தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அனுமதி வழங்கியதை கண்டித்து, பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதற்கு முடிவெடுத்திருப்பதாகவும், எதிர்வரும் ஜூன் 4ம் திகதி இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்து வந்தது தேமுதிக. எனினும் பாஜககூட்டணியால் மூன்று தொகுதிகளில் மாத்திரமே வெல்ல முடிந்தன.
அதிக இடங்களைப் பிடிக்க முடியாவிட்டாலும், விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்து வரவேற்பை பெற்றது. டெல்லியில் பாஜக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விஜயகாந்த் தனது மனைவி, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மோடியின் பதவியேற்கு விழாவுக்கும் விஜயகாந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு டெல்லி சென்றார். எனினும் முன் வரிசையில் இடம் ஒதுக்கவில்லை. முறையாக அழைக்கவில்லை எனும் காரணங்களால் பதவியேற்பு விழாவை புறக்கணித்துவிட்டு டெல்லி ஹோட்டல் அறையிலேயே விஜயகாந்த் தங்கிவிட்டார்.
விஜயகாந்த்தை சமரசப்படுத்த பாஜக மூத்த தலைவர்கள் எவரும் முன்வரவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்க நேரம் ஒதுக்கும் படி கேட்டார். அதற்கும் நேரம் கிடைக்கவில்லை. இதனால் ஏற்கனவே விஜயகாந்த் அதிருப்தியில் இருந்ததாகவும் இந்நிலையில் தமிழக முதல்வர், மோடியைச் சந்திக்க நேரம் கேட்டதும் உடனடியாக மோடி நேரம் ஒதுக்கிக் கொடுத்ததைக் கண்டித்து பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜூன்4ம் திகதி தேமுதிக செயற்குழு கூட்டத்தின் போது இது தொடர்பில் இறுதிக் கட்ட முடிவு எடுக்கப்படும் என பேசப்படுகிறது.
இதேவேளை விஜயகாந்த் நேற்று, மோடிக்கு எழுதிய கடிதத்தில் தமிழக அரசின் திட்டங்களை கண்காணித்து வழிநடத்த மத்திய, மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகளைக் கொண்டு கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Responses to பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுகிறதா? : ஜூன் 4ம் திகதி முடிவு