Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரிய தலைநகர் டமாஸ்கசில் நேற்று புதன் நடைபெற்ற சண்டையில் இறந்தவர்கள் தொகை 214 என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இவர்களில் பொது மக்கள் 124 பேர் படையினர் 62 பேர் போராளிகள் 28 பேராகும்.

நேற்று சிரிய பாதுகாப்பு அமைச்சர் சகிதம் உயர் மட்டக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல் போராளிகள் தரப்பிற்கு கிடைத்த பெரிய வெற்றி என்று மேலைத்தேய ஊடகங்கள் மதிப்பீடு செய்துள்ளன.

தலைநகர் டமாஸ்கஸ்சில் இருப்பது உயிராபத்து மிக்க காரியம் என்று கருதி மக்கள் அங்கிருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர், அதேவேளை அங்கிருந்த டேனிஸ் தூதராலய அதிகாரிகளும் தற்காலிகமாக கெய்ரோவிற்கு நகர்ந்துள்ளார்கள்.

சிரிய தலைவர் ஆஸாட்டின் மாளிகை டமாஸ்கஸ்சில் உள்ள மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ளது, மோட்டார் தாக்குதலை நடாத்தக்கூடிய ஆரைக்குள்ளேயே அவருடைய மாளிகை அமைந்துள்ள காரணத்தால் அங்கிருந்து வெளியேறி கடற்கரைப்பக்கமாக உள்ள தனது பிறந்த நகரமான லற்றாக்கியாவுக்கு அவர் இடம் மாறியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஆஸாட்டின் மைத்துனரே அவருடைய இரகசிய எண்ணங்களை நடைமுறைப்படுத்துபவராகும், இவரது இழப்பால் ஆஸாட்டின் வலது கையும் முறிந்துவிட்டது.

ஆபத்தைத் தவிர்க்க தனது மனைவியுடன் ஆஸாட் வெளியேறியுள்ளதாக வேறு சில தகவல்கள் கூறுகின்றன.

மேலும் டமாஸ்க்கஸ்சை விட்டு அவர் வெளியேறுவாராக இருந்தால் கடாபி இழைத்த தவறை அவரும் இழைத்தாக முடிந்துவிடும்.

நேற்று கொபி அனான் ரஸ்ய அதிபர் புற்றினுடன் நடாத்திய பேச்சுக்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு சபையில் சிரிய அதிபருக்கு எதிராக வரப்போகும் புதிய தீர்மானத்திற்கு எதிராக ரஸ்யா வீட்டோ பாவிக்காது என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது, அதுபோல ரஸ்யா பின்வாங்கினால் அதைக் காரணம் காட்டி சீனாவும் பல்டியடித்துவிடும்.

ஆக, ரஸ்யா – சீனாவை நம்பிய சதாம் உசேன், கடாபி போன்றவர்களுக்கு ஏற்பட்ட கடைசிநேர நயவஞ்சகமே இப்போதும் அரங்கேறியுள்ளது.

இந்த இரண்டு நாடுகளும் உண்மையாக சிரிய அதிபரின் நண்பர்கள் தானா இல்லை இவர்கள் நடித்தது நாடகமா.. இதுதான் இப்போதைய கேள்வி.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி நேற்று கருத்துரைக்கும்போது சிரியாவில் நிலமை நாளுக்கு நாள் மோசமடைவதாக தெரிவித்தார், ஆகவே சிரியாவுக்கு உலக சமுதாயம் உதவி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் கூறினார்.

அவர் குறிப்பிடும் உதவி எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக்கைப் போல ஆஸாட்டை பதவி விலக்குவதுதான்.

சற்று முன்னர் பிரிட்டன் பிரதமர் ஆஸாட் பதவி விலகும் நேரம் வந்துவிட்டது, ஐ.நா உடனடியாக தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.

ரஸ்யா – சீனா இரண்டும் வீட்டோவை பாவித்து சிரியாவை காப்பாற்றாவிட்டால்..

அமெரிக்கா – பிரான்ஸ் – பிரிட்டன் ஒரு புறமும் ரஸ்யா – சீனா மறுபுறமுமாக இந்த நாடகம் அரங்கேறியுள்ளது என்ற கருதவேண்டி வரும்.

நடைபெற்றது ஐந்து வீட்டோ அதிகார நாடுகளின் நாடகமா இல்லையா என்பதை ஒரு சில தினங்களில் அறிய முடியும்.

தற்கொலைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஆஸாட் தனது பிறந்த ஊரில் இருந்து திட்டமிடுவதாகவும் தாக்குதல் குறித்து இதுவரை அவர் யாதொரு கருத்தும் வெளியிடவில்லை.

அவருடைய மனைவி தற்போது ரஸ்யா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அலைகள்

0 Responses to சிரியாவில் நேற்று மட்டும் 214 பேர் கொலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com