Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது.

அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதி மூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஆவணி 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவு நாளாக நினைவுகூரப்படுகிறது.

முன்பு, பண்டார வன்னியனின் நினைவு நாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு).

அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஆவணி 25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.

ஆவணி 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு?

அந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை.

பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.

வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஆவணி 25.

பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.

வன்னியில் பண்டார வன்னியன் நினைவுச் சின்னம் உடைப்பு.

வன்னியில் பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம் சிங்கள காடையர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

வன்னியிலும், யாழ் குடாநாட்டிலும் தமிழ் மக்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், வரலாற்றுப் பெறுமதி மிக்க அமைவிடங்கள் அடையாளங்கள் என்பன திட்டமிட்ட வகையில் இப்போது அழிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் பரவலாக வெளியாகியுள்ளமை தெரிந்ததே.

இந்தப் பிரதேசங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையிலேயே இவ்வாறாக தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவது பறறிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வன்னியில் முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடுவில் பண்டார வன்னியனுக்கு ஆங்கிலேயரினால் அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லும் இவ்வாறே உடைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டைகள் நடைபெற்ற வேளையில்கூட இந்த நினைவுச்சின்னத்திற்குப் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு மீள்குடியமரச் சென்றதன் பின்னரும் அந்த நினைவுக் கல் எவ்விதமான பாதிப்பும் இன்றி இருந்துள்ளது.

ஆனால் நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறுவதற்கு ஒருவாரம் வரையில் இருந்த போது, இந்த நினைவுக் கல் உடைக்கப்பட்டுள்ளது. இது விஷமிகள் சிலரின் கீழ்த்தரமான வேலையாகவே கருதப்படுகின்றது.

இந்த நினைவுக் கல் உடைந்து கிடக்கும் இடத்திற்கு அருகில் உடைந்த மண்டபம் ஒன்றும், பொதுநோக்கு மண்டபம் ஒன்றும் இருக்கின்றன.

விளையாட்டு மைதானமும் இருக்கின்றது. இந்த விளையாட்டு மைதானத்தை ஊர் இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். எனினும் உடைந்து கிடக்கின்ற வரலாற்றுச் சின்னமாகிய பண்டார வன்னியனின் நினைவுக்கல் கவனிப்பாரற்று கிடக்கின்றது.

இதனைப் பராமரிப்பதற்கு எவருமே இன்னும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பண்டார வன்னியனுக்கும் ஆவணி 25கும் என்ன தொடர்பு?

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com