Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“இனவாதத்தைத் தூண்டும் ஒரு செயலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளை நான் பார்க்கவில்லை. அவர் இனவாதக் கருத்துக்களை வெளியிடுகின்றார் என்று நாம் அவரை எதிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“அரசியலானது செய்யக்கூடியதைச் செய்யும் கலை என்றார் ஜேர்மன் அறிஞர் ஒருவர். மஹிந்த அவர்கள் வாக்குறுதிகளைப் பெற இனவாதக் கருத்துக்களைப் பாவிக்கும் அதே நேரம் இனவாதம் தலைதூக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார். மேல் நாட்டவர் மஹிந்தவை எதிர்ப்பது சீனா எம் நாட்டில் காலடி ஊன்றக் கூடாது என்பதாலேயே. நாளைக்கு மேற்குலகுடன் சேர அவர் முன்வந்தால் மைத்திரியும் ரணிலும் தூக்கி எறியப்படுவார்கள். ஆகவே இனவாதத்தைத் தூண்டும் ஒரு செயலாக மஹிந்தவின் செயல்களை நான் பார்க்கவில்லை. அவர் இனவாதக் கருத்துக்களை வெளியிடுகின்றார் என்று அவரை எதிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. மேலைத்தேயத்தவர்களுக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் மேற்குலக மதங்களுக்குக் கட்டுப்பட்டிருப்போர்களுக்கும் மஹிந்தவைப் பேய் பிசாசு என்று குறிப்பிடத் தேவையிருக்கலாம். அது தமது சுயநலங்களுக்காக என்பதை நாம் மறத்தலாகாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்று புதன்கிழமை வெளியான முதலமைச்சரின் வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கேள்வி – நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது தமிழ் மக்களின் மன நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தமிழ்த் தலைமைகள் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்பினை அல்லது அவநம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளமை தெளிவாகின்றது. அதே வேளை தெற்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மீண்டும் இனவாதம் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதையே தெளிவுபடுத்துகின்றது. அந்த வகையிலே இந்தத் தேர்தல் முடிவுகளை நீங்கள் எவ்வாறு கருதுகின்றீர்கள்? தமிழ் மக்களுக்காக நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில் – நான் கொழும்பு சென்று வந்து வவுனியாவில் இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால், தேர்தல் முடிவுகள் பற்றிய முழு அறிவையும் இன்னமும் பெறவில்லை. இத்தேர்தல் முடிவானது பொதுவாகக் கூறுவதானால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல கட்சிகளுக்கு வாக்குகள் பிரிந்து சென்றுள்ளமையையும் ஒரு சில மன்றங்களைத் தவிர எந்த ஒரு கட்சியும் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மையை பெறமுடியாமல் இருப்பதையும் உணர்த்தி நிற்கின்றது. அதேவேளை, தமிழ் மக்கள் பொதுவாகத் தமது தலைமைகளின் மீது நம்பிக்கை இழந்து அதிருப்தி உற்றிருக்கின்றார்கள் என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன. மாற்றம் ஒன்றை மக்கள் விரும்பியிருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால்தான் சில கட்சிகளுக்கு வீழ்ச்சியும் சில கட்சிகளுக்கு எழுச்சியும் ஏற்பட்டிருக்கின்றது. காலாதிகாலமாக ‘வீடு’ சின்னத்திற்கு வாக்களித்த பலர் தற்போதைய தலைமைத்துவத்தைப் பிடிக்காததாலோ என்னவோ அவர்கள் இம் முறை யாழ் மாவட்டத் தேர்தலில் ஈடுபடவில்லை என்று தெரிகின்றது. உதாரணமாக இத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் கிளிநொச்சியில் 74.82%, முல்லைத்தீவில் 77.49%, மன்னாரில் 81.38%, வவுனியாவில் 74.03% ஆக இருக்க யாழ். மாவட்டத்தில் 70.84% விகிதத்தினரே வாக்களித்துள்ளார்கள். சில புள்ளி விபரங்கள் இன்னும் குறைத்தே யாழ் வாக்களிப்பைக் குறிப்பிடுகின்றன.

