Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனநாயக மற்றும் சட்டத்தை மதிக்கும் போக்கு ‘பிணை முறி’ தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பினூடாக மீண்டும் நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

‘பிணை முறி’ மோசடிகள் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பிணைமுறி தொடர்பான மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பிணைமுறி விவகாரத்தை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை குறித்து ஜனாதிபதி விடுத்த விசேட அறிவிப்பு தொடர்பில் பிரதமர் செயலகம் நேற்று வியாழக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தற்பொழுது சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 10 மாதங்களாக இது தொடர்பில் விசாரணை நடத்திய பிணை முறி ஆணைக்குழுவுக்கு எமது நன்றிகளை தெரிவிக்கிறோம்.

சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையிலான கோப் குழுவினால் பிணை முறி விநியோகம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணை அறிக்கை கடந்த 2016 ஒக்டோபர் 31ஆம் திகதி பிரதமரின் ஆலோசனைப்பிரகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டது.

பிணைமுறி கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளை முறையாக மேற்கொள்வது தொடர்பாகவும் சர்ச்சைக்குறிய பிணைமுறி விவகாரத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் யார் என்பது குறித்தும் அவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய சட்டபூர்வ நடவடிக்கை பற்றியும் பரிந்துரை முன்வைக்குமாறு 2016 டிசம்பர் மாதம் சட்டமா அதிபரிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார்.

இதன் பிரகாரம் பிணை முறி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை 2016ஆம் ஆண்டில் பிரதமரும் 2018 ஜனவரியில் ஜனாதிபதியும் சட்டமா அதிபருக்கு வழங்கியிருக்கிறார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனநாயகத்தையும் சட்டத்தை மதிக்கும் முறைமை இதனூடாக மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சட்டமா அதிபர் திணைக்களம் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.

ஆணைக்குழுவில் குறிப்பிட்டுள்ளவாறு 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற மோசடிகள் மற்றும் முறைகோடுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

கடந்த ஆட்சியில் செயற்படுத்தப்பட்ட பொய் பிரசாரங்கள் மற்றும் சேறு பூசும் சம்பிரதாயத்தை மாற்றி சட்டத்தை எந்த வித அழுத்தமும் இன்றி செயற்படுத்த தேவையான அவகாசத்தை பெற்றுக் கொடுப்பது சகலரதும் எதிர்பார்ப்பாகும்.” என்றுள்ளது.

0 Responses to நல்லாட்சி அரசாங்கத்தின் சட்டத்தை மதிக்கும் போக்கு ‘பிணை முறி’ விசாரணையில் வெளிவந்துள்ளது: பிரதமர் அலுவலகம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com