Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அ.தி.மு.க. அரசு சட்ட சபையில் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பதில்லை என்று தி.மு.க. செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்றக் கூட்டத் தொடரில் தி.மு.க.வுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகள் மிகக் குறைவு. எதிர்க்கட்சி வரிசையிலே இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகளுக்கான வாய்ப்புகளும் குறைவு. நியாயமான வாதங்கள் அவைக் குறிப்பில் இருந்து காரணமின்றி நீக்கப்பட்டுள்ளன. இவற்றையும் மீறி, தலைவர் கருணாநிதி நமக்குக் கற்றுத் தந்துள்ள ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் தி.மு.க. தனது ஆணித்தரமான வாதங்களை ஆதாரங்களுடன் எடுத்துவைத்துள்ளது.

மாநில உரிமைகளைப் பறிக்கும் விதத்தில், தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதி அரசு அதிகாரிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக கவர்னர் மாளிகை தெரிவித்திருக்கும் நிலையில் ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்கிறார்கள்?.

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்குகோரி தமிழக சட்டமன்றத்தில் இருமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் இன்றைய நிலை என்ன?. தூத்துக்குடி மக்களின் உயிருடன் விளையாடும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வருவதற்குத் தயங்குவது ஏன்?.

பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்காக விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவதில் தாமதம் ஏன்?. காவல் துறை மூலம் அவர்களை மிரட்டுவதன் உள்நோக்கம் என்ன?. இந்தத் திட்டம் யாருக்குப் பயனளிக்கிறது?. திருக்கோவில் சிலைகளை மீட்கவும் அதுகுறித்து விசாரிக்கவும் ஐகோர்ட்டு நியமித்த ஐ.ஜி.க்கு ஒத்துழைக்க மறுப்பது குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கா?.

ஜனநாயகம் வழங்கியுள்ள கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் வகையில் அரசியல் இயக்கத்தினர் மீது குண்டாஸ் வழக்கு, பத்திரிகை - ஊடகங்கள் மீது வழக்கு, எதிர்க்கட்சியினர் மீது அடக்குமுறை இவைதான் இந்த ஆட்சியின் உண்மை முகமா?.

மக்கள் நலனுக்காக உருப்படியாக நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் என்ன?. இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை பேரவைக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எழுப்பியுள்ளேன். எந்தக் கேள்விக்கும் உரிய பதில் இல்லை. கேள்வி கேட்டவர்களே பதில் சொல்லும் வாய்ப்பு விரைவில் ஜனநாயக ரீதியாக ஏற்படும் சூழல் அமையும். அப்போது உண்மையான மக்களாட்சி மலரும். மாநிலத்தின் நலனுக்கும், உரிமைக்கும் பாதுகாப்பு ஏற்படும்.” என்றுள்ளார்.

0 Responses to அ.தி.மு.க அரசு சட்ட சபையில் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பதில்லை: மு.க.ஸ்டாலின்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com