Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயக விடுதலைக்கான எமது போராட்டம் ஜனநாயக விழுமியங்களுக்கூடாகவும் சர்வதேச நியமங்களுக்கூடாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கான செயற்பாடுகளில் விரைவாக ஒன்றுபடுதலே 1983 யூலை இன வன்செயலில் கொல்லப்பட்ட மக்களுக்கான நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத்தின் திட்டமிட்ட இனவழிப்பின் ஓர் அங்கமாக அமைந்த கறுப்புயூலை இனப்படுகொலையின் 29வது ஆண்டு நினைவேந்தல் உலகத் தமிழ் தேசங்களில் நினைவு கூரப்படுகின்றது.

இந்நாளினை நினைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

துயர்சுமந்த 1983 கறுப்பு யூலை நாட்களை 29வது வருடமாக எம்மினிய தாயகத்தமிழர்களும் உலகெங்கும் சிதறிவாழும் ஈழத்தமிழ் மக்களும் ஏனைய தமிழர்களும் இந்த வாரத்தின்போது நினைவு கொள்கின்றோம்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் இறைமையும் இருப்பும் மேற்கு நாட்டு குடியேற்ற ஆட்சிகளினால் கபளீகரம் செய்யப்பட்டு பின்பு தீவில் வாழ்ந்த சிங்களபௌத்த தேசியவாதிகளிடம் தமிழர்கள் அரசியல் அடிமைகளாகக் (political captives) கையளிக்கப்பட்டு ஆறு தசாப்தங்கள் கடந்துவிட்டன. இன்னமும் தமிழ்மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமையையும் அரசியல் இறைமையினையும் கையிலெடுக்கப் போராடிக்கொண்டே இருக்கின்றார்கள்.

1948ல் மலையக தமிழ் மக்களின் வாக்குரிமையினைப் பறித்து, அவர்களினை நாடற்றவர்களாக்குவதன் மூலம் இலங்கைத்தீவில் தமிழ்மக்களின் இருப்பைத் தகர்த்தெறிவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தமிழின ஒழிப்பு பல பரிமாணங்களில் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

அரசியலமைப்பினூடாகவும், பாராளுமன்ற சட்டங்களினூடாகவும், சிங்கள பௌத்த மயமாக்கப்பட்ட நிர்வாக மற்றும் இராணுவக் கட்டமைப்பு மூலமாகவும் கட்டமைக்கப்பட்ட வன்செயல்கள் (structural violence) தீவில் வாழ்ந்த தமிழ்ப் பேசும் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டன.

இச்சட்டபூர்வமான கட்டமைக்கப்பட்ட வன்செயல்கள் மூலம் தமிழ்மக்கள் மீது விரைவாக நிறைவேற்ற முடியாமற்போன விடயங்களினை வெற்றிகரமாக அடையும் நோக்குடன் சிங்கள பௌத்த பேரின அரசுகள் காலத்திற்கு காலம் இனரீதியான வன்செயல்களைக் கட்டவிழ்த்து விட்டு வந்துள்ளார்கள்.

1915,ல் முஸ்லீம் மக்களுக்கு எதிராக கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட வன்செயல்கள் தொடர்ந்து 1956, 1958, 1977, 1981, 1983, 2000, 2001, 2006, 2011, 2012 என சிறிய அளவிலும் பெரிய அளவிலுமாக இன்றுவரை தொடர்ச்சியாகத் தமிழ் பேசும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதே உண்மை.

இதேபோன்று 1940களில் விவசாய அபிவிருத்தியின் பேரால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் நிலங்களினைத் துண்டாடிச் சிதைக்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்றுவரை பல்வேறு பெயர்களில் (labels) தொடரப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. முரண்பாடுகளுக்கு பின்னான மீள பிவிருத்தியும்; பாதுகாப்பும் என்று கூறிக்கொண்டு எங்கள் தாயகநிலம் இன்றும் நாளாந்தம் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இவ் இனரீதியான வன்செயல்களுக்கான தோற்றுவாய் தற்செயல் நிகழ்ச்சிகள் போல் வெளிக்குத் தோற்றமளித்தாலும் அவை மிகத் துல்லியமான இலக்குகளுடன் திட்டமிடப்பட்டு ஆட்சியாளர்களினாலும் அவர்களினால் ஏவப்பட்ட சமூகவிரோத சக்திகளினாலும் முன்னெடுக்கப்பட்டது எவ்வித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது.

1983 யூலை இனக்கலவரமும் இத்தகைய பின்னணியிலேயே உருவாக்கப்பட்ட இன ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டமாகும். மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு தமிழ் மக்களின் சொத்துக்களும் தொழில் முயற்சிகளும் சூறையாடப்பட்டன.

