தமிழீழ விடுதலைப் புலிகளை கூண்டோடு அழித்துவிட்டோம் என்கிற கோசத்தோடும், அகங்காரத்தோடும் ஆட்சியைத் தக்கவைக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு உள்நாட்டில் புலிகள் கிடையாது. எனவே, வெளிநாட்டு புலிகள் என்ற பூச்சாண்டியை அரசாங்கம் முன்வைக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் சம்மாந்துறையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நாட்டிலிருந்த விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம். இருந்தாலும் வெளியே இருக்கின்ற புலிகளினால் நாட்டிற்கு ஆபத்து. எனவே, நாட்டை பாதுகாப்பதற்கு மீண்டும் ஒருமுறை இந்த அரசாங்கத்தினை தவிர வேறுவழியில்லை என தெற்கிலே இருக்கின்ற சிங்கள மக்கள் மத்தியில் உணர்வுகளை தூண்டுகின்ற காலம் இதுவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எந்தத் தேர்தல் வந்தாலும் முஸ்லிம் காங்கிரஸை எப்படி மடக்குவது என்கின்ற வியூகங்கள் பல்வேறு தரப்பினர்களினால் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால், அந்த வியூகம் குறித்த சரியான உடன்பாடு இல்லாமல் யாரோடும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுவைத்துக் கொள்ளாது என்று ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to வெளிநாட்டுப் புலி பூச்சாண்டி காட்டி ஆட்சியைத் தக்க வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது: ரவூப் ஹக்கீம்