அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி. கடந்த 2009-ம் ஆண்டு ஒபாமா அதிபராக பொறுப்பு ஏற்றார். இதை தொடர்ந்து அவரது நிர்வாகத்தில் வெளியுறவு துறை மந்திரியாக ஹிலாரி கிளிண்டன் பொறுப்பேற்றார்.
அதில் இருந்து அவர் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தூதரக ரீதியான நட்புறவு கொண்டுள்ளார். அதற்காக அவர் இதுவரை 102 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அதன் மூலம் 8 லட்சத்து 43 ஆயிரத்து 839 மைல் தூரம் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதனால் அதிக அளவிலான நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவு மந்திரி என்ற பெருமையை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு முன்பு பில் கிளிண்டன் நிர்வாகத்தில் வெளியுறவு துறை மந்திரியாக இருந்த மெடிலினி ஆல்பிரைட் 98 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.
அவரது சாதனையை கடந்த மாதம் ஹிலாரி முறியடித்தார். 99-வது நாடாக பின்லாந்துக்கும், 100-வது நாடாக லாட்வியாவுக்கு சென்றும் சாதனை செய்துள்ளார்.
இஸ்ரேல் சென்றுள்ள அவர் இதுகுறித்து பேட்டி அளித்தார். அப்போது, இது எனக்கு பெருமையாக உள்ளது. அதே நேரத்தில் நான் எனது கடமையை செய்கிறேன். இன்னும் நிறைய நாடுகளுக்கு செல்ல விரும்புகிறேன். எனினும் தற்போது இஸ்ரேல்தான் எனது கடைசி பயணமாக இருக்கலாம் என்றார்.



0 Responses to 3 ஆண்டுகளில் 102 நாடுகளுக்கு சென்று சாதனை படைத்த ஹிலாரி