தமிழ்ப் பெண்களும் தாய்மாரும் பாலியல் வன்முறைக்கும் மானபங்கத்திற்கு உட்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டனர். இளைஞர்களும் முதியோரும் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் உயிரோடு கொழுத்தப்பட்டனர். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் அதி உயர்பாதுகாப்பு மிக்க வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல்கைதிகள் அடித்தும் வெட்டியும் கண்கள் பிடுங்கப்பட்டும் கொல்லப்பட்டனர். இக்கொடுமை இரண்டு நாட்களுக்கு அடுத்தடுத்து நடந்தது.

அன்றைய சிறீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா ‘போர் என்றால் போர்’ என்று பகிரங்கமாக அறிவித்து தமிழினப் படுகொலையினைப் பிரகடனப்படுத்தினார். அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் தமிழ் மக்களுக்காக அன்று குரல் கொடுத்திருக்காவிட்டால் சிறீலங்காவின் தமிழின ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் 1983 ,லேயே நிறைவுபெற்றிருக்கும்.

இன்று 2012 யூலையிலும் கூட வவுனியா சிறையில் தமிழ் அரசியல்கைதி ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் (Genocide) பின்பும் கூட சிங்கள பௌத்த தேசியவாதிகளினதும் அவர்களால் கட்டமைக்கப்பட்ட ஆட்சியினதும் இனவெறி அடங்கவில்லை என்பதற்குச் சான்றாகும்.

காலத்திற்குக் காலம் தமிழ்தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களினை கிழித்ததும், நடைமுறைப்படுத்தத் தயாரில்லாத விசாரணைக்குழு அறிக்கைகளினை தயாரிப்பதற்கென்று காலத்தினை நீட்டியடித்து சர்வதேசத்தினை ஏமாற்றிவருவதும் தனது இறைமையின் பெயரால் சர்வதேச சட்டங்களையும் மனிதாபிமான நியமங்களினையும் மீறிவருவதும் இன்றைய சிறீலங்காவின் சாணக்கியத்திறமையாக மாறியுள்ளன.

இத்தகைய நிலையில் தான் 1983 யூலையில் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலையின் துயர்நினைவுகளைச் சுமக்கும் பாரிய பொறுப்பு எமக்கு முன் காத்திருக்கின்றது. ஒன்றுபட்ட சிறிலங்காவின் சிங்கள பௌத்த தேசியவாத கட்டமைப்புக்குள் தமிழ்மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழமுடியாது என்பது இன்று உலகின் முன் வெளிப்படை உண்மையாகியுள்ளது.

சர்வதேசத்தினதும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தினதும் நேரடியான தலையீட்டின் மூலம் சிறீலங்கா தீவில் தமிழினப்படுகொலையினையும் தமிழர்தாயகத்தின் நில அபகரிப்பினையும் தடுத்து நிறுத்துதல் மிக அவசியமானதாகும்.

சிறீலங்காவினால் மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவிதமான உள்ளக விசாரணைகளும் நியாயம் வழங்கும் பொறிமுறைகளும் குற்றம் செய்தோரைப் பாதுகாப்பதற்கும் அவர்கள் தொடர்ந்தும் தமிழினப் படுகொலையிலும் மனிதகுலத்துக்கெதிரான குற்றங்களிலும் ஈடுபடுதற்கு வாய்ப்பளிப்பதற்கும் மட்டுமே துணை புரியும்.

இதனை நன்குணர்ந்தே, அமெரிக்காவில் பவலோ நகரில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வின் போது நாம் ‘அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறை’ ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் தமிழீழதேசத்தில் தலைவிரித்தாடும் உயிரழிப்பு, இன அடையாள அழிப்பு, மரபு நிலக்கவர்வு போன்ற அராஜகங்களைத் தொடர்ச்சியான வகையில் அனைத்துலக சமூகத்தினதும், அரசு சாராதொழுகும் மனித உரிமை அமைப்புக்களினதும், ஐ.நா.வின் மனித உரிமை அமைப்புக்களினதும் இடையறாத கண்காணிப்புக்குட்படுத்தி சிறீலங்காவானது இன, மத வெறியோடமைந்த இனவாத தீவு ஒன்றென்பதனை அனைத்துலக அனுசரணையோடு, ஆவணப்படுத்துவதென முடிவு மேற்கொண்டிருந்தோம்.

இதனை விரைந்து செயற்படுத்துவதே இன்று எம்முன் உள்ள தலையாய கடமையாகும். தாயக விடுதலைக்கான எமது போராட்டம் ஜனநாயக விழுமியங்களுக்கூடாகவும் சர்வதேச நியமங்களுக்கூடாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

அதற்கான செயற்பாடுகளில் விரைவாக ஒன்றுபடுதலே 1983 யூலை இன வன்செயலில் கொல்லப்பட்ட மக்களுக்கான நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to துயர் தோய்ந்த “கறுப்பு யூலை-1983” நாட்களை நினவிற் கொள்வோம்: தமிழீழ அரசாங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com