அரசாங்க புள்ளி விபரங்களின் படி தமிழரசுக்கட்சி 2015ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குத் தொகை 515963. இம் முறை அத்தொகை 339675 ஆக குறைந்துள்ளது. 34% சதவிகித வீழ்ச்சியைக் கண்டுள்ளது. எமது உரிமைகளை, உரித்துக்களை தொடர்ச்சியாக ஆணித்தரமாக எமது புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளையும் முன்வைத்து அரசாங்கத்திடம் நீதியானவற்றை, நியாயமானவற்றைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டிருந்தால் தெற்கில் யார் வந்தாலும் எம்மவர் பயப்படத் தேவையிருந்திருக்காது. சுயநலன் தரக்கூடிய வெளிநாட்டு உள்ளீடல்களால் மக்களுடன் கலந்தாலோசியாது பலவிட்டுக் கொடுப்புக்களை இன்றைய ஆட்சிக்காக எமது தலைமைகள் ஏற்படுத்திக் கொடுத்தமை, தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் எம்மை மேலும் பலவீனப்படுத்தி இருக்கின்றதோ என்று சிந்திக்க வைக்கின்றது. ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் காரணமாக வடக்கு மாகாண சபையின் நிர்வாகங்களைச் சரியானமுறையில் செய்யவிடாமல் தமிழரசுக்கட்சியின் ஒரு பகுதியினர் பல இடையூறுகளை ஏற்படுத்தி இருந்தனர். மேலும் எம் மக்களையும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் அந்நியப்படுத்தி இருட்டறையில் தள்ளிவிட்டு தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப எமது தீர்வு விடயத்தை ஒரு சிலரே தனியாகக் கையாண்டார்கள். முதலமைச்சரான எனக்கே என்ன நடைபெறுகிறது என்று தெரியாத நிலையில் மக்களின் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று பல சமயங்களில் நான் எண்ணிப்பார்த்ததுண்டு. இவை யாவும் வெளிப்படைத் தன்மையற்ற நடபடிமுறைமையின் பிரதிபலிப்புக்களே.

ஆகவே இந்த உள்ளுராட்சித் தேர்தல் தமிழரசுக்கட்சியையும் அதன் தலைமைகளையும் தம்மைத்தாமே கேள்வி கேட்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளியுள்ளது என்று கூறலாம். அசைக்கமுடியாது என்றிருந்தவர்கள் நிலநடுக்கத்தை அனுபவித்துள்ளார்கள்! இனியாவது ஓரிருவர் முடிவுகளை எடுக்கும் நிலை மாற்றப்பட்டு சகலரையும் பங்குதாரர்களாக உள்வாங்கி ஆக்கபூர்வமான தீர்க்கதரிசனம் மிக்க செயற்பாடுகளை கட்சிவேறுபாடுகள் கடந்து முன்னெடுத்து எமது மக்களுக்கான பணியை ஆற்ற நாம் யாவரும் ஒன்று கூட வேண்டும்.

அதேவேளை உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்க் கட்சிகள் கொள்கை அடிப்படையில் ஒன்றிணையவேண்டும். இந்தத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக நான் செயற்படவில்லை. அதனால் நீங்கள் இப்படித்தான் செய்யவேண்டும் என்று எந்த ஆலோசனையையும் எந்த கட்சிக்கும் நான் கூறவிரும்பவில்லை. ஆனால் கொள்கையில் நாம் யாவரும் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கொள்கையில் எம்மவர் ஒன்றிணைவார்களா? சுயநலம் மேலோங்கும் போது கொள்கைகள் மீதான பற்று குறைந்துவரும்.

அடுத்து நான் அறிந்த வரையில் நாட்டிலும் தமிழ் மக்கள் சம்பந்தமாகவும் மேலெழுந்த வாரியாக மூன்று விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று சிங்கள மக்களின் காவலனாய் மஹிந்த இராஜபக்ச அவர்கள் இன்னமும் அடையாளப்படுத்தப்படுகின்றார் என்பது. இதை இனவாதத்தின் பிரதிபலிப்பாக நான் பார்க்கவில்லை. பல காரணங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து அவரை முன்னிலைப்படுத்தியுள்ளது. இரண்டு நல்லாட்சி அரசாங்கம் தமிழர்களைப் பொறுத்த வரையில் நன்றி மறந்து, நாட்டைப் பொறுத்தவரையில் நல்லாட்சியிலும், மக்களின் பொருளாதார முன்னேற்றத்திலும் கரிசனை காட்டாது இதுவரையில் நடந்து வந்துள்ள நடைமுறை. அத்துடன் ஊழலைக் கட்டுப்படுத்தத் தீர்க்கமான முடிவுகளை எடுக்காமையும் ஒரு காரணம். மூன்று தமிழ் மக்களுக்கு ஒரு முகம் அரசாங்கத்திற்கு இன்னொரு முகம் காட்டிய தமிழ்த் தலைவர்கள் இன்று சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். இவற்றை ஒவ்வொன்றாக நான் பரிசீலனைக்கு எடுக்கின்றேன்.

