சுவிற்சர்லாந்தில் பொது இடங்களில் சிகரெட் புகைப்பதற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் எனக்கோரி நடத்தப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளது. சுமார் 70% வீதமான மக்கள், இந்த யோசனைக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். இதுவரை சுவிற்சர்லாந்தில் பொது இடங்களில் சிகரெட் புகைப்பதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை. பெரும்பாலும், ஹோட்டல்கள், உணவகங்கள், மதுபான நிலையங்கள் என்பவற்றில் சிகரெட் புகைப்பவர்களுக்கென தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. எனினும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மோசமான சுகாதார கேடுகளை இது கொண்டு வந்துவிடுவதாக விமர்சனம் எழுந்திருந்ததால், Smoking Rooms எனப்படும் இந்த அறைகள் கூட உருவாக்கப்பட கூடாது என யோசனை தெரிவிக்கப்பட்டது. மேலும் பேருந்து நிலையங்கள், கடைத்தெருக்கள் என அனைத்து பொது இடங்களிலும் சிகரெட் புகைப்பதற்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என புதிய யோசனை தெரிவிக்கப்பட்டு மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜெனிவாவில் மாத்திரமே இந்த யோசனைக்கு 52% வீத வரவேற்பு அளிக்கப்பட்டது. மற்றைய அனைத்து மாநிலங்களும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தன. புகைப்பிடிக்காதவர்களுக்காக அதிகமாக செலவழித்து வரும் ஹோட்டல்கள், இந்த யோசனை நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்னமும் தலையிடியை எதிர்நோக்கியிருக்கும் என்கிறது சுவிற்சர்லாந்து வர்த்தக சம்மேளனம். புகைப்பிடிப்பவர்களுக்கென தனியாக அறைகள் அமைக்கப்படுவதை சில மாநிலங்கள் நிறுத்தியிருந்ததால், மாரடைப்பு, நுரையீரல் பாதிப்பு நோய்களினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் 20% விதமாக குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்ததாக இந்த யோசனையை முன்வைத்த சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பொது இடங்களில் சிகரெட் புகைப்பதற்கு முழுத்தடையா? : நிராகரித்தனர் சுவிற்சர்லாந்து மக்கள்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
24 September 2012
0 Responses to பொது இடங்களில் சிகரெட் புகைப்பதற்கு முழுத்தடையா? : நிராகரித்தனர் சுவிற்சர்லாந்து மக்கள்