Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியாவில் இடம்பெற்ற ‘எழுநீ’ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்னேஸ்வரன், சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்-மைத்திரி அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின் நிகழ்ந்த பேரங்களில் சிவசக்தி ஆனந்தனோடு நிகழ்ந்த உரையாடல் என்று சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்தது. இவ்வொலிப்பதிவை முன்வைத்து கஜன் அணி, ஆனந்தன் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது. ஆனால் அது பகிடியாகக் கதைக்கப்பட்ட ஓர் உரையாடலின் பதிவென்று ஆனந்தன் பின்னர் தெரிவித்திருந்தார். எழுநீ உரையில் விக்னேஸ்வரனும் அதை ஒரு பகிடியாக ஏற்றுக் கொண்டு பேசியிருக்கிறார். இதுவிடயத்தில் விக்னேஸ்வரன் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை கஜேந்திரக்குமாரின் நோக்குநிலையிலிருந்து பார்க்கவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. விக்னேஸ்வரனுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.இற்கும் இடையே எப்படிப்பட்ட உறவுண்டு?

தமிழ் மக்கள் பேரவைக்குள் ஒரு பங்காளிக் கட்சியாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இருப்பதனால் விக்னேஸ்வரனுக்கும் அக்கட்சிக்கும் இடையே ஏற்கெனவே உறவுண்டு. மாகாண சபைக்குள் விக்னேஸ்வரனுக்கு எதிரான சதி முயற்சிகளின் போது ஈ.பி.ஆர்.எல்.எவ். அவர் பக்கம் நின்றது. மாகாண சபையின் கடைசிக் காலத்தில் விக்னேஸ்வரன் உருவாக்கிய அமைச்சரவையில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் சகோதரர் அமைச்சராக இருந்தார். அவருக்கும் விக்னேஸ்வரனுக்குமிடையில் மதிப்பான உறவு உண்டு. இவற்றுடன், எழுநீ விருது வழங்கும் விழாவை தமிழரசுக் கட்சியின் எதிர்ப்பையும் மீறி விமரிசையாக நடத்தியதில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.இற்குப் பங்குண்டு இவ்விழாவின் போது அரங்கின் முன்வரிசையில் விக்னேஸ்வரன் அருகே ஈ.பி.ஆர்.எல்.எவ் முக்கியஸ்தர் சிலர் காணப்படுகிறார்கள்.

மேற்சொன்ன எல்லாக் காரணங்களையும் விட மற்றொரு பலமான காரணமுண்டு. அது என்னவெனில் விக்னேஸ்வரனுடன் இணைய சுரேஷ் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை என்பது.

ஆனால் கஜன் கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றார். கடைசியாக நடந்த பேரவைக் கூட்டத்தில் அவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருக்கிறார். இக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் வழமை போல ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட உரையை ஆற்றியிருந்தார். உரையில் ஈ.பி.டி.பி தவிர ஏனைய எல்லாத் தமிழ் கட்சிகளுக்கும் பொதுப்படையாக அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் விக்னேஸ்வரனின் உரைக்குப் பின் பேசிய கஜேந்திரகுமார் ஈ.பி.ஆர்.எல்.எவ் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அவ்வுரையைக் கேட்ட விக்னேஸ்வரன் கஜன் தெரிவித்த சில தகவல்களை அப்பொழுதுதான் புதியதாய் கேள்விப்பட்டது போல பதில்வினை ஆற்றியுள்ளார்.

அக்கூட்டத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக அவருடைய சகோதரர் சர்வேஸ்வரன் கலந்து கொண்டார். கட்சி மீது கஜன் சொன்ன குற்றச்சாட்டை அவரே எதிர் கொண்டார். அந்த இடத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் இருந்திருந்தால் தனது சகோதரனை விட சிறப்பாக நிலமையை கையாண்டு இருப்பாரா? ஏன்று ஒரு பேரவை உறுப்பினர் கேட்டார். அக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி கஜன் முன்வைக்கும் குற்றச் சாட்டுக்களுக்கு சுரேஷ் அணி எழுத்து மூலம் பதிலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்பதிலும் வந்துவிட்டது. இன்று இடம்பெறும் பேரவைக் கூட்டத்தில் ஏற்படக்கூடிய திருப்பங்களே இரண்டு தரப்புக்களையும் ஒரே மேசையில் சந்திக்க வைக்கலாமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கக்கூடும்.

