2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளைக் கொண்டு நடத்தும் உரிமையை கட்டாருக்கு வழங்குவதென அகில உலக காற்பந்து சம்மேளமான Fifa எடுத்துள்ள சர்ச்சைக்குரிய முடிவில் ஊழல் பின்னணியில் உள்ளது என புதிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்டுள்ளன.
அதாவது இம்முடிவின் பின்னணியில் Fifa அதிகாரிகளுக்கு 3 மில்லியன் யூரோக்கள் லஞ்சம் வழங்கப் பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சன்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகத் தமக்கு மில்லியன் கணக்கான இரகசிய ஆவணங்கள், மின்னஞ்சல்கள், கடிதங்கள் மற்றும் வங்கி கூற்றுக்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் இச்சான்றுகள் கட்டார் காற்பந்து அமைப்பின் உரிமையாளர் மொஹமெட் பின் ஹம்மாம் $5 மில்லியன் டாலர் (3 மில்லியன் யூரோ) பெறுமதியான இலஞ்சத்தினை Fifa அதிகாரிகளுக்கு வழங்கியதற்கான ஆதாரங்கள் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை பின் ஹம்மாம் கடுமையாக மறுத்துள்ளார்.
குறித்த சான்று ஆவணங்களில் பின் ஹம்மாம் எவ்வாறு தனது ஊழல் பணத்தை காற்பந்து அதிகாரிகளுக்கு ஆப்பிரிக்காவில் வைத்து நேரடியாக செலுத்தினார் என்றும் அதன் மூலம் அவர்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார் என்பதும் கூட விளக்கப் பட்டுள்ளது. இதேவேளை கட்டார் அரசோ இந்த ஊழல் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ளதுடன் பின் ஹம்மாம் 2022 ஆம் ஆண்டு மும்மொழிவுக்கு எந்த விதத்திலும் அதிகாரப் பூர்வ பங்களிப்பை அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்த மறு வாக்கெடுப்பை நடத்துவதற்கான அழுத்தத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இதை விட Fifa இன் பிரதான விசாரணையாளர் மைக்கேல் கார்சியா ஏற்கனவே இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து விட்டார் என்பதுடன் இதற்கான திங்கட்கிழமை ஓமானில் 2022 ஆம் ஆண்டிற்கான கட்டார் ஒழுங்கமைப்புக் குழுவின் மூத்த அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார் என்று முன்னர் அறிவிக்கப் பட்டது. எனினும் சன்டே டைம்ஸ் பத்திரிகையில் இக்குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளதால் இச்சந்திப்பு பிற்போடப் படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Responses to 2022 உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி உரிமை கட்டாருக்கு வழங்கப்பட்டதன் பின்னணியில் மாபெரும் ஊழல்?