1.சிங்கள மக்களின் காவலனாக மஹிந்த அவர்கள்.
தேர்தலுக்கு முதல் நாள் கொழும்பு சென்ற வழியில் நான் பேசிய பல சிங்கள சாதாரண மக்கள், அதுவும் விவசாயத்துடன் தொடர்புடையவர்கள், விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் உரம் பற்றிப் பிரஸ்தாபித்தார்கள். மஹிந்த ரூ 350 ரூபாய்க்கு மானிய அடிப்படையில் உரப்பை ஒன்றை விநியோகித்தார் எனவும் தற்போதைய அரசாங்கம் அதை எட்டிலிருந்து பத்து மடங்கு அதிகரித்து விட்டது என்றுங் கூறினார்கள். இன்று அதன் விலை ரூ 3000 க்கு மேல்ப் போய்விட்டது என்றார்கள். தற்போதும் உரம் கிடைக்காது தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் கூறினார்கள். இவ்வாறு செய்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மைத்திரிக்கு நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்று கேட்டார்கள்.

மேலும் ஊழலில் ஈடுபட்டதாக அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் ஏன் சட்டம் முன்பு ஆஜராக்கப்படவில்லை என்று கேட்டார்கள். வழமை போல் அரசியல் காரணங்களுக்காகத்தான் அவர்கள் ஊழல் பேர்வழிகள் என்று குறிப்பிடப்பட்டார்கள் என்றும் உண்மையில் அவ்வாறு இருந்திருக்க முடியாதென்றும் சிங்கள மக்களிடையே ஒரு கருத்து வலுப்பெற்றிருந்தது போல்த் தெரிந்தது. மூன்றாவதாக தமிழ் அரசியல்த் தலைவர்கள் இடைக்கால அறிக்கையில் இல்லாததை இருப்பதாகக் கூறப்போய் அது சிங்கள மக்களின் சந்தேகத்தைக் கிளப்பி விட்டது. அதனையும் அவர்களே குறிப்பிட்டார்கள். குறிப்பிட்ட ஒரு தமிழ்ப் பாராளுமன்ற அங்கத்தவர் தமிழர்களைக் கவர பொய் பேசப்போய் அதைச் சிங்களவர்கள் உண்மை என்று நம்பி விட்டார்கள். நான்காவது ஆளும் கட்சிக்குள் ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் உள்நுழைந்ததால் நிலைமை மோசமடைந்தது. ஒரு பலமுடைய தலைமைத்துவம் இல்லாது இரு தலைமைப் பீடங்கள் இருந்து வந்தமையும் குறையாகக் கூறப்பட்டது. ஐந்தாவது தாம் பதவிக்கு வந்தமை எவ்வௌர்களின் ஒத்துழைப்புடன் என்பதை அரசாங்கம் மறந்து விட்டுள்ளமை அவர்களையே சாடியது. தமது கடமை என்ன என்பதில் ஆளும் கட்சி பிழையான சிந்தனைகளைக் கொண்டிருந்தது. இவை யாவும் மஹிந்தவின் நிலையை வலுவூட்டச் செய்தது.

