Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுவரும் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த மற்றும் சிறிலங்கா படையினரால் கைதுசெய்யப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் பலர் சாட்சியம் அளித்துள்ளனர்.

விசாரணை ஆணைக் குழு கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, ஓட்டமாவடி ஆகிய இரு இடங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக சாட்சியங்களை பதிவு செய்தது.

முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவன் மனைவியான கதிரவெளியைச் சேர்ந்த திருமதி நவாநந் சுதா கோரளைபற்று மேற்கு பிரதேச செயலகத்தில் வைத்து சாட்சியளிக்கையில்,

எனது கணவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினராவார். ஏனைய விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தடுப்பு முகாம்களில் இருக்கின்றனர். ஆனால் எனது கணவரை காணவில்லை. இறுதி காலகட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்த விடுதலைப் புலிகள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெவித்துள்ளார். அந்த செய்தியை ஊடகங்களில் பார்த்தேன். அது உண்மையா?

முல்லைத்தீவிலிருந்து புதுக்குடியிருப்புக்கு வருகை தந்தபோது எங்களுடன் சுமார் 3000 ற்கும் மேற்பட்டோர் வருகைதந்தனர். அவர்களை திறந்த மைதானத்திற்கு அழைத்து சென்ற இராணுவத்தினர் சுமார் 700 பேரை அன்று விசாரணைக்கென அழைத்து சென்றனர்.

17/ 05 / 2009 ஆம் திகதியன்று ஓமந்தையிலுள்ள திறந்த வெளியான மைதானத்தில் வைத்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு விடுத்தனர். அவ்வறிப்பானது விடுதலைப் புலிகளில் அங்கத்துவமான உறுப்பினர்கள் சரணடைய வேண்டும் என்பதாகும். இதனால் எனது கணவரும் சரணடைந்தார். அவருடன் சேர்த்து சுமார் 700 புலி உறுப்பினர்களும் சரணடைந்தனர்.

எனது கணவர் பெயர் நவரெட்ணசிங்கம் நவாநந் இவர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினராவார். இவருடன் கைது செய்யப்பட்டவர்கள் தடுப்பு முகாமில் உள்ளனர். ஆனால், எனது கணவரை காணவில்லை. அகதி முகாமில் இருந்து 2009.10.23 ல் எனது சொந்த இடமான மட்டக்களப்பிற்கு வந்தேன். எனது அப்பாவும் 1993 ல் விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டார். எனக்கு இரு பிள்ளைகள் உண்டு. எனது கணவர் எங்கிருக்கின்றார் என்று அறிந்துதர வேண்டும் என்றார்.

வாழைச்சேனையைச் சேர்ந்த புவனேஸ்வரன் ஈஸ்வரி என்பவர் சாட்சியமளிக்கையில்,

எனது கணவர் வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்றிருந்தார். அவர் கொழும்பு சவுத் ஆசியா ஹோட்டலில் வைத்து 2007.1.12 ஆம் திகதியன்று வெள்ளை வானில் வந்தோர்களால் கடத்தி செல்லப்பட்டதாக ஹோட்டல் முகாமையாளர் எனக்குத் தெரிவித்தார். எனது கணவருடன் சேர்த்து 4 பேரை ஹோட்டல் அறையில் வைத்து கடத்திச் சென்றுள்ளார்கள். வெளிநாட்டிற்கு அனுப்ப சென்ற முகவரையும் சேர்த்து கடத்திச் சென்றுள்ளார்கள். இதனால் யார் கடத்தினார்கள் என்று அறிய முடியாத நிலையில் உள்ளேன்.

மட்டக்களப்பு, செங்கலடி, கிண்ணையடி போன்ற ஊர்களைச் சேர்ந்த 4 பேருமே வெளிநாடு செல்ல கொழும்பு சென்றிருந்தனர். வெளிநாடு செல்லும் காலம் தாமதித்ததினால் புதுவருட தினத்திற்காக வீடு வருவதற்கு உடுப்புக்களை ஆயத்தம் செய்த வேளை வெள்ளை வானில் வந்தவர்கள் யாரோ மட்டக்களப்பிலிருந்து ஆட்கள் வந்துள்ளார்களாம் எனக்கேட்டு ஹோட்டல் அறையில் இருந்தவர்களை அழைத்துச் சென்றதாக ஹோட்டல் முகாமையாளர் என்னிடம் தெவித்தார்.

நான் உங்களைப் போன்ற பல அமைப்புக்களிடம் றையிட்டும் இதுவரை எவரும் கண்டுபிடித்து தரவில்லை. நான் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கின்றேன். எனது கணவரை கண்டு பிடித்து தாருங்கள் என்று உருக்கமாக கேட்டுக் கொண்டார்.

வாழைச்சேனையைச் சேர்ந்த பொன்னையா கணபதிப்பிள்ளை, சாட்சியமளிக்கையில்,

நான் வாழைச்சேனை பிரதேச சபையில் காவலாளியாக கடமை பார்த்து வந்தேன். எனது மகன் கணபதிப்பிள்ளை வசந்தகுமார் (வயது 28) என்பவர் வினாயகபுரத்தில் வைத்து 28.08.2008ஆம் ஆண்டு இரவு 8 மணியளவில் வெள்ளை வானில் வந்தவர்கள் அவரது வீட்டுக் கதவினை உடைத்து மகனை கடத்திச் சென்றுள்ளார்கள். இன்று வரைக்கும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை. கல்குடா பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களில் முறையிட்டும் இதுவரைக்கும் அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

இங்கு பல சோதனைச்சாவடிகள் இருந்தும் எவ்வாறு எனது மகனை கடத்திச் சென்றார்கள்? யார் கடத்திச் சென்றார்கள் என்று கூறுவதற்கு பயமாகவுள்ளது. யார் கடத்திச் சென்றார்கள் என்பது பற்றி அவரது மனைவிக்கு தெரியும். இதனைப் பற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்யப்படுவீர்கள் என அவர் பயறுத்தப்பட்டுள்ளார். இந்தப் பயத்தில் அவர் வெளிநாடு சென்றுள்ளார். எனவே, எனது மகனை எப்படியாவது கண்டு பிடித்து தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

ஓட்டமாவடியைச் சேர்ந்த உசனார் றெஸ்சினா சாட்சியமளிக்கையில்,

எனது கணவன் பெயர் அபுபக்கர் இல்லி யாஸ் வாழைச்சேனை பொலிஸில் புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வந்தார். 2007.7.10ஆம் திகதியன்று வாழைச்சேனையில் வைத்து கருணா குழுவினரால் சுடப்பட்டு காயமடைந்தார். இது தொடர்பாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பின்பு உடல் சுகவீனமுற்றதினால் வைத்தியசாலையில் இருந்து வீடு வந்து 15 நாட்களின் பின்பு காணாமல் போயுள்ளார்.

இது விடயமாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்தேன். இதுவரைக்கும் எனது கணவர் கண்டு பிடிக்கப்படவில்லை. எனவே, எனது கணவரை எங்கிருக்கிறார் என்று கண்டுபிடித்து தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

0 Responses to சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் சாட்சி! தொடர்புகொள்ள உதவுமாறு கோரிக்கை!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com