அவ்வாறான ஒரு சந்திப்பு நிகழ்வதற்கிடையே எழுநீ விழாவில் விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார், ஆயின் கஜன் இணைவாரோ இல்லையோ விக்னேஸ்வரன் சுரேஸை இணைத்து கொள்வாரா?

அவ்வாறு இணைக்கக் கூடிய சாத்தியக்கூறுகளே அதிகமாகத் தெரிகின்றன. ஏனெனில் ஈ.பி.ஆர்.எல்.எவ் விக்னேஸ்வரனோடு நிபந்தனைகளின்றி இணையத் தயாராகக் காணப்படுகிறது. அக்கட்சிக்கு கடந்த சில தேர்தல்களில் கிடைத்த வாக்குகளை வைத்துப் பார்த்தால் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஒரு வீழ்ச்சி தெரிகிறது. எனவே தனது வாக்குத் தளத்தை சரி செய்து கொள்வதற்கும் எதிர்காலத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்கும் அவர்களுக்குப் புதிய கூட்டுக்கள் தேவை. இக் காரணத்தினாலேயே கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அக்கட்சி உதய சூரியன் சின்னத்தை அதிகமாக விரும்பியது. ஆனால் அதற்கு கஜன் வேறொரு விளக்கம் கூறுகின்றார். இந்தியாவின் ஆலோசனை காரணமாகவே ஈ.பி.ஆர்.எல்.எவ் உதய சூரியன் சின்னத்தை முதன்மைப்படுத்தியதாக கஜன் குற்றஞ்சாட்டுகின்றார்.



சுரேஷ் எதிர்பார்த்தது போல உதய சூரியனை வீட்டிற்குச் சவாலாக ஸ்தாபிக்க முடியவில்லை. தேர்தலில் ஒப்பீட்டளவில் பரவாயில்லாத சிறு முன்னேற்றமே அக்கட்சிக்கு ஏற்பட்டது. தேர்தலின் பின் சிவகரன் அக்கூட்டில் இருந்து வெளியேறிவிட்டார். அவ்வாறான கூட்டுக்களை உருவாக்குவது பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னரே சிந்தித்தவர்களுள் சுரேஸைப்போல சிவகரனும் முதன்மையானவர். உதய சூரியனை ஒரு மாற்றுச் சின்னமாக யோசித்தவர்களில் அவர் முதன்மையானவர். இது தொடர்பாக ஆனந்தசங்கரியை முதலில் சந்தித்தவரும் அவரே. ஆனால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி ஒரு சின்னத்தின் வெற்றியையும் தோல்வியையும் அச்சின்னமானது வாக்காளர் மனதில் ஆழப் பதிந்துள்ளதா? இல்லையா? என்ற அம்சம் மட்டும் தீர்மானிப்பதில்லை என்று தெரியவந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எவ்வைப் பொறுத்தவரையில் அடுத்த தேர்தலில் தனிக் கட்சியாக போட்டியிடுவதை விடவும் ஒரு கூட்டுக்குள் நின்று போட்டியிட்டால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாயிருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது. விக்னேஸ்வரனுடன் இணைந்தால் அக் கூட்டிற்குள் முழித்துக் கொண்டுத் தெரியும் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவராக சுரேசும் காணப்படுவார். எனவே அக்கூட்டுக்குள் விக்னேஸ்வரனுக்கு அடுத்த படியாக இரண்டாம் நிலைத் தலைவராக மேலெழுவதற்குரிய வாய்ப்புடையவர்களில் ஒருவராக அவர் காணப்படுவார். இக் கூட்டிற்குள் கஜன் இணைந்தால் அவரும் இரண்டாம் நிலைத் தலைவராக மேலெழுவார். அவர் இணையாவிட்டால் இக் கூட்டின் வெற்றிவாய்ப்பு ஒப்பீட்டளவில் குறையும். ஆனால் இக்கூட்டிற்குள் மேலெழக்கூடிய இரண்டாம் நிலைத் தலைவர்களுக்குரிய போட்டி ஒப்பீட்டளவில் குறையும்.



