Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து 700 ஏக்கர் காணி இன்று சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொது மக்களிடம் மீளவும் கையளிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச சபைப் பிரிவுகளில் மேற்படி 700 ஏக்கர் காணிகளை மக்களுக்குக் கையளிப்பதுடன், அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65,000 வீடுகளுக்கான காணிகளையும் பார்வையிடவுள்ளார். 12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 620 குடும்பங்களுக்கு இன்றைய தினம் ஜனாதிபதியினால் காணிகள் மீள கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன், உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பிரபல பாடசாலைகளான நடேஸ்வரா கல்லூரி மற்றும் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவனவும் மீளவும் கல்வி நடவடிக்கைகளுக்காக பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

யாழ். மாவட்டத்தில் அரசாங்கம் 65,000 வீடுகளை நிர்மாணிப்பதற்குத் திட்டமிட்டு, அதன் மாதிரி வீடொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அதனையும் ஜனாதிபதி இன்று பார்வையிடுவார். அப்பிரதேசத்தின் கால சூழ்நிலைக்கேற்றவாறு அவ்வீடுகள் அமைய வேண்டுமென்பது மக்களின் வேண்டுகோள் என்பதால் மாதிரி வீடொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பிரதேச சபையில் இன்று இறுதியாக 200 ஏக்கர் காணிகள் மக்களுக்குக் கையளிக்கப்படுவதோடு அங்கு உயர் பாதுகாப்பு வலயம் முடிவுக்கு வருகிறது. வடக்குக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அரசாங்கத்தினால் அங்கு நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிடவுள்ளதுடன் வடக்கு மாகாண முதலமைச்சர், மாகாண ஆளுநர் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகளுடனும் கலந்துரையாடவுள்ளார்.

0 Responses to மைத்திரி யாழ் விஜயம்; வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com