2. நன்றி மறந்த அரசாங்கம் நல்லாட்சியையும் மறந்தது.
தமிழர்களைப் பொறுத்தவரையில் தமிழர்களின் கரிசனைகள், பிரச்சனைகள், நாளாந்த இடர்பாடுகள் போன்றவை தமிழ்த் தலைமைகளால் அரசாங்கத்துக்கு இதுகாறும் உரக்க எடுத்துக்கூறப்படவில்லை. எடுத்துக்கூறப்பட்டாலும் செவிடன் காது சங்காகவே அது மாறியது. ஆனால் எமது தலைவர்கள் 2016ஆம் ஆண்டிலேயே ஏதோ தரப்போகின்றார்கள் என்ற மாயையில் எதிர்பார்த்து இருந்தார்கள். இன்று இலவு காத்த கிளிகளாக ஆகியுள்ளார்கள். அரசாங்கமும் வெறுமனே அரசியல் யாப்பு மாற்றம் பற்றிக் கூறிக் காலத்தைக் கடத்தி வந்துள்ளது. இன்னுமொரு மாதத்தில் போர்க்குற்றம் பற்றி ஐ.நாவுக்கு முன்னேற்ற அறிக்கை கொடுக்க வேண்டும் என்பதைப் பெரிதாக அவர்கள் எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. அதனால் “மஹிந்த வந்தார்” என்பதைக் காட்டி அவர்கள் யாவரையும் மடக்கி விடுவார்கள் போலத் தெரிகின்றது. பொய்யும் புரட்டுமே ஆயுதங்களாக அரசாங்கத்தால் பாவிக்கப்பட்டு வரக் காண்கின்றோம். அதற்கு எம்மவர் துணைபோயிருந்தமை மனவருத்தத்தைத் தருகின்றது.

3. தமிழ்த் தலைமைகளின் முகங்கள்.
தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள விரக்தி நிலையை அறிந்தவுடன் எப்படியாவது பதவியைத் தொடர்ந்து காப்பாற்றும் யுக்திகளையே எமது தலைமைகள் தேடி வருகின்றன. நான் பலமுறை கூறிவந்த ஒற்றுமை பற்றி இப்பொழுது தாமாகவே பிரஸ்தாபிக்கத் தொடங்கியுள்ளனர். கொள்கை ரீதியாகத் தாம் இதுகாறும் பின்பற்றிய பாதை பிழை என்பதை ஏற்க மறுக்கின்றனர். மாறாக அப் பிழையான பாதைகளில் போயே தமது பதவிகளைக் காப்பாற்ற முனைந்து வருகின்றனர். இப்பொழுது சில வெளிநாடுகளின் உள் நுழைவுடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிய வருகின்றது. EPDPஐ துரோகி என்றெல்லாம் கொட்டித்தீர்த்தவர்கள்தான் இப்போது அவர்களுடன் சேர்ந்து யாழ் மாநகரசபையில் நிர்வாகம் அமைக்கப் பிரயத்தனம் எடுத்து வருகின்றார்கள். டக்ளஸ் மத்திய அமைச்சராவதை நாம் எதிர்க்க மாட்டோம் என்று கூறியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. EPDP அப்போதைய அரசாங்கத்துடன் சேர்ந்து செய்த செயற்பாடுகளிலேயே தற்போது எமது தலைமைகளும் இறங்க உள்ளதாக அறிய வருகின்றது. பாராளுமன்ற சபாநாயகர் பதவி, வெளிநாட்டு அமைச்சர் பதவி, மீள்குடியேற்றப் பதவிகளில் எமது தலைமைகளை இறக்கி தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பத்திரிகை வாயில்களாக அறிகின்றேன். தமிழ் மக்கள் தமது உள்ளக் கிடக்கைகளை எதிர்ப்பாகத் தெரியப்படுத்தியிருக்கும் வேளையில் இடைக்கால அறிக்கையையே முன்வைத்துத் தமிழ்த் தலைமைகள் தமக்கான பதவிகளைத் தக்க வைக்கக் குறிவைப்பதாகத் தெரிகின்றது. இதனை மறுத்து செய்திகள் வருவதையும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. சேர்ந்து முடிவெடுத்து நாம் பழகாததால் எதனையுமே நாம் முற்றாக நம்பமுடியாத நிலை எம்மிடையே ஏற்பட்டுள்ளது.

ஆகவே நீங்கள் உங்கள் கேள்வியில் குறிப்பிட்டவாறு தமிழ் மக்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கத் தொடங்கியிருப்பது உண்மையே. அது வெறுப்பு என்று கூறமாட்டேன். அவநம்பிக்கை என்பதே பொருத்தமான சொல். தெற்கிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை நாம் இனவாதம் தலைதூக்கியுள்ளதாகக் கணிக்க முடியாது. நாங்கள் எமது பாரம்பரியங்கள், வரலாறு, கலைகள், எமது தனித்துவம், அரசியல் சுதந்திரம் போன்றவற்றை வெளிப்படையாகக் கூறும் போது சிங்கள மக்கட் தலைவர்களும் அவ்வாறான கருத்துக்களை வெளிக் கொண்டு வருவது இயற்கையே. அதனால் ஏற்படக்கூடிய முறுகல் நிலையைத் தவிர்க்கவே மஹிந்த அவர்கள் தனது மகன் நாமலை தமிழர் கரிசனைகள் பற்றி வெளிப்படையாகத் தேர்தல் முடிந்த பின் பேசவைத்திருக்கின்றார் என்று கொள்ள வேண்டும்.