கஜன் இக்கூட்டில் இணையாவிட்டால் உடனடுத்து வரக்கூடிய தேர்தலில் அவருடைய வெற்றிவாய்ப்புக்கள் குறையக் கூடும். ஒரு பலமான மாற்று அணியை உடனடிக்கு உருவாக்க முடியாமலும் போகும். இது கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்புக்களை அதிகப்படுத்தும். அதே சமயம் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுவிடும். இது தென்னிலங்கை மையக் கட்சிகளுக்கு வாய்ப்பாக அமையக்கூடும். இவை எல்லாவற்றையும் நன்கு விளங்கி வைத்துக் கொண்டே கஜன் நிபந்தனைகளை விதிக்கிறார். உடனடிக்குத் தான் தோற்றாலும் கொள்கை ரீதியான மாற்றுத்தளம் எதிர்காலத்தில் பலமடைவது அவசியம் என்று அவர் நம்புகிறார். தான் அத்திவாரமிட்ட மாற்றுத்தளத்தைச் சிறுசிறுகச் படிப்படியாகப் பலப்படுத்த முடியும் என்றும் அவர் நம்புகிறார். கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியானது அவ்வாறு சிறுகச் சிறுகக் கட்டி எழுப்பப்பட்ட ஒன்றுதான் என்றுமவர் நம்புகிறார். கொள்கைத் தெளிவற்ற கூட்டிற்குள் இணைந்து கிடைக்கும் வெற்றியை விடவும் கொள்கைப் பிடிப்போடு தனித்து நின்று கிடைகக்கூடிய தோல்வி பரவாயில்லை என்றும் அவர் நம்புகிறார்.

தன்னோடு இணையக் கூடிய தரப்புகளிற்குள்ள குறுகிய கால மற்றும் நீண்ட கால நிகழ்ச்சி நிரல்களைக் குறித்து விக்னேஸ்வரன் முழுமையாக விளங்கி வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. கஜனோ அல்லது சுரேசோ நிபந்தனை விதிக்க முடியா அளவிற்கு தனக்கொரு பலமான கட்சியைக் கட்டியெழுப்ப அவர் உழைக்கத் தொடங்கிவிட்டார். அவரது கட்சிக்கு பதிவு இல்லை, சின்னம் இல்லை, தலைமை அலுவலகமும் இல்லை. இப்படியொரு கட்சியை உருவாக்குவதும் பதிவதும் அவருடைய அரசியல் அடித்தளத்தை பலப்படுத்தும் என்று எனது கட்டுரைகளில் பலமுறை எழுதியுள்ளளேன். உள்ளுராட்சி மன்றத் தேர்தலிற்கு முன் பின்னாக தேர்தல் கூட்டு ஒன்றை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் அவ்வாறு எழுதியிருந்தேன்.இது தொடர்பில் விக்னேஸ்வரனுக்குப் பலமாதங்களுக்கு முன்னரே தான் எடுத்துக் கூறியதாக கஜன் ஒரு வானொலி நேர்காணலில் கூறியிருக்கிறார்.



