Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இத்தாலியில் கொரோனா தொற்றின் பாதிப்புக்கள் குறைந்து வருவதாக உணரப்பட்ட நிலையில், மே 3ந் திகதி அதன் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தளர்வுகளை ஏற்படுத்த அரசு யோசித்து வருகிறது. இன்று இத்தாலிய சிவில் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 23,227 ஆகவுள்ளது.

ஒருநாளின் இறப்புத் தொகை 1000க்கும் கிட்டவாக இருந்த நிலையில் அது படிப்படியாகக் குறைந்து, இன்று 482 பேர் இறப்பு பதிவாகியுள்ளது. இது இறப்பு விகிதத்தில் மந்தநிலையை உறுதிப்படுத்துகிறது. இத்தாலியின் வடக்கு லோம்பார்டி பிராந்தியத்தின் மொத்த இறப்புக்கள் 12,050 . இத்தாலியின் மொத்த இறப்புக்களில் பாதிக்கும் மேலானது.

இது இவ்வாறிருக்க ; புதிய தொற்றுக்களின் தொகை சற்று அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய தரவுகளின்படி, நோய்த்தொற்றுகள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் 0.7% விகிதமாக உயர்ந்து தொற்றாளர்கள் தொகை 107,771 ஐ எட்டியுள்ளது. இதில் 44,927 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளார்கள். அதே நேரத்தில் தீவிர சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு வாரங்களுக்கும் மேலாக வீழ்ச்சியைத் தொடர்ந்ததினால், இத்தாலியின் நீட்டிக்கப்பட்ட சுகாதார அமைப்பு மீதான அழுத்தத்தை மேலும் தளர்த்தியது.

2020 ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தியில் 9% வரை வீழ்ச்சியை எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கபட்டுள்ள நிலையில், நாட்டின் மீட்புக்குத் திட்டமிடுவதற்கும் அதன் பலவீனமான பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் தொடர்ந்து போராடுகிறது. பூட்டுதல் விதிகளை ஓரளவு தளர்த்தியதைத் தொடர்ந்து ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அடுத்த கட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய விவாதம் சூடுபிடித்தது.

இது விடயத்தில் பிராந்திய ஆளுநர்களுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உராய்வு தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், பிராந்தியங்களும் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கியுள்ளன. பெரும் இழப்பினைச் சந்தித்துள்ள வடக்கு லோம்பார்டியா மற்றும் வெனெட்டோ பிராந்தியங்கள் மே 3 ஆம் தேதி பூட்டுதல் முடிவடைவதற்கு முன்பே உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் திறக்கத் திட்டமிடத் தொடங்கின. ஆனால் இதனைத் தென் பிராந்தியங்கள் எதிர்த்தன. ​​தெற்கு காம்பானியா பிராந்தியம், ஒரு புதிய தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக வடமாநில மக்களுக்கு எல்லைகளை மூடுவதாக அச்சுறுத்திய நிலையில் உரசல்கள் கடுமையாகின்றன.

0 Responses to இத்தாலியில் குறையும் இறப்புக்கள், மீண்டும் அதிகரிக்கும் தொற்றுக்கள், பிராந்தியங்களுக்கிடையில் உரசல்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com