அரசியலானது செய்யக்கூடியதைச் செய்யும் கலை என்றார் ஜேர்மன் அறிஞர் ஒருவர். மகிந்த அவர்கள் வாக்குறுதிகளைப் பெற இனவாதக் கருத்துக்களைப் பாவிக்கும் அதே நேரம் இனவாதம் தலைதூக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார். மேல் நாட்டவர் மகிந்தவை எதிர்ப்பது சீனா எம் நாட்டில் காலடி ஊன்றக் கூடாது என்பதாலேயே. நாளைக்கு மேற்குலகுடன் சேர அவர் முன்வந்தால் மைத்திரியும் இரணிலும் தூக்கி எறியப்படுவார்கள். ஆகவே இனவாதத்தைத் தூண்டும் ஒரு செயலாக மகிந்தவின் செயல்களை நான் பார்க்கவில்லை. அவர் இனவாதக் கருத்துக்களை வெளியிடுகின்றார் என்று அவரை எதிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. மேலைத்தேயத்தவர்களுக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் மேற்குலக மதங்களுக்குக் கட்டுப்பட்டிருப்போர்களுக்கும் மகிந்தவைப் பேய் பிசாசு என்று குறிப்பிடத் தேவையிருக்கலாம். அது தமது சுயநலங்களுக்காக என்பதை நாம் மறத்தலாகாது.

எந்தவகையில் இந்தத் தேர்தல் முடிவுகளை கருதுகின்றீர்கள்? தமிழ் மக்களுக்கு நீங்கள் கூறவிரும்புவது என்ன? என்பதே உங்கள் கேள்வியின் அந்தமாகத் தரப்பட்டுள்ளன.

மனிதர்களாகிய நாங்கள் எப்பொழுதுமே இருக்கும் நிலையிலேயே தொடர்ந்து அமைதி கலையாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். ஆனால் வாழ்க்கை அதற்கு இடங்கொடுப்பதில்லை. நடைமுறையைக் குழப்ப நிகழ்வுகள் வந்த வண்ணமே இருக்கும். என் நண்பர் ஒருவர் 1983ம் ஆண்டில் இலங்கை பொருளாதார ரீதியாக முன்னேறி வருகின்றது, திறந்த பொருளாதாரக் கொள்கையை ஜே.ஆர் அவர்கள் கொண்டுவந்தது முதல் வெளிநாட்டு முதலீடுகளை அரசாங்கம் உள்ளேற்கின்றது என்பது கண்டு இலங்கையில் முதலீடு செய்ய இங்கிலாந்தில் இருந்து ஜுன் மாதமளவில் வந்து பலருடன் கலந்துறவாடி மகிழ்வுடன் இருந்தார். ஆனால் ஜுலை 23ந் திகதி அவரை உள்;ர் இடம்பெயர் மக்களின் முகாமுக்கு கூட்டிச் சென்று, பல இடர்பாடுகள் மத்தியிலே திரும்பவும் இங்கிலாந்தைச் சென்றடைய வைத்தது. முன்மொழிவு மனிதனுடையது. பின்விளைவு இறைவன் சித்தம். (ஆயn pசழிழளநள் புழன னiளிழளநள)
பதவிகளில் ஒட்டி நின்று மக்கள் நிலையறியாது இருந்தவர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியைத் தந்துள்ளமை உண்மைதான். அதிர்ச்சியில் இருந்து விடுபட சில காலம் போகும். ஆனால் அவர்கள் யாவரும் தமது குறைபாட்டை முற்றாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனினும் தமது குறைபாடுகளை எமது சிங்கள, தமிழ் அரசியல்த் தலைவர்கள் மீளாய்வு செய்ய இது தக்க தருணமாய் அமைந்துள்ளது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமை அவசியம் என்பதை அடுத்தடுத்துக் கூறிவருகின்றேன். கட்சிகள் சுய நலத்துக்காக ஒன்றுபடுவன. ஆனால் தமிழ் மக்கள், கட்சிகளின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற் சென்று ஒரு இயக்கமாய் ஒருங்கிணைந்து தமது உரிமைகளைப் பெற அஹிம்சை வழியில் போராட வேண்டும். தமிழ்த் தலைமைகள் கட்சிப் பாகுபாடு இன்றி கொள்கையால் ஒன்றுபட்டு அரசாங்கத்திற்கு எமது கருத்துக்களையும் க~;டங்களையும் எடுத்துரைக்க வேண்டும். அரசியல் யாப்பு மாற்றங்கள் எல்லோரின் ஒத்துழைப்புடன் மீண்டும் தொடங்க வேண்டும்;. மாற்றங்கள் என்று கூறும் போது மாற்றத்துக்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு வெளிப்படையாக அது பற்றிய செயல்திட்டம் வகுக்கப்பட்டு, முடிவெடுத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இத் திட்டத் தயாரிப்பில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டி~; ஐக்கிய நாடுகள் போன்றவற்றின் பேராளர்களும் அதில் பங்குபற்ற வேண்டும். வெளிநாடுகள் வேண்டாம், புலம்பெயர்ந்தோர் வேண்டாம் என்று கூறுவது பெரும்பான்மை அரசியல் வாதிகள் தமக்கிருக்கும் அதிகாரங்கள் குறைந்து விடுமே என்ற ஆதங்கத்தால். அதனால்த்தான் எமது பிரச்சினை தீராது இதுவரையில் இழுபட்டுக் கொண்டிருக்கின்றது.

