Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“இலங்கை அரசாங்கத்தினதும், சில வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கும் ஏற்ப பலமற்ற மாற்று அணிக்கு ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் செயல்வடிவம் கொடுத்துள்ளார்.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். புதிய தேர்தல் கூட்டணியை அமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், நேற்றுமுன்தினம் புதன்கிழமை சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியோடு இணைந்து புதிய கூட்டணியை அமைத்தார்.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பலமான அணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும் இணைந்து பொது கூட்டணி ஒன்றை உருவாக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய நவம்பர் மாதம் 16ஆம் திகதி சுரேஷ் பிரேமச்சந்திரன் புதிய கூட்டணியை பதிவு செய்வது தொடர்பாக தேர்தல் திணைக்களத்துடன் கலந்துரையாடுமாறு தெரிவித்தார். அதன்படி கலந்துரையாடினோம். இதன்போது புதிய தேர்தல் கூட்டணியை நவம்பர் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்யவேண்டும் என தேர்தல் திணைக்களம் கூறியது.

அதற்கமைய சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு விடயத்தை கூறினோம். அவர் தன்னுடைய ஆவணங்களை பெற பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் தொடர்புகொள்ள சொன்னார். நாங்கள் அப்படியே தொடர்பு கொண்டோம். ஆனால் ஆவணங்கள் எவையும் தரப்படவில்லை.

பின்னர் 19ஆம் திகதி இந்தியாவிலிருந்து திரும்பிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள எம்மை ஒத்துழைக்க வைக்குமாறு தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் சிலரை அனுப்பினார். அதற்கமைய 19ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூடி பேசியதற்கு இணங்க தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைவது கடினம் என தீர்மானித்தோம். அந்த நாள் இரவு 11.05 மணிக்கு சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு தொலைபேசி ஊடாக குறுந்தகவல் ஒன்றை அனுப்பினேன்.

அதில் தமிழ் மக்கள் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு முரணாக செயற்படுகிறீர்கள் என கூறியிருந்தேன். அதற்கு 20ஆம் திகதி காலை சுரேஷ் பிரேமச்சந்திரன் பதில் வழங்கினார். அதில் பதிவு நடவடிக்கைகளை தொடருங்கள் எனவும் தனது கட்சியில் உள்ள சிலர் எதிர்க்கிறார்கள். அவர்களுடன் பேசி இணக்கப்பாட்டை உண்டாக்கலாம் என கூறினார். பின்னர் அவர்களுடன் தொடர்பு இல்லை.

மீண்டும் 28ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் சிலரின் ஊடாக எங்களை சந்திக்க கேட்டார். அதற்காக அன்று இரவு சந்தித்தோம். அப்போதும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைவது சாத்தியமற்றது என்பதை தெளிவாகவே கூறினோம். அப்போது காணப்பட்ட இணக்கப்பாட்டினடிப்படையில் மீண்டும் 29ஆம் திகதி கொழும்பு சென்று தேர்தல் ஆணையாளரை சந்தித்தபோது பொது சின்னத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால், புது பெயர் ஒன்று தொடர்பாக 30ஆம் திகதிக்கு பின்னர் சொல்வதாக கூறினார். இதன் பின்னர் எந்த பேச்சும் இல்லாமல் சுரேஷ் பிரேமச்சந்திரன் விலகினார். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பலமாகதும், கொள்கை பற்றுள்ளதுமான எதிரணி ஒன்றை விரும்பாத தமிழ்த் தேசிய அரசியல் விரோதிகளின் விருப்பத்தை அவர் நிறைவேற்றிவிட்டார்.” என்றுள்ளார்.

0 Responses to பலமற்ற மாற்று அணிக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் செயல்வடிவம் கொடுத்துள்ளார்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com