Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இராணுவத் தளபதியாக கடமையாற்றிய சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் ஆழமாவை என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“சரத் பொன்சேகா தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஆரம்பம் மட்டுமே. எதிர்காலத்தில் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்று நினைக்கின்றேன். இது ஒரு சிறு கதை அல்ல, ஒரு தொடர்கதை. இதையே நாங்கள் சொன்னால் இட்டுக்கட்டிய புனைகதை. அதையே அவர் சொல்லும்போது அது உண்மைகளை புட்டுப் புட்டு வைக்கும் வாக்குமூலம் என்பதை உலகம் புரிந்துகொள்ளும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “எங்களது பத்து வருட போராட்ட பணிகளின் காரணமாக மஹிந்த அரசு வீழ்ச்சியடையும் சூழல் உருவான பின் பலர் எங்களோடு இணைந்து இந்த அரசின் உருவாக்கத்துக்கு ஒத்துழைத்தார்கள். இன்னமும் சிலர் மஹிந்தவுடன் இருந்துவிட்டு நாங்கள் இந்த அரசை உருவாக்கிய பின் எங்களுடன் வந்து இணைந்துக்கொண்டார்கள்.

இன்னும் சிலர் இன்னமும் மஹிந்தவுடன் குடித்தனம் செய்கிறார்கள். இவர்களை மக்கள் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும். இந்த அரசை உருவாக்கிய முதல் ஐந்து பேரில் நானும் ஒருவன். நாங்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் பட்டபாட்டின் பிரதிபலன்தான் இந்த அரசாங்கம்.

இன்று இந்த அரசை உருவாக்கி, மஹிந்த கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பியதில் மாத்திரம் நின்று விடாமல் யுத்தம் நடத்திய இராணுவ தளபதியின் வாயின் மூலமாகவே உண்மைகளை எங்கள் அரசு வெளியே கொண்டு வருகிறது. யுத்தத்தை தலைமை தாங்கி நடத்தியதில் தனக்கு உள்ள நியாயமான பெருமையை கோரும் அவர், அந்த யுத்தத்தின் போது தனது கட்டுப்பாட்டையும், அதிகாரத்தையும் மீறி நடந்த மானிட உரிமை மீறல்களையும், அதனால் முழு நாட்டுக்கும், முழு இராணுவத்துக்கும் ஏற்பட்டுள்ள அபகீர்த்தியையும் பற்றி மனந்திறந்து சொல்லுகிறார். உலகம் கேட்க தொடங்கியுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to பொன்சேகாவின் கருத்துக்கள் ஆழமானவை; எதிர்காலத்தில் இன்னும் உண்மைகள் வெளிவரும்: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com