Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாத்தளம் முதல் சாலை வரையிலான கடற்பரப்பில் இராணுவத்தின் ஆதரவோடு அரச ஆதரவு பெற்றவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால், வடக்கின் கடல் வளம் சூறையாடப்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியக்கலாநிதி சி.சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டி இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மாத்தளன் முதல் சாலை கடற்கரை அடங்கிய பிரதேசத்தில் இராணுவத்தின் ஆதரவுடன் அரச சார்பு முதலாளிகள் கடலட்டை பிடிக்கும் கடல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி பிரதேசத்திற்கு தமிழ் மக்கள் செல்ல முடியாதபடி இராணுவ தடை முகாம் இடப்பட்டுள்ளது. இவர்கள் இரவு நேரங்களில் ஒளியூட்டி ஒட்சிசன் சிலிண்டர்களின் உதவியுடன் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லை மாவட்ட கரையோர மீனவர்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர்.

இரவில் ஒளியூட்டி கடலட்டை தொழிலில் ஈடுபடுபவர்களால் மீன்கள் ஆள்கடலை தாண்டி கரையோரம் வருவதில்லை எனவும், இதனால் தமது நாளாந்த மீன்பிடி தொழில் பத்து மடங்கு குறைவடைந்து 30 கிலோவில் இருந்து 3 கிலோ வரை குறைந்து விட்டதாக மக்கள் அங்கலாய்கின்றனர்.

மேலும் கடலட்டை அள்ளும் கூட்டம் சங்குகளையும் அள்ளிவருவதால் ஆள்கடலில் இருந்து சங்குகளில் இருக்கும் கடலின தாவர வகைகளை உண்ண வரும் மீனினம் கரை வருவதில்லை. இதனாலும், தமது மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

கடலட்டை அள்ளுவது சட்டவிரோதம் என்பது நாம் அறிந்ததே, இதற்குரிய அனுமதி பத்திரம் கடலட்டை அள்ளுபவர்களிடம் உள்ளதா? நாம் அறியோம். அப்படி அனுமதி பத்திரம் வழங்குவதாயினும் எமது வன்னி பிரதேச மீனவர்களுக்கல்லவா அந்த உரிமை உள்ளது. போரால் நொந்து நூலாகியிருக்கும் அவர்களை சுரண்டி வாழ்வதில் இந்த அரசியல் திமிங்கிலங்களிற்கு எவ்வளவு சந்தோசம்” என்றுள்ளது.

0 Responses to இராணுவத்தின் ஆதரவோடு அரசியல் திமிங்கலங்கள் வடக்கின் கடல் வளத்தை சூறையாடுகின்றன: சி.சிவமோகன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com