வெளிநாட்டு அரசாங்கப் பிரதிநிதிகளும் புலம்பெயர் தமிழர்தம் பேராளர்களும் 1987ல் 13வது திருத்தச்சட்டத்தை ஏற்படுத்திய இந்திய நாட்டின் பிரதிநிதிகளும் சேர்ந்திருந்து இலங்கையின் இனப்பிரச்சனையை அலசி ஆராய்ந்து முடிவுக்கு வருவதே உசிதம். அவ்வாறான கருத்துப் பரிமாற்றத்திற்கான நெருக்குதல்களை நாம் ஏற்படுத்த வேண்டும். எவ்வாறு எமக்கென ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டம் நாடு முழுவதற்கும் ஏற்புடைத்தாக்கப்பட்டதோ அதேவாறு நாம் யாவரும் சேர்ந்து ஐக்கிய சோ~லிச சம~;டிக் குடியரசொன்றை நிறுவ முன்வர வேண்டும். ஒன்பது மாகாணங்களும் சம~;டி அலகுகள் ஆக்கப்பட்டு எந்த இரு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்களும் ஒருவரோடு ஒருவர் இணைய இடமளிக்க வேண்டும். இவ்வாறான செயல் ஒவ்வொரு மாகாணமுந் தனித்தனியாகவும் மற்றவர்களுடன் சேர்ந்தும் முன்னேற வழி வகுக்கும். தத்தமது தனித்துவத்தை மாகாணங்கள் ஒவ்வொன்றும் பேண வழி வகுக்கும். அதற்கு நாம் சம~;டி சம்பந்தமான உண்மை நிலையை உலகறியச் செய்ய வேண்டும். தமிழ் மக்களுக்கு நான் ஆணித்தரமாகக் கூறவிரும்புவது கொள்கை ரீதியில் ஒன்றுபடுங்கள். சில்லறை நலன்களை ஆட்சியாளர்களிடம் இருந்து பெற முனைந்தீர்களானால் நீங்கள் காலாகாலத்தில் பெரும்பான்மையினரின் வலைக்குள் சிக்கி நாளடைவில் உங்கள் தனித்துவத்தை இழந்து விடுவீர்கள். அம்பலாங்கொடை, பலப்பிட்டிய, நீர்கொழும்பில் இருந்து கற்பிட்டி வரையான பிரதேசத்தில்; தமிழர்களாக இருந்த எம் மக்கள் சிங்களவர்களாக மாறியதை மறந்துவிடாதீர்கள்.

நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்,
வடக்கு மாகாணம்

0 Responses to ‘மஹிந்தவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவரை நாம் எதிர்க்கவும் வேண்டியதில்லை’; சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com