Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தான் சிறையில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் இந்தியாவின் சரப்ஜித் சிங்கையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்
இம்ரான்கானின் தெக்ரிக்-இ இன்சாப் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு 166 பேரை பலியெடுத்த மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட ஒரே ஒரு நபரான அஜ்மல் கசாப்புக்கு நேற்று முன் தினம் இந்தியாவில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

4 ஆண்டு வழக்கு விசாரணைகளின் முடிவில் அண்மையில் இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும் நேற்று முன் தினம் திடீரென இரகசியமாக அஜ்மல் கசாப்புக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டிருந்தமைக்கு எதிர்க்கட்சிகள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியிருப்பதாலும், பீகார் உட்பட வட மாநில தேர்தல்களில் பிரச்சார முன்னெடுப்புக்காகவும், கசாப் மீதான தூக்குத்தண்டனை நிறைவேற்றத்தை காங்கிரஸ் சாதகமாக பயன்படுத்தி கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கசாப் மாத்திரமல்லாது நாடாளுமன்ற தாக்குதல் கைதியான அப்சல் குருவுக்கும் உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இதேவேளை அஜ்மல் கசாப்பின் பூதவுடலை பாகிஸ்தான் வாங்க மறுத்திருந்ததாலும், இந்தியாவின் நீதி நடவடிக்கைகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்திருந்தது.

எனினும் கசாப்பின் தூக்கிற்கு பழிவாங்கும் வகையில் இந்தியாவில் தாக்குதல்களை விரிவுபடுத்த போவதாக தலிபான்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ இன்சாப் கட்சி நேற்று நடத்திய போராட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சித் தலைவர் நயமுல்லாகான்,  இந்தியா 4 ஆண்டுகளிலேயே கசாப்பை தூக்கிலிட்டு கொன்றுவிட்டது. அதற்கு பதிலடியாக உடனடியாக நமது பாகிஸ்தான் அரசும் சரப்ஜித் சிங்கை விரைவில் தூக்கிலிட வேண்டும். அதற்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தடையாக இருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சரப்ஜித் சிங்கின் சட்ட ஆலோசகர் அவாயிஷ் ஷேக், கடும், சரப்ஜித் சிங் வழக்கு பற்றி தெரியாமல் கீழ்த்தரமாக அரசியல் நடத்துகின்றனர்.

கசாப் தூக்கிலிடப்பட்டதற்கு பாகிஸ்தான் மக்கள் எதிர்க்கவோ, கோபம் அடையவோ இல்லை. இம்ரான் கட்சியின் கோரிக்கையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார் .

பாகிஸ்தானில் விரைவில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலி மதவாத அமைப்புக்களின் ஆதரவை பெறுவதற்கே அக்கட்சியினர் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானில் கடந்த 1990ம் ஆண்டு பல இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், சரப்ஜித் சிங்கை பாக். காவல்துறையினர் கைது செய்தனர். சரப்ஜித் சிங் ஒரு விவசாயி எனவும் குடிபோதையில் இருந்த போது, வழிதவறி பாக்.எல்லைக்குள் சென்றுவிட்டார் எனவும் அவரது குடும்பத்தினர் கூறினர்.

எனினும், 20 வருடங்களுக்கு மேலாகா நடைபெற்று வந்த இது தொடர்பிலான விசாரணை முடிவில், சரப்ஜித் சிங்கிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்.

இருப்பினும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலிமையிலான அரசு, சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட மரனதண்டனையை காலவரையின்றி நிறுத்திவைத்துள்ளது. சரப்ஜித் சிங் தற்போது லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கறிஞர் மூலம் சமீபத்தில் கருணை மனு தாக்கல் செய்திருந்தார்.

0 Responses to கசாப் தூக்கிற்கு பதிலடியாக சரப்ஜித் சிங்கிற்கும் உடன் தூக்கு வேண்டும்: இம்ரான் கான் கட்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com