விக்னேஸ்வரனுக்கு நெருக்கமான ஓர் ஊடகவியலாளரிடம் பல மாதங்களுக்கு முன்பு இது பற்றிக் கேட்டேன். தனது கேள்வி – பதில் குறிப்பில் சுமந்திரனுக்கு பதில் கூறும் விதத்தில் ஒரு புதிய கட்சியைக் குறித்து விக்னேஸ்வரன் பூடகமாக கருத்துத் தெரிவித்த அன்று மேற்படி ஊடகவியலாளர் என்னோடு கைபேசியிற் கதைத்தார். அப்பொழுதே அவரிடம் ஒரு கட்சியைப் பதிவது குறித்தும் அல்லது ஒரு கட்சியை விலைக்கு வாங்குவது குறித்தும் கேட்டேன். விக்னேஸ்வரனிடம் ஒரு திட்டம் உண்டு. எல்லாவற்றிற்கும் அவரிடம் ஏற்பாடுகள் உண்டு என்ற தொனிப்பட அவர் பதிலளித்தார். இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரையிலும் ஏற்கனவே பதியப்பட்ட ஏதாவது ஒரு கட்சியின் பதிவை விக்னேஸ்வரன் விலைக்கு வாங்கியிருப்பதாக தெரியவில்லை.

அதே சமயம் அவருக்கு நெருக்கமான சிலரின் மூலமாக தனது சொந்தக் கட்சியைக் கட்டியெழுப்பி வருவது தெரிகிறது. நல்லூர் கோவில் வீதியில் அமைந்திருக்கும் அவருடைய வாடகை வீட்டில் இது தொடர்பான சந்திப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. ஒரு புதிய கட்சியை உருவாக்கத் தேவையான ஏதோ ஒரு கட்டமைப்பை மனதில் வைத்துக் கொண்டு அவர் ஆட்களைத் திரட்டி வருவதாக தெரிகிறது. ஒரு கட்சியை விலைக்கு வாங்க முடியாவிட்டால் உடனடுத்து வரக்கூடிய தேர்தலில் சுயேச்சைக் குழுவாகவே போட்டியிட வேண்டியிருக்கும். இதனால் போனஸ் ஆசனங்களை இழக்க வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல விக்னேஸ்வரனுடன் கஜனும் சுரேசும் இணைந்தால் அவர்கள் தமது சின்னங்களைக் கைவிட வேண்டியிருக்குமா? கடந்த தேர்தலில் சுரேஷ் தமது கட்சிச் சினத்தை கைவிடத் தயாராக இருந்தார். ஆனால் கஜன்?

விக்னேஸ்வரன் கட்டியெழுப்பிவரும் கட்சியானது செயற்பாட்டு அடித்தளத்தின் மீதோ அல்லது முழு அளவான மக்கள் பங்கேற்பு அரசியலைக் குறித்த பொருத்தமான ஒரு அரசியல் தரிசனத்தின் மீதோ கட்டியெழுப்பப்படுகின்றதா என்ற கேள்வி இங்கு முக்கியம். விக்னேஸ்வரன் ஒரு கொழும்பு மையப் பிரமுகர். அவரிடம் செயற்பாட்டு அடித்தளம் இல்லை. அவர் ஒரு முன்னாள் நீதியரசர். அதிகமாக ஒதுங்கி வாழ்ந்தவர். ஓய்வு பெற்ற பின் கம்பன் கழகத்தில் அவ்வப்போது காணப்பட்டவர். பெருமளவிற்கு ஓர் ஆன்மிகவாதி. இப்படியொரு கூட்டுக்கலவை தமிழ் அரசியலிற்குப் புதிது.

