கௌஹாத்தியில் இளம்பெண்ணொருவர் வீதியில் வைத்து கும்பல் ஒன்றினால் மானபங்கப்படுத்தப்பட்ட போது அதை முதலில் படம்பிடித்து ஒளிபரப்பிய நியூஸ் லைவ் சேனலின் எடிட்டர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
சற்று முன்னர் டுவிட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்ட ஆதனு புயன் (Atanu Bhuyan) எனும் குறித்த எடிட்டர், இன்று மாலைக்குள் இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 9ம்திகதி அசாம் மாநிலத்தின் கௌஹாத்தியில் இளம்பெண் ஒருவரை கும்பலொன்று சுற்றிநின்று மானபங்கப்படுத்த முயன்ற சம்பவத்தை கௌரவ் ஜோதி நியோக் எனும் நியூஸ்லைவ் ஊடகவியலாளரும், அவரது வீடியோ ரிப்போர்ட்டரும் படம்பிடித்தனர். எனினும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஜோதி நியொக் நேற்று தனது ஊடக பதவியை ராஜினாமா செய்தார்.
அப்பெண் மானபங்கப்படுத்த முயற்சி மேற்கொள்ளபட்ட போது, அதற்கு துணைபோனார் என அவர் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தினர். ஜோதி நியோக் இதனை மறுத்திருந்தார். முதலில் நியூஸ்லைவ் சேனலில் இக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்ட போது, அப்பெண் மதுபோதையில் குடித்துவிட்டு நடுவீதியில் தள்ளாடியதால், அவருக்கு பாடம் கற்பித்து தரவேண்டும் என்ற நோக்கத்தில் பொதுமக்கள் அப்பெண்ணை அடித்ததாக வர்ணணை செய்திருந்தது.
எனினும் சம்பவத்திற்கு மறுநாள் வர்ணணை செய்த போது, அப்பெண் மானபங்கப்படுத்தப்பட்டதாவும், பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனவும் தெரிவித்தது. இதையடுத்தே இச்சம்பவத்தில் ஊடகத்தின் பங்கு குறித்து சர்ச்சை எழுந்தது. ஜோதி நியோக் மற்றும் வீடியோ ரிப்போர்டர் இருவரையும் காவற்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
நியூஸ் லைவ் ஊடகம் ஒழுங்கீனமாக செயற்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர் அகில் கோகய் மற்றும் அசாம் முதல்வர் தருண் கோகோய் ஆகியோரும் நேரடியாக குற்றம் சுமத்தியிருந்தனர். இந்நிலையிலேயே நியூஸ்லைவ் ஊடக எடிட்டரும் இப்பிரச்சினைக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கௌஹாத்தி சம்பவம்: படம்பிடித்த டிவி சேனலின் எடிட்டர் ராஜினாமா செய்கிறார்? (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
தம்பியன்
17 July 2012



0 Responses to கௌஹாத்தி சம்பவம்: படம்பிடித்த டிவி சேனலின் எடிட்டர் ராஜினாமா செய்கிறார்? (காணொளி இணைப்பு)