Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தி.மு.க தொண்டர்கள் தமழீழம் அமைவதற்காக உயிரும் கொடுக்க வேண்டும்.. சில மாதங்களுக்கு முன்னர் மு.கருணாநிதி கொடுத்த குரல் இது.

மறுபடியும் டெசோவிற்கு புத்துயிர் கொடுத்து தமிழீழத்திற்காக தி.மு.க போராடப் போகிறது என்ற போது மு.கருணாநிதிக்கு என்ன நடந்தது என்று பலர் யோசித்தார்கள்.

பொதுவாக திமுகவிற்குள் உட்கட்சிப் பிரச்சனை எழுந்தால் அவர் தமிழீழம் என்பது வழமை என்பதால் அவருடைய டெசோவை எவரும் பெரிதுபடுத்தவில்லை.

இப்போதும் கூட, அவருடைய டெசோ தமிழீழத்தை பிரகடனப்படுத்தாது என்று அறிவித்ததையும் யாரும் உணர்ச்சிகரமாக பெரிதுபடுத்தவில்லை.

இந்த இடத்தில்தான் மு.கருணாநிதியின் தோல்வியும், அவருடைய கனவுகளின் தோல்வியும் தெரிகிறது.

மு.கருணாநிதி உலகளாவிய தமிழருக்கான தலைவர், உண்மையான தமிழ் ஆர்வலர், உண்மையான தமிழ்க் கலைஞர் என்று தமிழ் மக்கள் அவரைக் கருதியிருந்தால் இந்த முடிவைக் கேட்டதும், அவர்கள் குமுறியிருப்பார்கள், ஆனால் மக்கள் முதுகைத் தட்டிவிட்டு நடந்துவிட்டார்கள்.

மு.கருணாநிதிக்கு மனதில் மக்கள் கொடுத்திருந்த உலகத் தமிழ்த் தலைமைக்கான அரியாசனம் பறிக்கப்பட்டுவிட்டது என்பதுதான் இன்றைய மக்கள் மௌனத்தின் பொருள்.

டெசோவின் எலும்புக்கூடு மறுபடியும் தோண்டி எடுக்கப்பட்டபோது இரண்டு கேள்விகள் எழுந்தன..

முதலாவது 2 ஜி வழக்கில் சிக்குப்பட்டுள்ள மு.கருணாநிதி வழக்கில் பாதகம் ஏற்பட்டால் தமிழீழக் கொள்கையை உயர்த்தலாமென்று இந்த மாதிரி அடுக்கு பண்ணுகிறாரா..?

இரண்டாவது மத்திய அரசும், உளவுப்பிரிவும் வகுத்துள்ள கொள்கைக்கு கையாளாக போயுள்ளாரா..? என்ற இரண்டு கேள்வி ஏற்பட்டது.

உண்மையில் ஈழத் தமிழ் மக்களுக்கு அவருடைய முயற்சியால் ஏதாவது பயன் கிடைக்குமா என்ற கோணத்தில் தொல். திருமாவளவனைத்தவிர வேறு யாரும் கனவுகூட காணவில்லை.

இப்போது டெசோ குறித்து நேர்கோட்டில் வரும் செய்திகளை சற்று திருப்பிப் போட்டால் வேறொரு பதில் கிடைக்கும்.

வரும் தேர்தலில் காங்கிரசை ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாதளவுக்கு சீமான், வை.கோ போன்றவர்கள் பிரச்சாரம் செய்ய தயாரகிறார்கள், அது மத்தியில் காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும்.

ஆகவே இதிலிருந்து காங்கிரசை காப்பாற்ற சட்ட நடவடிக்கை அவசியம், அதை நேரடியாக மத்தியஅரசு வெளியிட்டால் மு.கருணாநிதியும் அதற்கு ஆதரவு என்ற எதிர்ப்பிரச்சாரம் வரும் அது திமுகவையும் பாதிக்கும்.

ஆகவேதான் டெசோவை ஆரம்பித்து தமிழீழம் கேட்பது போல மு.கருணாநிதி ஒரு நாடகத்தை ஆரம்பிக்க, மன்மோகன் சிங் அரசு அதைத் தடுப்பதைப்போல ஒரு சுற்றறிக்கையை அனுப்பினால் ஏதோ வீரப்புலி மு.கருணாநிதியின் தமிழீழ வேகத்தை மத்திய அரசு அடக்கிவிட்டது போல நாடகத்தை முடித்துவிடலாம் என்ற வியூகம் இதில் இருக்கிறது.

அதாவது கருணாநிதி சிக்சர் அடிப்பது போல இலகுவாக பந்தைத் தூக்கி வீச மத்திய அரசு அதை வீறாப்பாக அடிப்பதுபோல ஒரு நாடகம்.

இப்படியாக சிந்தித்தால் டெசோ நாடகத்தின் உண்மை ரூபம் தெரியவரும்..

