Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிகரித்துள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதற்காக நிபுணர்கள் குழுவொன்று விரைவில் நியமிக்கப்படவிருப்பதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி, எல்லை நிர்ணயத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் உள்ளூராட்சி சபைச் சட்டத்தில் திருத்தம் தயாரிக்கப்படவுள்ளது. இதன்போது சில வட்டாரங்களை ஒன்றாக இணைப்பதற்கும், விகிதாசாரத்தின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களைக் குறைப்பதற்கும் யோசனைகள் உள்ளடக்கப்படவுள்ளது. அதேநேரம், மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கான சகல சட்டரீதியான தடைகளையும் நிவர்த்திசெய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை அமைச்சு வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000விட அதிகமானது. இந்த எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார். பெண்களின் விகிதாசாரம் 25 வீதமாக அதிகரிக்கப்பட்டமை மற்றும் வட்டாரமுறையையும் உள்ளடக்கிய கலப்புமுறை என்பவற்றால் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்களின் விகிதாரசம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கிச் சென்றமையால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இம்முறை 1919 பெண்கள் தெரிவாகியுள்ளனர். அது மாத்திரமன்றி பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய கட்சிகளையும் திருப்திப்படுத்தும் வகையில் திருத்தங்களை மேற்கொண்டமையும் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்தது.

உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் நடைமுறைச் சிக்கல்கள் பல எழுந்துள்ளன. இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ளோம். சட்டத்திருத்தத்தை வரைவதற்காக நிபுணர்கள் குழுவொன்று விரைவில் நியமிக்கப்படும். மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் துறைசார் நிபுணர்கள், பொது மக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.

எவ்வாறு இருந்தாலும் மோசடி நிறைந்த விருப்புவாக்கு முறைக்குச் செல்லப் போவதில்லை. பழைய முறைக்குச் செல்வதில்லையென்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளது. அதுமாத்திரமன்றி மோசடியான தேர்தல் முறையை மாற்றுவதற்கே ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். எனினும், சிலர் தமது இனம், மத, குல அடிப்படையில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பழைய முறைக்குச் செல்லவேண்டும் என வலியுறுத்துகின்றனர் .” என்றுள்ளார்.

0 Responses to உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம்: பைசர் முஸ்தபா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com