எனினும் ஒரு மாற்று அரசியல் தளம் என்று பார்க்கும்போது கோட்பாட்டு ரீதியாகவும் உத்தி பூர்வமாகவும் விக்னேஸ்வரன் புதிய தரிசனங்களோடு காணப்படுவதாக தெரியவில்லை. மிகவும் குறிப்பாக மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்தைக் குறித்து அவரிடம் பொருத்தமான அரசியல் தரிசனம் உண்டா என்ற கேள்வியுண்டு. அவருடைய கடந்த ஐந்தாண்டு கால அரசியல் ஆளுமைக்கூர்ப்பை வைத்து பார்த்தால் அவர் அதிகபட்சம் பிரதிநிதித்துவ ஜனநாயக பாரம்பரியத்திற்கு உரியவராகவே தோன்றுகின்றார். அதாவது பெருமளவு தேர்தல் மைய அரசியல் வாதியாக தோன்றுகின்றார். எனவே மக்கள் பற்கேற்பு ஜனநாயகத்திற்கு அவசியமான அரசியல் தரிசனம் ஏதும் அவரிடம் உண்டா என்பதனை அவர் கட்டியெழுப்பி வரும் கட்சியின் இறுதி வடிவத்தை வைத்துத்தான் கூற முடியும். கிடைக்கப்பெறும் தகவல்களின் படி அவர் மாற்று என்று விளங்கி வைத்திருப்பது கூட்டமைப்பிற்கு எதிரான ஒரு புதிய கூட்டைத்தான் என்றே தெரிய வருகிறது.



கஜனையும் சுரேஷையும் ஒரே மேசையில் சந்திக்க வைக்கும் முயற்சிகளை விடவும் தனது கட்சியைக் கட்டியெழுப்பும் வேலைகளிலேயே விக்னேஸ்வரன் அதிகம் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. கஜேந்திரகுமார் வராவிட்டாலும் சுரேஸ் வருவாராக இருந்தால் விக்னேஸ்வரன் அவரை ஏற்றுக்கொள்வாரா? சுரேசையும், சித்தார்த்தனையும் கஜேந்திரகுமார் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் சுரேஸ் விக்னேஸ்வரனுடன் இணைந்தால் கஜேந்திரகுமார் அந்தக் கூட்டுக்குள் சேரத் தயாரா? அண்மையில் வலிகாமத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலை அதிபர் தனது நண்பரிடம் பின்வருமாறு கேட்டிருக்கிறார் ‘பேரவைக்குள் ஒன்றாகக் காணப்பட்ட கஜனையும் சுரேசையும் வெற்றிகரமாகக் கையாண்டு தனது கூட்டிற்குள் கொண்டு வர முடியாத விக்னேஸ்வரன் எப்படி கொழும்பையும் அனைத்துலக சமூகத்தையும் தன் வழிக்குக் கொண்டு வந்து ஒரு தீர்வைப் பெற்றுத் தரப்போகிறார்’? என்று. கஜனும் சுரேசும் தங்களுக்கிடையே இணக்கம் காணத்தவறின் அது பேரவைக்கும் பாதிப்பாய் அமையும்.

கஜன் இக்கூட்டுக்குள் இணையாவிட்டால் அவருடைய வெற்றி வாய்ப்பும் குறையும் விக்னேஸ்வரனின் வெற்றி வாய்ப்பும் குறையும். ஒரு மாற்று அணியை ஆதரிப்பவர்களின் பொது உளவியலை அது பாதிக்கும். அதே சமயம் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பும் குறையும். அதோடு தமிழ் வாக்குகள் சிதறும். இது தென்னிலங்கை மையக் கட்சிகளுக்கு வாய்ப்பாக அமையும். விக்னேஸ்வரன் இப்போதைக்கு கிழக்கிற்கும் தனது நடவடிக்கைகளை விஸ்தரிக்க மாட்டார் எனத் தெரிகிறது. ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் இம்முறை கிழக்கில் மாவீரர் நாள் ஏற்பாடுகளைக் களத்தில் நின்று முன்னெடுத்துள்ளார். எனவே அக்கட்சி கிழக்கிலும் போட்டியிட்டால் அங்கேயும் வாக்குகள் சிதறுமா திரளுமா? இப்படியாக தமிழ் வாக்குகள் சிதறும் போது தமிழ் தரப்பின் பேரம்பேசும் சக்தி என்னவாகும்? ஒரு நண்பர் முகநூலில் பகிர்ந்த ஒரு சீனப் பழ மொழியில் கூறப்படுவது போல் ‘சமையற்காரர்களுக்குள் சண்டை சண்டை வந்தால் சாப்பாடு தீயுமா? ‘

0 Responses to விக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்?! (நிலாந்தன்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com