ஆனால் 1968 ம் ஆண்டு காங்கிரஸ் கொண்டுவந்த பழைய சட்டமே இப்போது அமலுக்கு வரவேண்டுமெனக் கேட்கப்பட்டுள்ளது.

திராவிட நாட்டு கோரிக்கையை தடுக்க கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்திற்கு அடி பணிந்து அன்றே அதை முற்றாக தலைமுழுகியது தி.மு.க தான்.

அன்றில் இருந்து இன்றுவரை திராவிட நாட்டு கொள்கையை கைவிட பெரும் போட்டி போட்டது திராவிட தலைவர்களான அண்ணாவும், ஈ.வி.கே சம்பத்தும், பின் மு.கருணாநிதியும்தான்.

மூன்று மாதங்களுக்கு முன் உயிரைக் கொடுக்க முற்பட்ட மு.கருணாநிதி ஒரு சுற்றறிக்கையை பார்த்து மூன்றே நிமிடத்தில் பின்வாங்கியிருக்கிறார் என்றால் அதன் பொருள் நாடகம் அல்லாமல் வேறென்ன..?

அரசியல் என்பது நாடகம்தான் ஆனால் அது நாடகம் என்று தெரியாதவாறு ஆடப்பட வேண்டிய நாடகம் ஆனால் அது மு.கருணாநிதிக்கு தெரியவில்லை அதுதான் இப்போதுள்ள சிக்கல்.

மேலும் இந்திய நடுவண் அரசை பாராட்ட வேண்டும், அவர்கள் தமது அறிக்கையில் ஓர் உண்மையை சொல்லியுள்ளார்கள்.

தமிழ் நாட்டில் ஒரு தனிநாட்டு கோரிக்கை வரக்கூடாது, தமது தலைவர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்றே அவர்கள் வெளிப்படையாகக் கூறியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் தமிழர் இல்லாமல் இந்திக்காரர் இருந்திருந்தால் அவர்கள் இலங்கையில் தமிழருக்கு தனிநாடு அமைப்பதில் தடையேதும் போட்டிருக்க மாட்டார்கள்.

ஈழத்தில் இறந்த இவ்வளவு தமிழரும் தமிழ் நாட்டு தமிழருக்கு ஒரு தனிநாடு கிடைக்கக்கூடாது என்பதற்காகவே கொல்லப்பட்டார்கள் என்று அந்த அறிக்கை தெட்டத் தெளிவாகக் கூறுகிறது.

இந்த இடத்தில் தமிழ்நாட்டு தலைவர்கள் ஈழத் தமிழினத்திற்கு எவ்வளவு கடமைப்பட்டவர்கள் என்பதை புரிந்திருக்க வேண்டும்.

டெசோ ஈழத் தமிழருக்கு ஓர் உண்மையை எடுத்துரைத்துள்ளது..

மு.கருணாநிதி போன்ற தமிழக தரகு தலைவர்களிடம் மன்றாடுவதை விடுத்து, முடியுமானால் நடுவண் அரசுடன் சுய மரியாதையுடன் நேருக்கு நேர் இருந்து பேசுங்கள், இல்லையேல் இந்தியா என்று இனி வாயினாலும் உச்சரிக்காதீர்கள் என்ற செய்தியை டெசோவின் இரண்டாவது மரணம் எடுத்துரைத்துள்ளது.

தமிழர் கூட்டமைப்பிற்கு அந்தத் தகுதி இருப்பதாக தெரியவில்லை, அமாவாசை பார்த்து, ஒரு மதத்தின் ஆலயம் சென்று வேட்பு மனு தாக்கல் செய்யுமளவுக்கு அந்தக் கட்சி பக்திபூர்வமாக வந்துள்ளது.

தமிழ் தேசியம் மதங்கள் அனைத்தையும் சமமாக மதிக்க வேண்டும், அது தன்னை ஒரு மதத்தால் அலங்கரிக்கக் கூடாது. அதுகூட தெரியாத கூட்டமைப்பை நம்பினால் மு.கருணாநிதியை நம்பியது போலவே ஒரு நாள் நட்டாற்றில் நிற்க நேரிடும்.

முடியுமானால் புலம் பெயர் தமிழர் முயற்சிக்கலாம்..

அதற்கு முதலில் புலம் பெயர் தமிழர் ஒன்றுபட்டு அரசியல், பொருளாதார புதுப்பலம் பெற வேண்டும். அமெரிக்கரையும், சீனரையும், வட இந்தியரையும் கூழைக்கும்பிடு போடாமல் நெற்றிக்கு நெற்றி சந்திக்கும் ஆண்மையையும் ஆளுமையையும் அவர்கள் பெற வேண்டும்.

மற்றப்படி இந்தக் கல்லை நகர்த்த தகுதியாக வேறு எவரும் இருப்பதாக தெரியவில்லை.

அலைகள்

0 Responses to மு.கருணாநிதியின் டெசோ இரண்டாவது மரணம் சொல்லும் செய்தி என்ன?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com