Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கூட்டாக விடுத்த வேண்டுகோளை ஏற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த விடயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்வினைப் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.

இதன்படி சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை இணைத்துக்கொண்டு இந்த விடயத்தில் தீர்வைக் காண்பதற்காக, தேர்தலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த தரப்பினருடன் சமரசப் பேச்சுகளை நடத்தப்போவதாகவும் பிரதமர் கட்சித் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று திங்கட்கிழமை காலை சபாநாயகரின் தலைமையில் அவரது பாராளுமன்ற அறையில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான மனோ கணேசன், பைசர் முஸ்தபா, ரவூப் ஹக்கீம், நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, தினேஷ் குணவர்தன, அநுரகுமார திஸாநாயக்க, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இங்கு கலந்துகொண்ட கட்சித் தலைவர்கள் பலரும் தேர்தல் உரிய நேரத்தில் காலதாமதமின்றி நடத்தப்படவேண்டுமென வலியுறுத்தியதுடன் தேர்தல் கிரமமாக நடத்தப்படாத பட்சத்தில் சாத்வீகப் போராட்டங்களும், எதிர்ப்புச் செயற்பாடுகளும் நடத்தப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழு மற்றும் சட்ட மா அதிபர் மற்றும் அந்தத் திணைக்கள அதிகாரிகள் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு வந்திருந்த அதேவேளை, அவர்களிடமும் இடைக்கிடையே இது விடயத்தில் ஆலோசனை பெறப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்ராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்தவர்களுடன் சமரசப் பேச்சுகளை நடத்த சபாநாயகர் மற்றும் சுமந்திரன் ஆகியோரும் இணைந்து தாம் செயற்படவுள்ளதாக உறுதியளித்ததுடன் வழக்குத் தாக்கல் செய்தவர்களுக்கு எவ்வாறான நிவாரணத்தை வழங்குவது என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசப்படுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் முடிவுகள் கட்சித்தலைவர்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் உறுதியளித்துள்ளார்.

0 Responses to உள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை; நடவடிக்கை எடுப்பதாக ரணில் உறுதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com