டை காப்பாற்றுவதற்காகவும், தேசிய பேரழிவுகளின் போது உயிரையும் மதிக்காமல் படையினர் ஆற்றிய சேவையை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை அரங்கில் நேற்று வியாழக்கிழமை மாலை இராணுவ கட்டளை அதிகாரிகள், மற்றும் சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டை காப்பாற்றுவதற்காகவும், தேசிய பேரழிவுகளின் போதும், உங்கள் உயிரையும் மதிக்காமல் நீங்கள் அரப்பணிப்புடன் பணியாற்றியுள்ளீர்கள். அதற்காக நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். அண்மையில் நீங்கள் தேசிய பேரழிவுகள், தொற்றுநோய்கள், நிலச்சரிவுகள் போன்றவை எங்களைத் தாக்கியபோது, முன்னணியில் நின்று பணியாற்றினீர்கள்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அமைதியான சமூகமாக நல்லிணக்கம், ஒற்றுமை, புரிந்துணர்வுடன் முன்நோக்கிச் செல்வதற்கும் உங்களின் தொடர்ச்சியான ஆதரவு எமக்குத் தேவை. நாட்டின் தலைவராக நான் இருக்கும் வரைக்கும், எந்தவொரு போர் நீதிமன்றத்தின் முன்னாலும் உங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று உறுதியாக கூறுகிறேன்.

இருந்தாலும், தவறு செய்த இராணுவத்தினர், நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதாக இருந்தால், நாட்டின் சட்டங்களுக்கு அமைவாகவே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சில அதிருப்தி அரசியல்வாதிகளும், ஓய்வுபெற்ற இராணுவத்தினரும்,போர் வீரர்களைத் தண்டிக்க முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி வருகின்றனர். நான் இந்த நாட்டின் அதிபர் என்ற வகையில், வெளிநாட்டு நீதிபதிகள் போன்றவர்களால் எவரையும் விசாரணை செய்ய அனுமதிக்கமாட்டேன்.

எனவே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான அறிக்கைகளால் நீங்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது. உலகின் எந்த மனித உரிமை அமைப்புக்களும், எந்த அடிப்படையிலும், இலங்கை இராணுவத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.

ஒரு இறைமையுள்ள அரசு என்ற வகையில், எந்தவொரு தலையீடுகளும் இன்றி, எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றல் இருப்பதாக, ஐ.நாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கைகள், வதந்திகள் மற்றும் நம் எதிரிகளால் தவறாக வழிநடத்தப்படக்கூடாது, என்னை நம்புங்கள் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில் போலல்லாமல், யுத்த வீரர்களின் வெளிநாட்டு நுழைவிசைவுகள் எதிர்காலத்தில் நிராகரிக்கப்படாது, என்றும், தங்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எந்த தடங்கலும் ஏற்படாமல் உதவுவோம் என்றும் நான் வலியுறுத்திக் கூறுகிறேன் .” என்றுள்ளார்.

0 Responses to இராணுவத்தினர் மீது எந்தவொரு போர்க்குற்ற விசாரணையையும் நடத்த அனுமதியேன்: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com