Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லிணக்க அரசாங்கம் 2016ஆம் ஆண்டுக்காக இரண்டு வரவு- செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முன்வைத்த வரவு- செலவுத்திட்டத்திற்கும், அதற்கு முன்னர் நிதியமைச்சர் முன்வைத்த வரவு-செலவுத்திட்டத்திற்கும் இடையில் பரஸ்பர வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இதில் எதனை ஏற்றுக்கொள்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பொதுநிர்வாக அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “பிரதமர், நிதியமைச்சர் ஆகியோர் இருவேறு வரவு- செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் வெளிநாடு சென்றிருக்கும் ஜனாதிபதி நாடு திரும்பியதும், மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வரவு- செலவுத் திட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவரவிருப்பதாகத் தெரியவருகிறது. இவ்வாறானதொரு நிலையில் எதனை ஏற்றுக்கொள்வது என்பதை அரசாங்கமே தெளிவுபடுத்த வேண்டும்.” என்றார்.

இதன்போது குறுக்கிட்டு பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் “லக்ஷ்மன் கிரியல்ல, வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் போது திருத்தங்களை மேற்கொள்ள முடியும். வரவு- செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை மாற்றுவதற்கு குழுநிலையில் அவகாசம் உள்ளது.” என்றார்.

இதன் பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க, “பிரதமர் யோசனைகளை முன்வைத்திருப்பதைப் போன்று, தாமும் முன்வைத்த யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா?” எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சபை முதல்வர், “வரவு- செலவுத் திட்ட விவாத இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகள் எவை என்பதை நிதியமைச்சர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பார்.” என்றார்.

இந்த குறுக்கீடுகளைத் தொடர்ந்து உரையைற்றிய விஜித ஹேரத், “அப்படியாயின் பிரதமர் அறிவித்த விடயங்கள் வெறும் யோசனைகளே. இவை நடைமுறைப்படுத்தப்படுமா என்பது இன்னமும் முடிவாக அறிவிக்கப்படவில்லை. எனவே, சம்பள உயர்வு உட்பட பிரதமர் முன்மொழிந்திருக்கும் யோசனைகள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை அரசாங்க ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to நல்லிணக்க அரசாங்கம் 2016க்காக இரு வரவு- செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளது: விஜித ஹேரத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com